
சேவை - 9
அந்த ஒரு புத்தகம்தான் ரவிந்திராவின் வாழ்க்கையையே மாற்றியது. அது அவரிடம் ஏற்படுத்திய தாக்கம், ஒரு சமூகத்தையே முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர், ‘Where there is No Doctor.’

டேவிட் வெர்னெர் என்பவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின், ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் பணியாற்றிய பேராசிரியர். பல கிராமங்களுக்குப் பயணம் செய்து சுகாதார, மருத்துவச் சேவைகள் செய்தவர். நிறைய இடங்களில் மருத்துவ வசதியே இல்லை என்று உணர்ந்தவர், 1977-ம் ஆண்டில் இந்தப் புத்தகத்தை ஸ்பானிஷ் மொழியில் எழுதினார். அது பின்னர் ஆங்கிலத்தில் வந்தது. தமிழிலும் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்தைத் தாங்களே பேணிக்கொள்வது எப்படி என்று விளக்கும் சமுதாயப் பொறுப்புமிக்கக் கையேடு இது. எளிய முறையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் அந்த நூலை ரவிந்திரா படித்தபோது அவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பட்டம் பெற்றிருந்தார் (1985). அவரது பரம்பரையின் முதல் மருத்துவர் ரவிந்திராதான். ஏற்கெனவே காந்தி, வினோபா பாவே குறித்து தேடித் தேடி வாசித்திருந்த ரவிந்திராவின் மனத்தில், டேவிட் வார்னெரின் புத்தகம் புதிய எழுச்சியை உண்டாக்கியது. ‘மருத்துவப் படிப்பு என்பது பணம் சம்பாதிக்கவா... அது சேவை செய்யத்தானே. ஒரு டாக்டராக எனது சேவை வாழ்க்கையை மிகச் சரியான இடத்தில், மிகச் சரியான மக்களுக்காகத் தொடங்க வேண்டும்.’ ரவிந்திரா திடமாக முடிவெடுத்தார். அதற்கு முன்னர் இதேபோல கிராமங்களில் பணிசெய்த அனுபவமுள்ள மூத்த டாக்டர் ஒருவரிடம் ஆலோசனைகள் கேட்டார். அந்த சீனியர், மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டார். 1. அவசரத்துக்கு ரத்தம் கிடைக்காது. சோனோகிராபி வசதியெல்லாம் இருக்காது. ஆனால், பிரசவம் பார்க்க வேண்டும். 2. எக்ஸ்ரே இல்லாமலேயே நோயாளிக்கு நிமோனியா இருக்கிறதா, இல்லையா என்று கண்டறிய வேண்டும். 3. வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

பம்பாய் சென்ற ரவிந்திரா, அங்கே ஒரு மருத்துவமனையில் சுமார் ஆறு மாதங்கள் பொது மருத்துவராகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். பின், மகாராஷ்டிராவின் மேல்கட் என்ற ஊரிலிருந்து 40 கி.மீ தொலைவிலிருக்கும் ‘பய்ராகர்’ என்ற கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார். இதுவரை மருத்துவரின் வாசனையே படாத குக்கிராமம். அங்கே செல்ல சாலையோ, வாகன வசதியோ கிடையாது. மேல்கட்டுக்கு வந்து தங்கிய ரவிந்திரா, தினமும் 40 கி.மீ நடந்து பய்ராகருக்குச் செல்ல ஆரம்பித்தார். கழுத்தில் ஸ்டெதாஸ்கோப், கையில் மருந்துகள் அடங்கிய பெட்டி. சில வாரங்கள் மக்களைத் தேடித் தேடி வைத்தியம் பார்த்தார். ஒருநாள் ஒரு மனிதன் வந்தான், ஒரு கை இன்றி, பலத்த காயங்களுடன். வெடி விபத்தில் சிக்கியதால் அந்த நிலைமை. அவனுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ரவிந்திரா, செய்வதறியாமல் திகைத்து நின்றார். சில நாள்களிலேயே பய்ராகர் கிராமத்தைவிட்டுக் கிளம்பினார். மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். 1987-ம் ஆண்டில் அதை முடித்தார். மேல்கட் பிரதேசத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு குறித்து அவர் செய்த ஆய்வு, கவனம் பெற்றது.
“மேல்கட்டின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், மக்கள் மலேரியா, நிமோனியா, பாம்புக்கடி போன்றவற்றாலும் இறக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மக்கள் எப்படி இறக்கிறார்கள் என்பது குறித்துத்தான் எல்லோரும் பேசினார்களே தவிர, ஏன் இறக்கிறார்கள் என்பது குறித்து யாரும் பேசவில்லை. அதற்கு ஒரே காரணம்தான். மக்களின் வறுமை. நிமோனியா தாக்குகிறதென்றால், அந்த ஏழை மக்களிடம் குளிரைத் தாங்கும் உடைகளோ, போர்வையோ இல்லை. குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பசிபோக்கும் போதுமான உணவுகூட கிடைப்பதில்லை. இங்கே அவசியத் தேவை நோய் தீர்ப்பதற்கான மருத்துவம் மட்டுமல்ல, மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்ற காரணங்களுக்கான ஆணிவேரைச் சரிசெய்வதும்தான்.”
ரவிந்திரா ‘தன்னோடு தோள்கொடுத்துப் பணியாற்ற, தன்னைப் புரிந்துகொண்ட ஓர் இணை இருந்தால் வசதியாக இருக்கும்’ என்று நினைத்தார். நீண்ட தேடலுக்குப் பிறகு, நாக்பூரிலேயே மருத்துவராக இருந்த ஸ்மிதா என்ற பெண்ணை ரவிந்திரா சந்தித்துப் பேசினார். ஸ்மிதாவிடம் கறாரான சில நிபந்தனைகளை முன்வைத்தார்.

