மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

சேவை - 8

வ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார் டாக்டர் ஆலா லெவுஷ்கினா. காலைக் கடமைகளை முடிப்பார். தன் செல்லப் பூனைகளுக்கு உணவுவைப்பார். தன் வீட்டின் ஜன்னல்களில் வைக்கப்பட்டிருக்கும் கிண்ணங்களில் பறவைகளுக்காக தானியங்களைக் கொட்டுவார். மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம் தனது கிளினிக் சென்றுவிடுவார். காத்திருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரையும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் தவறாமல் நிதானமாகப் பரிசோதனை செய்வார். எவ்வளவு நோயாளிகள் இருந்தாலும், டாக்டர் ஆலாவின் பேச்சில் கனிவு மட்டும் குறையாது. 

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

இரண்டரை மணி நேரம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு, சரியாக காலை 11 மணிக்கெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்துவிடுவார். உதவியாளரின் உதவியுடன் ஆபரேஷனுக்கான மேலங்கியை அணிந்துகொள்வார். தலையில் தொப்பி, கையில் உறைகளுடன், நோயாளிக்குரிய பரிசோதனை அறிக்கைகளையெல்லாம் சரிபார்த்துக் கொள்வார். அறுவை சிகிச்சைக்கு முன்னர் தன் குழுவினருடன் ஆலோசனை செய்வார்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா



டாக்டர் ஆலா சற்றே உயரம் குறைவானவர். நான்கு அடி 9 அங்குலம். எனவே, அவருக்கென ஆபரேஷன் டேபிளுக்கு அருகில் சிறிய மேடை ஒன்று தயாராக இருக்கும். அதில் ஏறி அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு அறுவை சிகிச்சைகள். ஒவ்வொன்றையும் எந்தப் பிரச்னையுமின்றி கச்சிதமாக முடிப்பார். அறுவை சிகிச்சைகள் முடிந்ததும், தன்னைச் சுத்தம் செய்துகொள்வார். ஆபரேஷன் தியேட்டரை சுத்தம் செய்ய உதவுவார். ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கான ரிப்போர்ட்களையும் தானே கைப்பட எழுதுவார். அதற்குப் பிறகுதான் அடுத்த வேலையை நோக்கி நகர்வார்.

சரி, இதெல்லாம் ஒரு டாக்டருக்கான கடமைகள்தானே? இதில் பெருமையாகச் சொல்ல என்ன இருக்கிறது? கேள்விகள் எழலாம். இங்கே டாக்டர் ஆலாவின் வயதுதான் விஷயம். 2018-ம் ஆண்டில் அவரது வயது 90. ஆலா, ரஷ்யாவில் வாழும் மிக வயதான பெண் மருத்துவர். உலகில் வாழும் மிக வயதான அறுவை சிகிச்சை நிபுணரும்கூட. இன்றைக்கும் டாக்டர் ஆலா, கைகள் நடுங்காமல் கத்தி பிடித்து, கச்சிதமாக அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பே. 

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

ரஷ்யாவில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர் ஆலா (முழுப்பெயர் Alla Ilyinichna    Levushkina). பள்ளிப் படிப்பை முடித்த பின், புவியியலாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் ஆலாவுக்கு இருந்தது. அப்போது அவருக்கு மருத்துவத்துறை குறித்த நாவல் ஒன்று படிக்கக் கிடைத்தது. மருத்துவர்களின் பணி, சேவை குறித்து அதிலிருந்த கதாபாத்திரங்கள் பேசியவிதம், ஆலாவுக்குள் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. தானும் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆலாவுக்குள் உருவானது. அந்தக் காலத்தில் பெண்கள் மருத்துவம் படிப்பது மிக மிகக் குறைவே. அதுவும் மாஸ்கோ மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுதான் படிக்க வேண்டும். அங்கே இடம் கிடைப்பது அரிதான விஷயம். ஆலா அசரவில்லை. கடுமையான முயற்சிகளால் மாஸ்கோ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். சிரத்தையுடன் படித்தார். ஆனால், இன்னொரு பக்கம் குடும்பத்தின் வறுமையும் சேர்ந்து வாட்டியது.

