மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

சேவை - 3

ஒரு ஹீரோ என்பவர் யார்?

போ
ர் வீரராக இருக்கலாம். விளையாட்டில் சாம்பியனாக இருக்கலாம். அறிஞராக, தலைவராக, அரசியல்வாதியாக, அமைதியின் தூதுவராக, ஆசிரியராக, ஓவியராக, சிற்பியாக, மாலுமியாக... இப்படி எந்தத் துறை சார்ந்தவராகவும் இருக்கலாம். பேட்ச் ஆடம்ஸ் (Patch Adams) போல, பார்த்தாலே ‘களுக்’கெனச் சிரிக்கத் தோன்றும் கோமாளி உடையணிந்த மனிதராகவும்  இருக்கலாம். அந்தக் கோமாளியே ஒரு மருத்துவராகவும் இருக்கலாம்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

ஆடம்ஸ், 1945-ம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டனில் பிறந்தவர். தந்தை ராபர்ட், ராணுவ வீரர் என்பதால் குடும்பத்தினருக்கும் மிலிட்டரி கட்டுப்பாடுகள் இருந்தன. ஆகவே ஆடம்ஸுக்குத் தந்தை என்றாலே ஆகாது. தாய் அன்னா என்றால் உயிர். ராபர்ட்டுக்கு சிரிக்கக்கூடத் தெரியாது. ஆனால், அன்னா தன் மகன் ஆடம்ஸுக்குப் புன்னகையின் அருமையை உணர்த்தினார். சிறு வயதிலேயே தன் வகுப்பில் கோமாளி வேடமிட்டு சக மாணவர்களைச் சிரிக்கவைப்பதை ஆடம்ஸ் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

ஒரு விடுமுறை தினத்தில் ராபர்ட் மது அருந்தியபடியே ஆடம்ஸுடன் உட்கார்ந்து போர்க்களக் கதைகளைப் பேசினார். தன் உயிர் காத்த நண்பர் ஒருவரின் கதையையும் சொன்னார். அதுவரை தந்தை அப்படி மனம்விட்டுப் பேசியதில்லை. அப்போது ஆடம்ஸுக்குத் தந்தையையும் பிடித்தது. அவர் சொன்ன கதையும் பிடித்தது. அடுத்த சில நாள்களில் ராபர்ட் நெஞ்சுவலியால் இறந்துபோனார். தந்தையிடம் தன்னால் அன்பு செலுத்த முடியவில்லையே என்பது ஆடம்ஸுக்கு வலித்தது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்



தந்தையின் இறப்புக்குப் பிறகு, மேற்கு வர்ஜீனியாவில் உறவினர் ஒருவர் வீட்டுக்குக் குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார்கள். அங்கிருந்த முரட்டு சிறுவர்களின் கேலி, கிண்டல், சித்ரவதைகளால் ஆடம்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டார். கல்லூரிக் காலத்தில் ஆடம்ஸுக்கு டோனா என்ற பெண்ணுடன் முதல் காதல் மலர்ந்தது. குறுகிய காலத்திலேயே அந்தக் காதல் முறிந்தது. தந்தை ஸ்தானத்தில் இருந்த உறவினரும் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தவிர, அல்சர் நோயால் தாங்க முடியாத வயிற்றுவலி வேறு.

மன அழுத்தம் மிகும்போதெல்லாம் ஆடம்ஸ் ஒரு மலை உச்சியில் சென்று அமர்வார். அங்கிருந்து குதித்து வாழ்வை முடித்துக்கொள்ளத் தோன்றும். ஆனால், உயரம் தந்த பயம் அவரைத் தடுத்தது. ஒருநாள் தன் தாயிடம் ஆடம்ஸ். ‘எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. என்னை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். அந்த மனநல மருத்துவமனையில் ஆடம்ஸ் சந்தித்த நோயாளிகள், அவருடைய எதிர்மறை எண்ணங்களை அப்படியே புரட்டிப் போட்டனர். தனிமையில், அடுத்தவர் அன்புக்காக ஏங்கி, ஆடம்ஸ் மீது பாசத்தைப் பொழிந்த ஒரு நோயாளி, அவரின் அகக்கண்களைத் திறந்துவிட்டார். ஆடம்ஸ் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். ‘தூய்மையான அன்பும் சிரிப்பும்தான் சக மனிதர்களைக் குணப்படுத்தும் அருமருந்து! தற்கொலை என்பது முட்டாள்தனம். இந்தச் சமூகத்தில் என்னால் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்’.

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

ஆடம்ஸ், சில வருடப் போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் இணைந்தார். பயிற்சிக் காலத்தில், மருத்துவமனையில் நோயாளிகளைச் சென்று பார்க்கும்போது ஆடம்ஸ், ஒரு கோமாளிபோல நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். அது அவரது பேராசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்கீனம். இது டாக்டரோட லட்சணமே இல்லை’ என்று கடிந்து கொண்டார்கள். ஆனால், ஆடம்ஸ் தெளிவாக ஒரு விஷயத்தை நம்பினார். ‘மருந்துகளால் மட்டும் நோயைக் குணப்படுத்த முடியாது. ஒரு நோயாளியைக் குணமடையச் செய்வதில் சிரிப்புக்கும் பெரும் பங்கு இருக்கிறது’.

