ஹெல்த்
Published:Updated:

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

விவேக், கல்லீரல் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

சுவாசிக்க நுரையீரல், சிந்திக்க மூளை என நம் உடலில் ஒவ்வோர் உறுப்பும் தன் வேலையைத் திறம்படச் செய்கிறது. சில உறுப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்கின்றன. ஆனால், ஓர் உறுப்பு மட்டும் கிட்டத்தட்ட ஐந்நூற்றுக்கும்  மேற்பட்ட வேலைகளைச் செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, செரிமானத்துக்குத் தேவையான பித்தநீரைச் சுரக்கச் செய்கிறது; ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது; ரத்தம் உறைவதற்குத் தேவையான திரவத்தை சுரக்கச் செய்கிறது; உடலுக்குத் தேவையான எனர்ஜியை உற்பத்தி செய்கிறது என ஏராளமான வேலைகளைச் சீராகச் செய்யும் ஒரு முக்கிய உறுப்பு கல்லீரல். உடலில் வேறெந்த உறுப்பும் இத்தனை வேலைகளைச் செய்வதில்லை. 

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

உடலில் ஓடும் ஒட்டுமொத்த ரத்தத்தில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் கல்லீரல் வழியாகவே செல்கிறது. அப்படிச் செல்லும் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அகற்றும் வேலையையும் இது செய்கிறது. தேவையானவற்றை உற்பத்தி செய்வது, தேவையற்ற விஷயங்களை வெளியேற்றுவது, பாதுகாக்கவேண்டிய விஷயங்களைப் பாதுகாப்பது என ஒரு தொழிற்சாலையைப்போலச் செயல்படுகிறது கல்லீரல்.

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!



``கல்லீரலை நம் உடலின் மந்திர உறுப்பு என்றே சொல்லலாம்.  நகம், முடியை வெட்டினால் மீண்டும் வளர்வதுபோல கல்லீரலை வெட்டினாலும் அது மீண்டும் வளரக்கூடியது’’ என்கிறார் கல்லீரல் சிறப்பு மருத்துவர் விவேக்.
மகத்துவம் பல நிறைந்த கல்லீரலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், அவற்றிலிருந்து கல்லீரலைப் பாதுகாப்பது எப்படி என்பதையும் அவர் விளக்குகிறார்.

``நம் உடலில் மற்ற உள் உறுப்புகள் லேசாக பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்புகள், அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். ஆனால், கல்லீரல் அப்படி அல்ல. கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பிறகே அதன் அறிகுறிகள் வெளியே தெரியவரும். கல்லீரல் தனித்தன்மை வாய்ந்த ஓர் உறுப்பு. அது, தான் இழந்த திசுக்களைத் தானே மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. உதாரணமாக, மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் சுருக்கம் ஏற்படும்பட்சத்தில், அந்தப் பழக்கத்தைக் கைவிட்டால் அது தன் பழையநிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதேபோல, கல்லீரலின் குறிப்பிட்ட பகுதி பாதிக்கப்படும் சூழலில் அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலும், மூன்றே மாதங்களில் அந்தப் பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.

கல்லீரல் பாதிப்படைய பல்வேறு வகையான காரணிகள் இருக்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் பாதிக்க மது அருந்துவதுதான் முதன்மைக் காரணியாக இருக்கிறது. அதிகமாக மது அருந்தினால் கல்லீரல் சுருக்கம் உண்டாகும்.  `ஹெபடைட்டிஸ்’ வைரஸ் பாதித்து, அதனால் கல்லீரல் அழற்சி நோய் உண்டாகும். இந்தியாவில் 40 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆண்டுதோறும் 70 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் இருக்கின்றன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ போன்ற வைரஸ்கள், உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகின்றன. 

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

இந்த வைரஸ்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ். இதனால் கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம். இந்த வைரஸ்கள் தாயின் மூலம் கருவிலிருக்கும் குழந்தைக்கு மிக எளிதாகப் பரவும். ரத்தம் மூலமாகவும், ஒருவர் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் பயன்படுத்துவதன் மூலமாகவும், முறையற்ற, பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாலும் இந்த வைரஸ் பரவும். மற்ற வைரஸ் கிருமிகளைவிட மிகவும் ஆபத்தானது இது. ஒருமுறை உடலுக்குள் புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவது கடினம்.

அடுத்ததாக, கொழுப்பு சார்ந்த ஈரல் பாதிப்புகள். அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது, அதற்கேற்ப உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, தினசரி உடற்பயிற்சிகள் செய்யாமல் உடலில் அதிகளவில் கொழுப்பு தேங்குவது போன்ற காரணங்களாலும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகின்றன. உடல் பருமன் பாதிப்புள்ளவர்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேருக்கு கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர மரபணுரீதியாகவும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகின்றன.

மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிறு வீக்கம், ரத்த வாந்தி, மூளைக் குழப்பம் போன்றவை கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள். சில நேரங்களில் `ஹெபடோபல்மனரி சிண்ட்ரோம்’ (Hepatopulmonary Syndrome) எனப்படும் நுரையீரல் பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளும்கூட கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். 

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

இதற்கான சிகிச்சைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தும் முறை. மற்றொன்று, அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் பொருத்தும் முறை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் இரண்டு முறைகளில் செய்யப்படுகின்றன. ஒன்று, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கல்லீரலை அப்படியே எடுத்துப் பொருத்தும் முறை. ஆனால், கல்லீரல் அதிகமாக தானமாகக் கிடைப்பதில்லை என்பதால் உறவினரின் கல்லீரலில் ஒரு பகுதியை வெட்டிப் பொருத்தும் (Living Donor Liver Transplantation) அறுவை சிகிச்சைதான் பெருமளவில் செய்யப்படுகிறது.

