
சேவை - 02
தான்ஸானியா, கிழக்கு ஆப்பிரிக்க நாடு. முன்னேற்றத்தின் சுவடுகளை அதிகமறியாத மூன்றாம் உலக நாடுகளில் ஒன்று. மக்கள்தொகை சுமார் 55 மில்லியன். பெரும்பாலானவர்களின் ஒரு நாள் வருமானம், ஓர் அமெரிக்க டாலரின் மதிப்புக்கும் குறைவு. கல்வி, சுகாதாரம், மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் அந்த தேசத்தின் வளர்ச்சி வெகுதூரத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் 300 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது விகிதாசாரம். அதுவே தான்ஸானியாவில் 40,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதே நிலைமை.

மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப்போல மலேரியா, காசநோய், எய்ட்ஸ் போன்றவற்றின் பாதிப்பு தான்ஸானியாவிலும் அதிகம். அதேபோல அதிகம் கவனிக்கப்படாத அல்லது வெளியே தெரியாத இன்னொரு பிரச்னை, இதயநோய். பல குழந்தைகள் இதய நோய் இருக்கிறதென்றே கண்டறியப்படாமல் இறந்து போகிறார்கள்; கண்டறியப்பட்ட பல குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை அல்லது மருத்துவர் இல்லை என்பதே 2008-ம் ஆண்டு வரையிலான நிலைமை.

2008-ம் ஆண்டில்தான் தான்ஸானியாவின் குழந்தைகளுக்கான முதல் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் உருவானார். டாக்டர் காட்வின் காட்ஃப்ரே. தான்ஸானியா மண்ணின் மைந்தர். கிளிமாஞ்சாரோ மலையடிவாரத்தில் அமைந்த சிறிய ஊரான மோஷியில் அவரின் பால்யம் கழிந்தது. தந்தை காட்ஃப்ரேவும் ஒரு மருத்துவர்தான். தந்தையைப்போலவே மகனும் மருத்துவராக ஆசைப்பட்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.
காட்வினுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஆக வேண்டும் என்று ஆசை. `தான்ஸானியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களே இல்லாதபோது, ஏன் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது’ என்று நினைத்தார். அப்போது பிரிட்டனில் பயிற்சி பெற்ற தான்ஸானிய மருத்துவர் ஒருவர், தன் நாட்டுக்குத் திரும்பி வந்தார். இதய நோய் நிபுணரான அவர், தான்ஸானியாவில் இதய நோய்க்கான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். தன் குழுவில் டாக்டர் காட்வினையும் அவர் இணைத்துக்கொண்டார்.
அப்போதுதான் காட்வினுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரின் தேவை என்பது தான்ஸானியாவில் அதிகம் இல்லை. ஆனால், ஏகப்பட்ட பேருக்கு இதய நோய்கள் இருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகள் பலரும் இதய நோயால் அவதிப்படுகின்றனர். அவர்களில் பலருக்கும் இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை வெளிநாட்டுக்குத்தான் சிகிச்சைக்கு அனுப்ப முடியும். அதற்கான வாய்ப்புள்ள குழந்தைகள் மிக மிகக் குறைவே. தான்ஸானியாவில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்கூட கிடையாது. ஆகவே, அந்தத் துறையில் பயிற்சி பெற முடிவெடுத்தார் காட்வின்.
அவருடன் பணிபுரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் ஒருவர், ‘சேவ் எ சைல்டு’ஸ் ஹார்ட்’ (Save A Child’s Heart -SACH) என்ற தன்னார்வ அமைப்பை அறிமுகப்படுத்தினார். அந்த அமைப்பு இஸ்ரேலைச் சேர்ந்தது. குழந்தைகளின் இதய நோய்க்கு இலவசமாகச் சிகிச்சையளிக்கும் தொண்டு அமைப்பு. 1996-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இனம், மதம், நிறம், வசதி போன்ற பாகுபாடுகள் இன்றி, எல்லா குழந்தைகளுக்கும் இதய நோயைத் தீர்ப்பதே இந்த அமைப்பின் நோக்கம். அதற்காக, பல நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறது. SACH-ன் மருத்துவக் குழு, பல நாடுகளுக்கும் சென்று, குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவருகிறது.

