
சேவை - 5
ஜாக் அன்றைக்கும் வழக்கம்போல தன் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஜாக்கின் மனத்திலும் ஒரு கேள்வி மின்னிக்கொண்டிருந்தது. ‘நீ ஒரு மருத்துவரானால் என்ன?’

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜாக் பிரகெர் (Jack Preger). 1965-ம் ஆண்டுவரை, தானுண்டு, தன் வயலுண்டு என்றுதான் அவர் இருந்தார். முப்பத்தைந்தாவது வயதில்தான் திடீரென அப்படி ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ‘நீ மருத்துவராகிவிடு!’
`இதென்ன பைத்தியக்காரத்தனம்... எனக்கு மருத்துவத்துறையில் ஆர்வமே கிடையாது. இந்த வயதில் மருத்துவப் படிப்பில் சேர்வதே கஷ்டம். அதைப் படித்து, முடித்து மருத்துவர் ஆவதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?’ ஜாக் மனதில் அவநம்பிக்கை சூழ்ந்தாலும், ஏனோ அவரது மூளை அந்தக் கட்டளையை இட்டுக்கொண்டே இருந்தது. ‘நீ மருத்துவப் படிப்பில் சேர்!’

ஜாக் தன் வயலை விற்றார். முட்டி மோதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்தார். அயர்லாந்திலிருக்கும் டப்ளின் நகரத்தின் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் தன் மருத்துவப் படிப்பை முடித்தார். அப்போது அவருக்கு வயது 42. ‘தென் அமெரிக்க நாடுகள் அல்லது மத்திய அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஏழைகளுக்கு மருத்துவப் பணி ஆற்ற வேண்டும்’ என்று அவர் முடிவெடுத்திருந்தார். அதற்காக ஸ்பானிஷ் மொழியும் கற்றுக்கொண்டார்.
1972-ம் ஆண்டில் ஜாக்குக்கு பங்களாதேஷிலிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து அந்தப் புதிய தேசம் உருவாகியிருந்தது. அங்கே அகதிகள் முகாமில் மருத்துவப் பணியாற்ற ஜாக்குக்கு அழைப்பு வந்தது. ஜாக் உடனே பங்களாதேஷுக்குக் கிளம்பிச் சென்றார். அழுக்கும் நோய்களும் நிறைந்த அகதிகள் முகாமில் ஜாக்கின் மருத்துவ சேவை ஆரம்பமானது. அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்காக உருதும் பெங்காலியும் கற்றுக்கொண்டார். அவலச் சூழல் அவருக்குப் பழகிப்போனது. மருத்துவ சேவையின் ருசிக்கு மனதார அடிமையானார்.
அடுத்தகட்டமாக ஜாக், தாகா நகரத்தில் 90 படுக்கைகள்கொண்ட மருத்துவமனை ஒன்றை அமைத்தார். அவருக்குள்ளிருந்த விவசாயியைத் திருப்திப்படுத்த, ஊருக்கு வெளியே கொஞ்சம் நிலம் வாங்கிப்போட்டு விவசாயமும் செய்தார். எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். என்ஜிஓ அமைப்பு ஒன்று (Terre des Hommes) ஆதரவற்ற குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவதாக வெளியில் காட்டிக்கொண்டது. ஆனால், அந்த அமைப்பின் மூலமாகக் குழந்தைகள் கடத்தப்படுவதையும், அதற்கு அதிகார மையம் துணையிருப்பதையும் ஜாக் கண்டுகொண்டார். அதனை எதிர்த்து தைரியமாகக் குரல் எழுப்பினார். எச்சரித்தார்கள்; மிரட்டினார்கள்; சிறையில் தள்ளினார்கள். அகதிகளுக்காக அங்கே வந்தவரை, ஓர் அகதிபோல பங்களாதேஷிலிருந்து துரத்திவிட்டார்கள்.

அனுபவித்த துன்பங்கள் போதும் என்று சொந்த நாட்டுக்குத் திரும்பியிருக்கலாம்தான். ஆனால், சேவை வாழ்வில் அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘வங்கதேசம் துரத்தியடித்தால், மேற்கு வங்கத்தில் என் சேவையைத் தொடருகிறேன்’ என்றபடி கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார் ஜாக் (1981). அங்கே அன்னை தெரசா மிஷனரியில் இணைந்து சில மாதங்கள் பணியாற்றினார். அவரால் மதத்தையும் மருத்துவத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்க முடியவில்லை. மதச்சார்பற்ற ஜாக், அங்கிருந்து வெளியேறினார்.
கிளினிக் ஆரம்பிக்க வேண்டுமென்றால் வேலை அனுமதிச் சான்று வேண்டும். அது எளிதில் கிடைக்காது. ஜாக், கொல்கத்தாவின் தெருக்கள், குடிசைப் பகுதிகள், நடைபாதைகள் என்று திரிந்தார். அங்கிருந்த ஏழை மக்களுக்குத் தேடிச் சென்று மருத்துவம் பார்த்தார். ஆனால், ஒரு நோயாளியை அதே இடத்தில் அடுத்த நாள் பார்க்க முடியவில்லை. ஆகவே, ஹௌரா பாலத்தின் அருகில் நடைபாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அங்கே அமர்ந்து இலவசமாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார். ஆம், நடைபாதையோர மருத்துவர்! ஏழைகள், ஆதரவற்றவர்கள், இயலாதவர்கள் தேடி வந்தார்கள்.

சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பது முதற்கொண்டு ஊசி போடுவது, உடலைப் பரிசோதனை செய்வது, தீக்காயம், ரத்த காயங்களுக்குக் கட்டுப்போடுவது, தொழுநோய்க்குச் சிகிச்சையளிப்பதுவரை எல்லாம் நடைபாதை ஓரத்தில்தாம். சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள், ஜாக்குக்குப் பண உதவி செய்தார்கள்.
மேற்கு வங்க அரசின், வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திலிருந்து (Foreigner Registration Office) ஜாக்குக்குப் பிரச்னை உண்டானது. அமெரிக்காவிலுள்ள ஒரு மிஷனரி ஜாக்குக்குப் பண உதவி செய்திருந்தது. ஆகவே, அவரை மருத்துவர் என்றில்லாமல் மிஷனரி ஊழியர் எனப் பதிவு செய்யும்படி அலுவலர்கள் வலியுறுத்தினர். ஜாக் மறுத்தார். வேலை அனுமதிச் சான்று பெறுவது, விசா இன்றி கொல்கத்தாவில் தங்கிப் பணியாற்றுவதற்கான உத்தரவைப் பெறுவது, வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவிகளைப் பெறுவது என்று பல்வேறு விஷயங்களில் ஜாக்குக்குக் குடைச்சல்கள் தொடர்ந்தன. ஜாக்கை மருத்துவம் பார்க்கவிடாமல் உள்ளூர் ரௌடிகள், அரசியல்வாதிகள் மிரட்டினார்கள். அனைத்தையும் சமாளித்து வெயில், மழை, புயல் எதுவும் பாராமல், ஜாக் வாரத்தில் ஆறு நாள்கள் அமைதியாகத் தனது மருத்துவ சேவையை நடைபாதையிலேயே தொடர்ந்தார். தன்னார்வலர்கள் சிலர் ஜாக்கோடு இணைந்து சேவையாற்ற முன்வந்தார்கள். அவர்களில் சில மருத்துவர்களும் உண்டு.
1989-ம் ஆண்டில் ஜாக்குக்காக நியூசிலாந்து ஹைகமிஷனர் மேற்கு வங்க அரசிடம் பரிந்து பேசினார். எனவே, ஜாக் தொடர்பான வெளிநாட்டுப் பதிவு அலுவலகப் பிரச்னைகள் எல்லாம் முடித்துவைக்கப்பட்டன. அவருக்குக் குடியுரிமை அனுமதி வழங்கப்பட்டது. 1991-ம் ஆண்டில் ஜாக் ‘Calcutta Rescue’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இரண்டு மருத்துவமனைகளை உருவாக்கினார். ஐரோப்பிய நாடுகளிலிருந்து உதவிகள் கிடைத்தன. அரசு, `வெளிநாட்டு நிதி உதவிகள் பெற அனுமதிக்க முடியாது’ என்று தடைவிதித்தது. வருகின்ற தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் தங்களுக்குக் கொடுத்தால் அனுமதி வழங்குவதாக அரசியல் புள்ளிகள் பின்னணியில் பேரம் பேசினர். ‘குறைவான கட்டணம் வாங்கும் ஒரு நல்ல வழக்கறிஞரைவைத்து நான் சட்டரீதியாகப் போராடிக்கொள்கிறேன்’ என்று நீதிமன்றத்தை நாடினார் ஜாக். நிதி விஷயத்தில் நீதி கிடைத்தது.
இன்றைக்கு ‘Calcutta Rescue’ தொண்டு நிறுவனம், மூன்று மருத்துவமனைகள், இரண்டு பள்ளிகள், இரண்டு தொழிற்பயிற்சி மையங்கள் நடத்திவருகிறது. 12 மருத்துவர்கள் உட்பட, சுமார் 150 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 38 ஆண்டுகளில் லட்சக்கணக்கான கொல்கத்தா மக்கள் ஜாக்கின் சேவைகளால் பெரிதும் பலனடைந்திருக்கிறார்கள். ஜாக், குழந்தைக் கடத்தலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இவற்றையெல்லாம் கௌரவிக்கும்விதமாக 2017-ம் ஆண்டில் லண்டனில் டாக்டர் ஜாக் பிரகெருக்கு ‘The Asian Award’ வழங்கப்பட்டது.
இந்த அக்டோபரில் கொல்கத்தாவின் எளிய மக்கள் கடினமான நிகழ்வொன்றைச் சந்திக்கவிருக்கிறார்கள். ஆம், 88 வயது டாக்டர் ஜாக் முதுமையின் காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் முடிவை எடுத்திருக்கிறார்.
சேவை தொடரும்...
- ஓவியம்: பாலன்