‘நான் படிக்கும்போது மருத்துவ மாணவர்களுக்கு மாதம் ஒரு பாட்டில் ஆல்கஹால் கிடைக்கும். அதைத் தூக்கிக்கொண்டு சந்தைக்கு ஓடுவோம். அரை பாட்டில் ஆல்கஹாலுக்கு ஒரு பெரிய ரொட்டி வாங்கலாம். மீதியையும் கொடுத்து எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருவோம். என் பெற்றோர்களும் பாதி நேரம் பசியில் இருந்தவர்களே. ஆனாலும் அவர்கள் ஊரிலிருந்து எனக்கென அவ்வப்போது கிழங்குகளை அனுப்பிவைத்தனர்’ என்று தன் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் ஆலா. பலரும் தேர்ந்தெடுக்கத் தயங்கும் மலக்குடலியல் துறையைத்தான் ஆலா தனக்கான துறையாகத் தேர்ந்தெடுத்து விரும்பிப் படித்தார். அப்போது ரஷ்யா முழுவதிலுமே ஓரிரு மலக்குடலியல் நிபுணர்கள்தாம் இருந்தார்கள். ஆலா அன்றைய ரஷ்யாவிலிருந்த சில பெண் மருத்துவர்களில் ஒருவராகத் தனது சேவையைத் தொடங்கினார். 

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆலா லெவுஷ்கினா

தேசமெங்கும் பல்வேறு கிராமங்கள், சிற்றூர்களுக்கு மக்களைத் தேடிச் சென்று மருத்துவச் சேவை செய்யும் குழுவுடன் இணைந்தார். சுமார் முப்பதாண்டுகள் விமானத்தில் பறந்தும், பிற வாகனங்கள் வழியாகப் பயணம் செய்தும் ஆலாவின் பொது மருத்துவச் சேவை தொடர்ந்தது. பிறகு தனது சொந்த ஊரான ரைஸானுக்குத் திரும்பினார். மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணராகத் தன் பணிகளைத் தொடர ஆரம்பித்தார். இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தனது 68 ஆண்டுகால மருத்துவ வாழ்வில், ஆலா இதுவரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். அதில் ஒன்றுகூட தோல்வியில் முடிந்ததில்லை.

மூன்று தலைமுறைகளாக ஆலாவிடம் மருத்துவம் பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள். அதே நேரம், இத்தனை வயதான பெண்மணியா தனக்கான ஆபரேஷனைச் செய்யப்போகிறார் என்று பயந்து, தயங்குபவர்களும் இருக்கிறார்கள். அப்படி பயந்தவர்கள் ஆலாவிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவருடைய கைகளைப் பிடித்து நிம்மதியுடன் நன்றி தெரிவிக்காமல் சென்றதில்லை.  மருத்துவச் சேவை வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக டாக்டர் ஆலா திருமணமே செய்துகொள்ளவில்லை. மருத்துவச் சேவையில் ஆலாவின் அர்ப்பணிப்பைக் கௌரவப்படுத்தும் விதத்தில் ரஷ்ய அரசு, `தேசத்தின் சிறந்த மருத்துவர்’ என்ற விருதை வழங்கியிருக்கிறது.
 
`எப்போது ஓய்வெடுக்கப் போகிறீர்கள்?’ என்று ஒரு நேர்முகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது டாக்டர் ஆலா பதிலுக்கு ஒரு கேள்வியை எழுப்பினார். ‘அப்படியனால், நான் செய்யவேண்டிய அறுவை சிகிச்சைகளை யார் செய்வார்கள்?’

தன் கடன் மருத்துவம் செய்து கிடப்பதே என்பதே அவரது எண்ணமாக நிலைபெற்றிருக்கிறது. இன்றைக்கும் உற்சாகமாக ஆபரேஷன் தியேட்டரில் கத்தியையும் கத்திரிக்கோலையும் பிடித்து இயங்கிக்கொண்டிருக்கிற ஆலா இப்படிச் சொல்கிறார்... ‘மருத்துவம் என்பது எனக்குத் தொழில் அல்ல. அது என் வாழ்க்கை முறை. அதில் எனக்கு ஓய்வு தேவையே இல்லை. ஓர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு மருத்துவச் சேவையைவிட வாழ்வில் வேறு எது முக்கியமாக இருக்க முடியும்?’

சேவை தொடரும்...

- ஓவியம்: பாலன்