காட்வின், SACH அமைப்பில் பயிற்சியில் சேருவதற்காக விண்ணப்பம் செய்தார். அந்த அமைப்பிலிருந்து மருத்துவர் குழு ஒன்று தான்ஸானியாவுக்கு வந்து, ‘பயிற்சியளிக்க ஏதுவாக அங்கே சூழல் இருக்கிறதா’ என்று ஆய்வு செய்தது. அதற்குப் பின் டாக்டர் காட்வினுக்கு, இஸ்ரேலில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இஸ்ரேலில் டெல் அவிவ் நகரத்தில் அமைந்த SACH-ன் எடித் வுல்ஸன் மெடிக்கல் சென்டரில் இரண்டு வருடங்கள் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டார்.
2008-ம் ஆண்டில் டாக்டர் காட்வின் தான்ஸானியாவுக்குத் திரும்பினார். அவருடன் மருத்துவக்குழு ஒன்றும் உதவிக்கு வந்தது. காட்வின், தான்ஸானியாவில் தனது முதல் அறுவை சிகிச்சையை அந்தக் குழுவின் துணையுடன் வெற்றிகரமாகச் செய்தார். அந்தக் குழந்தை இதய நோயிலிருந்து விடுபட்டு, புன்னகை செய்தது. அடுத்தடுத்து குழந்தைகள் இதயத்தைக் கையில் பிடித்தபடி காத்திருந்தன. வாரத்தில் ஆறு முதல் 10 குழந்தைகளுக்காவது அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை.

காட்வின் தன்னைக் கடவுளாகவெல்லாம் நினைத்துக்கொள்ளவில்லை. தன்னால் இயன்ற அளவுக்குக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு சேவையைத் தொடர்கிறார். ஏனென்றால், தான்ஸானியாவில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் கிடையாது. மருத்துவமனையில் ஒரு படுக்கையை இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பகிர வேண்டிய நிலை. அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும்போதே மின்சாரம் தடைப்படும். ஜெனரேட்டர் வசதி இருந்தாலும், அதை முடுக்கிவிட்டு மின்சாரம் திரும்பிவர நேரமெடுக்கும். மின்தடையால் அறுவை சிகிச்சையின்போது உயிர் காக்கும் கருவிகள் செயல் இழந்துவிட, குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஆம், மின்தடையினால், உயிர் காக்கும் கருவிகள் செயலிழந்துவிட, ஒரே வாரத்தில் ஏழு குழந்தைகள்கூட அங்கே இறந்திருக்கின்றன. ஒன்பது மாதங்கள் ஒரு தாய் கஷ்டப்பட்டு சுமந்து பெற்ற குழந்தை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர் வாழவேண்டிய குழந்தை, எதிர்பாராத மின்தடையால் இறந்து போனால்? காட்வினை அதிகம் வருத்தம் கொள்ளச் செய்யும் விஷயம் இதுதான். தன்னால் முடிந்தவரை உயிர் காக்கும் கருவிகளை பேட்டரிகளுடன் இணைத்து இயங்கச் செய்கிறார். அப்படியே எண்ணற்ற குழந்தைகளின் இதயங்களையும்.
நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரே ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்றால் சிரமமல்லவா? தவிர, சரியான மருத்துவக்குழு இல்லாவிட்டால், காட்வினால் வெற்றிகரமாக இயங்கவும் முடியாது. அதனால் SACH உதவியுடன் தன்னுடன் சேர்ந்து இயங்கப் பயிற்சி பெற்ற மருத்துவக் குழு ஒன்றையும் வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார்.
“நான் இஸ்ரேலில் இருந்த முதல் ஆறு மாத காலத்தில், ஒரு குழந்தைகூட சிகிச்சை பலனின்றி இறந்தது கிடையாது. ஆனால், இங்கே தான்ஸானியாவில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பது சகஜம். இதற்கெல்லாம் தீர்வாக யாருமே எதுவுமே செய்யாவிட்டால் எப்படி? யாராவது ஏதாவது செய்ய வேண்டுமல்லவா. அதை நான் செய்துகொண்டிருக்கிறேன். ஆம், நாங்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் காட்வின்.
தான்ஸானியா மட்டுமல்லாமல் கென்யா, உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் இலவசமாக இதய நோய் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்துகொண்டிருக்கிறார் காட்வின். அந்தக் குழந்தைகளில் பெரும்பாலோனோர் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாதவர்கள் என்பது முக்கியமானது.
ஆம், அந்தக் குழந்தைகளின் இதயமாக டாக்டர் காட்வின் வாழ்கிறார்.
சேவை தொடரும்...
- ஓவியம்: பாலன்