மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19

ஹெல்த்

`டாக்டர்... எப்படிச் சொல்றதுனு தெரியலை... கொஞ்சம் வெட்கமாவும் இருக்கு. மனைவி இறந்து ஆறு வருஷமாகுது. துணையில்லாம உணர்ச்சியை எப்படிக் கையாள்றதுனு தெரியலை. அதை அடக்கிவைக்க ஏதாச்சும் மருந்திருக்கா?’ என்று 86 வயது மனிதர் என்னிடம் தயங்கித் தயங்கிக் கேட்டார். தகுந்த ஆலோசனைகள் சொல்லி அனுப்பிவைத்தேன். காதல், கலவி, அன்பு இவற்றுக்கு வயது கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம், அது இயற்கையின் நியதி. 

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19

பல ஆண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்திய தம்பதியர் இன்பத்திலும் துன்பத்திலும் தோளோடு தோள் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவர் திடீரென இல்லாமல் போனால், அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்... இதை யாரும் யோசிப்பதில்லை.

இந்தியாவில் செக்ஸ் பேசக் கூடாத, விவாதிக்கக் கூச்சப்படும் ஒரு விஷயம். அப்படியிருக்கும்போது, வயதானவர்களின் உணர்வுகளை எப்படி மதிப்பார்கள்..? வயதாகிவிட்டால், ‘அதெல்லாம்’ கிடையாதென்று, ஒரு புனிதச்சாயம் பூசிவிடுவார்கள். ஆனால், வயதானவர்களுக்கும் செக்ஸ், அரவணைப்பு, அன்பு எல்லாம் தேவை. வயதானவர்களின் இந்த உணர்வை ஆங்கிலத்தில், `இன்டிமஸி’ (Intimacy) என்பார்கள். இதற்கு, ‘தாம்பத்யம் தொடர்பான உணர்வு’ என்பது அர்த்தமல்ல. கணவன் மனைவியிடையே இருக்கும் காதல் என்பது கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, ஸ்பரிசிப்பது, அன்பு செலுத்துவது என இருவருக்கும் இடையிலான பகிர்தல். இதை வேறு யாராலும் கொடுக்க முடியாது. இது, வயது ஆக ஆக அதிகரிக்குமே தவிர, குறையாது.

வாழ்க்கைத்துணை இறந்துபோவதால் மட்டுமல்ல, உடல் உபாதைகளால்கூட இந்த எதிர்பார்ப்புக்குத் தடை ஏற்படலாம். ‘உணர்வை வெளிப்படுத்தினால், யாராவது தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்ற எண்ணத்தாலும்  சிலர் உணர்ச்சியை அடக்கிக்கொள்வார்கள்.  துணை இறந்துவிட்டாலோ,  பிரிந்து வெளியூரில் இருந்தாலோ இப்படியொரு நிலை ஏற்படலாம். 

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19வயதான ஆண்களுக்கு சர்க்கரைநோயால் ஏற்படும் விரைப்புத் தன்மைக் கோளாறு, மூட்டுவலி, தசை வலிமை குறைந்து போவது, உடல் சோர்ந்து போவது, மருந்து, மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் போன்றவற்றால் உணர்ச்சிகள் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம், மன அழுத்தம், வலி நிவாரணி மாத்திரைகளால்கூட சிலருக்கு விரைப்புத்தன்மையில் கோளாறு ஏற்படலாம்; செக்ஸில் ஆர்வமில்லாமல் போகலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடன், உடனடியாக ஹார்மோன் சுரப்பு நின்றுவிடும்; செக்ஸின்போது பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவமும் நின்றுவிடும். ஆண்களுக்கு வயது ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக இந்த செக்ஸ் உணர்வு குறைய வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஹார்மோன் சுரப்புதான் காரணம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19

வயதானவர்களுக்கு முதுமை காரணமாக ஏற்படும் சருமச் சுருக்கம் போன்ற தோற்றப் பிரச்னைகளால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதனால், துணையுடன் நெருங்கிப் பழகாமல் ஒதுங்குவார்கள். சிலர் செக்ஸ் அளவுக்குச் செல்லாமல், தொட்டுப் பேசுவது, மனம் திறந்து பேசுவது போன்றவற்றை மட்டும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லையென்றாலும், அவர்களின் உணர்வு பாதிக்கப்படும். இதனால், ஒருவிதக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரலாம். இது குறித்து மருத்துவர்களிடம் பேசவும் தயக்கம் ஏற்படும்.  இதைச் சரிசெய்வது எளிது. மனம்விட்டுப் பேசி, அவர்களின் உணர்வுகள் தவறல்ல என்பதைப் புரியவைத்தால் போதும்.

செக்ஸ் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம், வாழ்க்கையில் அதன் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உடலால் வயதானாலும், மனதால் எவ்வளவு இளமையாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியமான, சிறந்த மனநிலை என்பது உடலுக்கும் மனதுக்கும் குடும்பத்துக்கும் நல்லது. வயதானவர்களுக்கு இந்த உணர்வு ஒரு சிறந்த மருந்து; அதை அலட்சியம் செய்ய வேண்டாம்.

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- ஐ.கெளதம்