தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சோம்பு உள்ளுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும் இயந்திரம்!

சோம்பு உள்ளுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும் இயந்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சோம்பு உள்ளுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும் இயந்திரம்!

அஞ்சறைப் பெட்டி

`இயற்கையை ரசிக்க உதவும் கண்களுக்கான மருந்து இது’ எனக் கிரேக்க மருத்துவர் பிளைனி, சோம்பு என்னும் பெருஞ் சீரகத்தைப் பெருமைப்படுத்துகிறார். கிரேக்க புராணங்களிலும் சோம்பின் மேன்மைகள் பேசப்பட்டுள்ளன. இதன் பிறப்பிடம் மத்தியத் தரைக்கடல் நாடுகள் என்கிறது வரலாறு. 

வெண்சீரகம், பெருஞ்சீரகம் போன்றவை சோம்பின் வேறு பெயர்கள். சீரகம் போலவே பெருஞ்சீரகமும் (சோம்பு) அகத்தை அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும். நீண்ட நாள்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக்கூட, பசி உணர்வைத் தூண்டும் மாயாஜாலப் பொருள் இந்த சோம்பு. கடினமான உணவு வகைகளையும் அலட்டல் இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு. 

தக்காளி, வெங்காயம் மற்றும் சில பொருள்களைச் சேர்த்து உருவாக்கப்படும் சாம்பார் / குழம்பு வகைகளில், சோம்பை அரைத்து ஊற்றும்போது உண்டாகும் மணம், அப்போதே அதை ருசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும். இத்தாலிய உணவுகள் பலவற்றில் முக்கிய அங்கமாக இருப்பது சோம்பு. அந்நாட்டில் புகழ்பெற்ற ‘சம்பூகா’ பானத்துக்கு உயிரூட்டம் கொடுக்கிறது. சூப் வகைகளில் சோம்பைத் தூவி பருகும் வழக்கம் ஆங்கிலேயர்களுக்கு உண்டு. மொராக்கோ நாட்டில் புகழ்பெற்ற `ராசெலானவுட்’ என்ற உணவிலும் இது சேர்க்கப்படுகிறது. செரிமானக் கோளாறுகளுக்குச் சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தே ஜெர்மானியரின் முதல் தேர்வாக இருக்கிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்ச் சத்து வெளிப்படுத்தும் மருத்துவக் குணங்களுக்காகப் பல்வேறு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலில் சோம்பு இடம்பிடித்துள்ளது.

சோம்பு உள்ளுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும் இயந்திரம்!

சோம்பை வாயில் போட்டதும் உண்டாகும் சுவைக்கும் உணர்வுக்கும் அதில் உள்ள `அனித்தோல்’ என்னும் தாவர வேதிப்பொருளே காரணம். சோம்பிலும் தாவர ஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் இருப்பதால், பெண்களுக்கு உண்டாகும் நோய்களைத் தடுக்க இது வரப்பிரசாதமாகும். ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, கழிவுகளை வெளியேற்றி, செல்களை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். முதுமையில் தோன்றும் அல்சைமர் நோய்க்கு, சோம்பில் உள்ள வேதிப்பொருள்களை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிற ஆய்வு முடிவு, `ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுட்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

சமையலில் தவறாமல் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரத்தக் குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் முக்கியக்கூறு சோம்பில் இருக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு சிறந்த தீர்வு தரும் எனச் சித்த மருத்துவப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நவீன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

* சோம்பை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு கிராம் எடுத்து, பனைவெல்லத்துடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

துணியில் முடிந்த சோம்பை, வெந்நீரில் சிறிது நேரம் மூழ்கவிட்டு அந்த நீரைப் பயன்படுத்தினால் மருத்துவக் குணங்கள் அதிகரிக்கும். செரிமானத் தொந்தரவுகள் ஏற்படும்போது அலமாரியில் இருக்க வேண்டிய மருந்து சோம்புதானே தவிர, சிந்தடிக் மாத்திரைகள் அல்ல.

அத்திப்பழச் சதைப்பகுதியுடன் சோம்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் அடங்கும். இந்தக் கலவையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்த அணுக்கள் அதிகரித்து உடலுக்கு உற்சாகம் கிடக்கும்.

சோம்பு சார்ந்த மருந்துகளைப் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் சாப்பிடுவதால், தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கும் சோம்பின் சாரங்கள் சென்று சேரும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் குடல்பிடிப்பைக் குணமாக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரில் சோம்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் சிறிது வெண்ணெய் கலந்து பாலூட்டும் தாய்மாருக்குக் கொடுப்பார்கள். கிராமங்களில் இதைப் பின்பற்றுவதன் பின்னணியில் அறிவியல் இருக்கிறது. சோம்பு, பூண்டு சேர்த்துக் கொடுக்கப்படும் துணை உணவு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்கவைத்துக் கொடுக்கலாம்.

தூக்கம் வரவழைக்க, அமுக்கரா சூரணத்துடன், பொடியாக்கிச் சலித்த சோம்பைச் சேர்த்து அரை டீஸ்பூன் அளவு பாலில் கலந்து பருகலாம்.