ஆனால், ‘சிஸ்டம்’ வேறு மாதிரி அல்லவா இருக்கிறது. ஆடம்ஸ் எங்கே பணிக்குச் சென்றாலும் அந்த சிஸ்டத்தை மாற்ற இயலவில்லை. தவிர, உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் எளிய மனிதர்களுக்கான மருத்துவம் என்பதுகூட அதிகச் செலவுடையதே. இன்ஷூரன்ஸ், அது சார்ந்த நடைமுறைகள் எல்லாம் மருத்துவச் சிகிச்சை பெறுவதையே இடியாப்பச் சிக்கலாகத்தான் வைத்துள்ளன. தவிர, இன்ஷூரன்ஸைவைத்து நடைபெறும் முறைகேடுகளும் அதிகம்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

‘இந்தச் சிக்கல்கள் எதுவும் இல்லாத ஒரு மருத்துவமனையைக் கட்ட வேண்டும்’ என்று கனவு கண்டார் ஆடம்ஸ். அதை நோக்கியே தீவிரமாக இயங்கினார். தன்னைப்போலவே எண்ணம்கொண்டவர்களை உடன் சேர்த்துக் கொண்டார். தன் கனவுக்காக நிதி திரட்டினார். 1971-ம் ஆண்டில் ஆடம்ஸின் கனவு மருத்துவமனையான ‘Gesundheit! Institute’ பிறந்தது. (தும்மல் போட்டால் ‘நலமோடு இருங்கள்’ என்று ஆரோக்கியமாக வாழ்த்தும் ஜெர்மானியச் சொல்தான் ‘Gesundheit!’)

‘Gesundheit!’-ல் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு எல்லாமே இலவசம். இன்ஷூரன்ஸ் என்ற தொல்லைகள் இல்லை. இன, மத வேறுபாடுகள் இன்றி யார் வேண்டுமானாலும் இங்கே வந்து சிகிச்சை பெறலாம். இளநிலை மருத்துவர்கள் முதல் அனுபவம்வாய்ந்த முதுநிலை மருத்துவர்கள்வரை அங்கேயே தங்கி உள்ளன்போடும், உதடுகள் விரிந்த சிரிப்போடும் மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“பொதுவாக மருத்துவமனைகள் மகிழ்ச்சி தருவதாக இல்லை. டாக்டர்கள் மூர்க்கமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், எங்கள் மருத்துவமனை ‘Communal Ecovillage’. அங்கே ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணியாளருக்கும், அறுவை சிகிச்சை நிபுணருக்கும் ஒரே சம்பளம்தான். உலகிலிருக்கும் பெரிய நோய், தனிமையும் மன அழுத்தமும்தான். அதற்கான மருந்தை எந்த மருந்து நிறுவனமும் தயாரிக்க முடியாது. அன்பும் ஆதரவும் அரவணைப்பும் மனமகிழ்ச்சியும்தான் அதற்கான மருந்து. அதைத்தான் பிரதான மருந்தாக நாங்கள் தருகிறோம்!”

மாண்புமிகு மருத்துவர்கள்! - பேட்ச் ஆடம்ஸ்

உயரமான உருவம், முறுக்கிவிடப்பட்ட கூரிய மீசை, தொங்கும் சடை, குறும்பு கொப்பளிக்கும் கண்கள், மூக்கின் மேல் சிவப்பு பந்து, விநோதமான ஒற்றைக் காதணி, வண்ணமயமான மேல்சட்டை, ஜிகுஜிகு கழுத்து டை, எதற்கும் வளைந்துகொடுக்கும் கால்சட்டை, அதன் பையினுள் பலவித விளையாட்டுச் சாமான்கள். நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்தக் கோமாளித் தோற்றத்தில்தான் ஒரு மருத்துவராக உலகம் முழுக்க உலா வருகிறர் ஆடம்ஸ். ‘Gesundheit Global Outreach’ (GGO) என்ற அமைப்பின் மூலமாக ஆடம்ஸுடன் பலரும் கோமாளிகளாகப் பயணம் செய்கின்றனர். உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு மருத்துவமனைகள், அகதி முகாம்கள், நிவாரண முகாம்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், இயற்கைப் பேரழிவைச் சந்தித்த பிரதேசங்கள் என்று ஆடம்ஸ் செல்லாத இடங்களே இல்லை. வருடத்தில் சுமார்  300 நாள்கள் பயணத்திலேயே இருக்கிறார். மனிதர்களை மகிழ்விக்கிறார். குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்கிறார். எல்லோருக்கும் தன் சேட்டைகளால் ஊக்கமும் நம்பிக்கையும் ஆறுதலும் அரவணைப்பும் கொடுக்கிறார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள் மனத்திலும் ஒரு மகிழ்ச்சியை, அவர்களது உதடுகளிலும் சிறு புன்னகையை, இறுதிப் புன்னகையைத் தோற்றுவிக்கிறார்.

பல்வேறு விருதுகள் ஆடம்ஸின் சேவையைக் கௌரவித்திருக்கின்றன. ‘Pacth Adams’ என்ற பெயரில் திரைப்படமும் வெளிவந்திருக்கிறது. புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். உலகம் முழுக்கச் சென்று பல்வேறு மேடைகளில் தன் பேச்சால் அன்பை விதைத்துவருகிறார். சாலையில் இருவர் சண்டை போட்டால்கூட இந்தக் கோமாளி மருத்துவர் அவர்களுக்குள் புகுந்து, பகைமையை மறந்து சிரிக்கவைப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

இந்த உன்னதக் கோமாளி, சக மருத்துவர்களுக்குத் தன் வாழ்வின் மூலம் அழுத்தமாகச் சொல்லும் விஷயம் இதுதான். ‘Every doctor should be a heart specialist – a merry heart, that is.’

சேவை தொடரும்...

- ஓவியம்: பாலன்

முகில் எழுத்தாளர்