“தினமும் 40 கி.மீ சலிக்காமல் நடக்க வேண்டும். வெறும் 5 ரூபாய் செலவில் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம்தான் செய்துகொள்வேன். ஒரு நோயாளியிடம் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே வாங்குவேன். மாதம் சுமார் 400 ரூபாய் வருமானத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். கிராம மக்களுக்குச் சேவை செய்ய பிச்சை எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்...”
ஸ்மிதா ஒப்புக்கொண்டார். பய்ராகர் கிராமத்தில் அந்த தம்பதியின் சேவை வாழ்க்கை ஆரம்பமானது (1989). ரவிந்திராவின் மருத்துவச் சேவையை மனமார ஏற்றுக்கொண்ட மக்கள், தங்கள் அறியாமையால் பெண் டாக்டரான ஸ்மிதாவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். ஸ்மிதா கர்ப்பமானார். ரவிந்திராவே ஸ்மிதாவுக்குப் பிரசவம் பார்த்தார். பிறந்த குழந்தை நிமோனியா உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டது. ‘நாம்தான் இந்த மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். நம்பிக்கை வரவழைக்க வேண்டும்’ என்ற தீர்க்கமான எண்ணத்துடன் ஊரிலேயே தங்கினார் ஸ்மிதா. குழந்தை நோய்களிலிருந்து மீண்டு தேறியது. ஊர் மக்கள் டாக்டர் ஸ்மிதா மீதும் அன்பைக் கொட்ட ஆரம்பித்தனர்.
அடுத்தகட்டமாக, ‘ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள்களை விளைவிக்க ரவிந்திராவும் ஸ்மிதாவும் விவசாயம் கற்றுக்கொண்டனர். தானியங்களை, காய்கறிகளை செழிப்பாக விளைவித்தனர். மக்களும் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தனர். காலப்போக்கில் ஊர், பசுமையானது. கால்நடைகள் பெருகின. மக்களின் வறுமையும் நீங்கியது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தனர். மேல்கட் பகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் முதன்மையானது மகாராஷ்டிரா. ஆனால், மகாராஷ்டிராவின் மேல்கட் பகுதியில் இப்போது ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்வதில்லை. இந்த டாக்டர் தம்பதியினரின் சுமார் முப்பது ஆண்டுகால உழைப்பும் சேவையும் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
ரவிந்திரா, டாக்டர் பிரேம்சந்த் என்பவரோடு இணைந்து 2016-ம் ஆண்டில் அந்தப் பகுதியில் `பிரேயர்’ என்ற இலவச கண் மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறார். இப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சீனியர் சிட்டிசன்கள் தெளிவான பார்வையுடன் உலா வருகின்றனர். இதெல்லாம், இந்த மக்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும் என்ற சமூகப் பார்வை ரவிந்திராவுக்கு இருந்ததால் சாத்தியமாகியிருக்கிறது. எப்போது மருத்துவர்கள் நோயாளிகளுக்காகச் சிந்திக்காமல், சக மனிதர்களுக்காகச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது இவையெல்லாம் சாத்தியமே!
சேவை தொடரும்...
ஓவியம்: பாலகிருஷ்ணன்