சாப்பிட்டு முடித்ததும் செயற்கை இனிப்பூட்டி மெழுகப்பட்ட சோம்பு, பல்வேறு உணவகங்களில் நமக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத் தவிர்த்து வீட்டிலிருக்கும் சோம்பைப் பயன்படுத்துவதே சிறந்தது. சோம்பிலிருக்கும் மருத்துவக் குணமிக்க எண்ணெய்ச் சத்துகள் ஓரளவு உறிஞ்சப்பட்ட பிறகு, மீதமிருக்கும் தரம் குறைந்த சக்கைதான் சில உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

சமைத்து முடித்த உணவில் சுவை குறைவாக இருப்பதாகத் தோன்றினால், கொஞ்சம் சோம்புத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், உணவின் சுவை அதிகரித்திருப்பதை உங்கள் நாக்கின் சுவைமொட்டுகள் எடுத்துரைக்கும்.

இறைச்சிகளின் மீதும் முட்டை உணவுகளின் மீதும் சோம்புத்தூள் தூவினால் சுவை கூடுவதுடன் செரிமான மும் எளிதாகும்.

இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் தன்மை சோம்பின் தனிச்சிறப்பு. நல்ல வாசனையுடைய மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள சோம்புதான் உயர்தரமாகக் கருதப்படுகிறது. இதை அதிகமாக வறுத்தால் கசப்புச்சுவை கூடும் என்பதால், லேசாக வறுத்தாலே போதும்.

வயிறு மந்தமாக இருக்கும்போது, வாய்வு நிரப்பிய செயற்கை பானங்களுக்குப் பதிலாக, முறையாகத் தயாரித்த `சோம்புத்தீநீர்’ எனும் மருந்தைப் பருகலாம். வயிற்று மந்தம் ஏப்பமாக வெளியேறுவதை சில நிமிடங்களில் உணரமுடியும்.

சோம்புத் தாவரத்தின் இலைகளுக்கு மேல் சோம்பு மற்றும் மீன் துண்டுகளை வைத்து, சுட்டுத் தயாரிக்கப்படும் வாசனைமிக்க மீன் உணவை பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் சுவைக்கலாம்.

செட்டிநாடு உணவுகளில் அதிகளவில் சேர்க்கப்படுவது சோம்பு மற்றும் சீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளியுடன் மாங்காய்த் துருவல் மற்றும் சில பிசின் வகைகள் கலந்து, துவையல் போல செய்து, அதில் பொன் வறுவலாக வறுத்த சோம்புத் தூள் கலந்து தயாரிக்கப்படும் தொடு உணவு வகை மேற்குவங்காளத்தில் பிரசித்தம். `மல்பூரா’ எனப்படும் ரொட்டி வகையை, சோம்பு மற்றும் பிஸ்தா பருப்பின் கூட்டணி மெருகேற்றுகிறது.

சோம்பு… உள்ளுறுப்புகளைச் சோம்பலாக விடாமல், சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் வாசனைமிக்க இயந்திரம்!

- டாக்டர் வி.விக்ரம்குமார்

யாக்னி (Yakhni): வேகவைத்த இறைச்சித் துண்டுகளை, சோம்பு மற்றும் குங்குமப்பூ ஊறவைத்த தயிரில் கலந்து, சிறுதீயில் கொதிக்கவைத்து தயாரிக்கப்படும் `யாக்னி' எனும் உணவு காஷ்மீர் பகுதியில் புழக்கத்தில் இருக்கிறது. முகலாயர் ஆட்சியின்போது, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு வகை இது.

மருந்துக்குழம்பு: ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் தலா ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் பூசணி விதைகளைச் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு அதில் ஒரு கப் பப்பாளிக்காய்களைச் சேர்த்து, நன்றாகக் குழையும்வரை கிளற வேண்டும். அதில் சுவைக்காக ஒரு கப் சர்க்கரை நீரைக் கலந்து குழம்புபோல செய்து, துருவிய தேங்காயை அதன்மேல் தூவி சுடுசாதத்தில் பிசைந்துச் சாப்பிட, சோம்பின் மணம் கமகமக்கும். செரிமான உபாதைகளை நீக்கும் மருந்துக்குழம்பு இது.

நறுமணமூட்டும் ஊறுகாய்:
கால் கப் கடுகு விதைகள், தலா இரண்டு டீஸ்பூன் சோம்பு, மிளகு, கிராம்பு, சிறிய லவங்கப்பட்டை ஒன்று, சிறிது மிளகாய் வற்றல் போன்றவற்றை அரைக்காமல் ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு சிறிய துணியில் முடிந்து, ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் வைத்துவிட வேண்டும். துணிக்குள் இருக்கும் நறுமணமூட்டிகளின் சாரங்கள் சிறிது சிறிதாக இறங்கி, ஊறுகாயின் மருத்துவக் குணத்தையும் சுவையையும் அதிகரித்து நம்மை சுண்டி இழுக்கும். நீண்ட நாள்கள் ஊறுகாய் கெடாமல் இருக்கவும் இது உதவும். இதே கலவையைப் பொடித்து வைத்தும் பயன்படுத்தலாம்.

தூதி முதியா (Doodhi muthiya): ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் ஆரோக்கிய நொறுவை இது. ஒரு பாத்திரத்தில் சோம்பு, சீரகம், மஞ்சள்தூள், கோதுமை மாவு, கடலை மாவு, நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், சிறிது பெருங்காயம், உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக்கொள்ளவும். இஞ்சி விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், எலுமிச்சம்பழச் சாறு, நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல, மேற்சொன்ன பொருள்களை நன்றாகப் பிசையவும். இந்தக் கலவையைப் பிடித்தமான வடிவங்களில் உருவாக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்தால், நோய் நீக்கும் சிற்றுண்டி தயார்.