இந்த வகையில் தானம் கொடுப்பவர் உறவினராக இருக்க வேண்டும்; 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஒரே ரத்த வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்; சர்க்கரைநோய் பாதிப்பு, ரத்த அழுத்த பாதிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். தானம் கொடுத்தவர், பெற்றவர் இருவருக்குமே மூன்றே மாதங்களுக்குள் கல்லீரல் மீண்டும் வளர்ந்துவிடும். அதனால் அச்சப்படத் தேவையில்லை.

கல்லீரலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

``கல்லீரலைப் பாதுகாக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் முதல் வழிமுறை. கடந்த 15 வருடங்களுக்குள் பிறந்த குழந்தைகளுக்கு அரசாங்க மருத்துவமனைகளிலேயே இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது. அதற்கு முன்பாகப் பிறந்தவர்கள் மருத்துவர்களிடம் பரிசோதித்து ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பரவாமல் தடுக்க, ஒருவர் பயன்படுத்திய பிளேடு,  ஊசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சலூன் கடைக்குச் சென்றாலும், மருத்துவமனைக்குச் சென்றாலும் புதிய பிளேடுதான் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற, முறையற்ற உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். உடல் பருமனை உண்டாக்கும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அதிக சாதம், எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, சுகாதாரமான உணவுகளைச் சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சிகள் செய்வது போன்ற பழக்கங்கள் மூலமாகக் கல்லீரலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 70 சதவிகிதம் பேர் ஏற்கெனவே கல்லீரல் பழுதடைந்தவர்களாக இருக்கிறார்கள். 

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

30 சதவிகிதம் பேருக்கு ஏற்கெனவே கல்லீரல்  பாதிப்புகள் இல்லாமலேயே புற்றுநோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்யவேண்டியது அவசியம். எனவே, மிக விரைவாகக் கண்டறிந்தால் நோயைக் குணப்படுத்திவிடலாம். பொதுவாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் கடைசி கட்டத்தில்தான் வருகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை. காரணம், மற்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதன் வலி போன்ற அறிகுறிகள் தெரிந்துவிடும். ஆனால், கல்லீரலில் 50 சதவிகிதம் பேருக்கு பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும். அதனால் ஆரம்பத்திலேயே கல்லீரல் செயல்பாட்டுச் சோதனை (Liver Function Test) செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சைதான் சிறந்தது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அல்லது அதன் சிறு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை வழங்கலாம். இந்த முறையில் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம், குணப்படுத்த முடியாது.

கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள்காமாலை ஏற்பட்டால், பலர் நாட்டு மருந்து சாப்பிடுகிறார்கள். பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாவதை அது தடுத்துவிடும். மஞ்சள்காமாலை என்பது நோய் பாதித்ததற்கான அறிகுறிதான். நோய் அறிகுறிக்கெல்லாம் சிகிச்சை எடுக்கக் கூடாது. நோய்க்குத்தான் சிகிச்சை எடுக்க வேண்டும். அதனால், நாட்டு மருந்துகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.  மஞ்சள்காமாலை பாதித்ததும், மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் விவேக்.

உலகளவில் மனித இறப்புக்கான முதன்மையான பத்து காரணங்களில் மூன்றாவது காரணமாக கல்லீரல் பாதிப்புகள் இருக்கின்றன. கல்லீரல் பாதிக்கப்பட்டால், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் சேர்ந்து பாதிக்கப்படும். அதனால், கல்லீரல் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்போம். ஆயுள் காப்போம்!

- இரா. செந்தில்குமார்

டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் கவனம்!

மிழ்நாட்டில், டயாலிசிஸ் செய்துகொள்ளும் பெரும்பாலானோர் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த மாதம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் யூனிட்டில் மட்டும் டயாலிசிஸ் செய்துகொண்ட அனைவருக்குமே ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. காரணம், ஒருவருக்கு டயாலிசிஸ் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ட்யூப், ஃபில்டர் செட் போன்றவற்றை மற்றவர்களுக்குப் பயன்படுத்தியதால் ரத்தத்தின் மூலம் பரவியிருக்கிறது. எனவே, டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

கல்லீரல் காக்கும் உணவுமுறை

`` கா
லை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உடல் பருமனால் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். அதனால் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. முட்டையின் வெள்ளைக்கரு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. அதனால், தினமும் ஒரு வெள்ளைக்கரு சாப்பிடலாம். ஃபாஸ்ட் ஃபுட் , எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூல்டிரிங்ஸ், ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் தண்ணீர் வழியாகத்தான் பரவும். அதனால் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரைச் சூடுபடுத்திக் குடிப்பது நல்லது. ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்களைச் சாப்பிடுவது கல்லீரலுக்கு நல்லது. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் திராட்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும். லெமன் சாதம், புளி சாதம் என  அடிக்கடி வெரைட்டி ரைஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. உப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமாக ஊறுகாய்  சாப்பிடக் கூடாது.’’

- பேராசிரியர் வெங்கடேஷ்வரன், இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் 

டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!
டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!
டாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்!

அடுத்த இதழ் முதல் டாக்டர் விகடன் விலை 20  (ஆன்லைன் இதழ்) என உயர்த்துவதைத் தவிர்க்க இயலாமல் உள்ளது. என்றும் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.