மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

சேவை - 10ஓவியம்: பாலகிருஷ்ணன்

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

``ன்னைச் சுற்றி எளிய மனிதர்களே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏழைகளால், இயலாதவர்களால், நாடற்றவர்களால்தான் எனது சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சமூகத்தில் பிறந்து, வளர்ந்து, ஒரு மருத்துவனாக மாறியிருக்கும் நான், இந்தச் சமூகத்துக்காகத்தானே உழைக்க வேண்டும்?’’ - டாக்டர் இஷான் எஸெதீன்.

1943-ம் ஆண்டு தெற்கு சிரியாவின் சுவைதாவில் பிறந்தவர் இஷான் எஸெதீன் (Ihsan Ezedeen). இஷான், சிரியாவின் பழம்பெருமை வாய்ந்த டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் 1968-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார். நல்ல சம்பளத்தில் மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இஷானின் மனதில் மேற்சொன்ன எண்ணமே நிலைகொண்டிருந்தது. ``சிரிய சமூகத்தின் சூழலைப் பார்த்தபடிதான் நான் வளர்ந்திருக்கிறேன். அந்த எளிய மக்களால் மருத்துவத்துக்காகப் பெரிதாகச் செலவு செய்ய முடியாது. அதற்கு ஒரு மருத்துவராக நான் உதவினால், அவர்கள் வாழ்க்கையும் கொஞ்சம் மேம்படும் என்று நினைத்தேன்.’’

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

டாக்டர் இஷான், ஜராமனா என்ற சிரிய நகரத்தில் சிறியதாக ஒரு கிளினிக் ஆரம்பித்து, தன்னைத்

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

தேடிவரும் நோயாளிகளுக்கு அக்கறையுடன் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். இஷானே நோய்களுக்கான மருந்துகளையும் கொடுத்துவிடுவார். இவை அனைத்துக்கும் சேர்த்து அவர் நோயாளியிடம் வாங்கும் கட்டணம் 50 சிரியன் பவுண்டுகளே. இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் சுமார் ஏழு ரூபாய் மட்டுமே. அந்தச் சொற்பக் கட்டணத்தைக்கூட கொடுக்க இயலாத மக்கள் என்றால், இலவசமாகவே மருத்துவமும் பார்த்து, மருந்துகளையும் அளித்துவிடுவார். 1962-ம் ஆண்டு முதல் சிரியாவில் நெருக்கடி நிலைதான். 30 ஆண்டுகளாக அஃபேஸ் அல் அஸாத் என்பவர் ஆட்சி செய்தார். `ஜனநாயகம்’ என்ற வார்த்தைக்கு அங்கே அர்த்தமில்லை. குடிமக்கள் வாழத் தகுதியற்ற தேசமாகத்தான் அது திணறிக்கொண்டிருந்தது. வறுமை, வேலையின்மை, கல்வியின்மை, பொருளாதாரச் சரிவு போன்ற எல்லாச் சீரழிவுகளும் வளமாக இருந்தன. அஃபேஸுக்குப் பின் பதவியேற்ற அவர் மகன் பஷர் அல் அஸாத்தும் தந்தையின் பாதங்களைப் பின்தொடர்ந்தார்.

இத்தகைய சூழலில் தவிக்கும் மக்களுக்கு அக்கறையுடன் மருத்துவச் சேவை செய்துகொண்டிருந்தார் டாக்டர் இஷான்.  கிளினிக்கில் நோயாளிகளைப் பார்த்ததுபோக, மீதி நேரத்தில் தன் கையில் ஸ்டெத்தை எடுத்து வைத்துக்கொண்டு, தன் கைப்பை முழுக்க மருந்துகளை நிரப்பிக்கொண்டு கிளம்பிவிடுவார். ``என்னைத் தேடி வர இயலாத நிலையில் பல நோயாளிகள் இருக்கின்றனர். பாவம், அவர்களுக்கும் மருத்துவ உதவிகள் தேவைதானே. ஒரு நோயாளிக்கு நான் ஒருமுறை மருத்துவ உதவி செய்கிறேன் என்றால், அவர் முழுவதும் தேறி வரும்வரை அவருக்கான வைத்தியம் செய்வது என் கடமை.’’

இஷான், `ஜராமனா’ என்ற தொண்டு நிறுவனத்தை 2003-ம் ஆண்டு தொடங்கினார். மருந்து நிறுவனங்களிடம் பேசி குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ மருந்துப் பொருள்களைக் கொள்முதல் செய்ய வழிவகுத்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்

2011-ம் ஆண்டு சிரியாவில் அதிபருக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கியது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, இரான் போன்ற நாடுகளின் தலையீடு போரைத் தீவிரமடையச் செய்தது. அமைப்புகள் பிளவுபட, அரசியல்ரீதியான தீர்வு என்பதற்கான நம்பிக்கை முற்றிலும் பொய்த்துப் போனது. இந்தச் சூழலிலும் டாக்டர் இஷான், தன் மருத்துவச் சேவைகளைத் தொடர்கிறார். குண்டுவெடிப்புகள் சகஜமாகிப் போன சிரியாவில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்து உயிர்பிழைக்க வைப்பதென்பது மாபெரும் பணி. அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்திருக்கின்றனர். ஜராமனாவில் அகதியாக வந்து தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்காக ஐ.நா அமைப்பின் துணையுடன் உதவிகள் செய்தார். மறுவாழ்வு அளிக்கும் திட்டமாக 150 பெண்கள் தையல் பயிற்சி பெற்று, உடைகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்தினார் இஷான்.

சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐ.நா கணக்கின்படி 56 லட்சம் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். 61 லட்சம் மக்கள் தங்கள் நாட்டின் உள்ளேயே இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவிகித மக்கள் மிகவும் கொடுமையான வறுமையில் வாழ்ந்துவருகின்றனர். 60 லடசம்  பேர் உணவில்லாமல் தவிக்கின்றனர். சுமார் 30 லட்சம் மக்கள் உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் இருக்கிறார்கள். அங்கே சுமார் 58 சதவிகிதம் பொது மருத்துவமனைகளும்,  49 சதவிகிதம் சுகாதார மையங்களும் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டன. இந்த ஆபத்தான சூழலில்தான் ஜராமனா நகரை மையமாகக் கொண்டு டாக்டர் இஷான் தனது மருத்துவச் சேவைகளைத் தொடர்கிறார். அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு தன்னார்வலர்களும் அவருக்கு உதவிகள் செய்கின்றனர்.

``அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த வாழ்க்கை சிரிய மக்களுக்கு அமைய வேண்டும்’’ என்று பிரார்த்தனை செய்யும் டாக்டர் இஷான், ``ஒருவனால் கொடுக்க முடியும், சேவை செய்ய முடியும் என்றால், அவன் கொடுப்பதையோ, சேவை செய்வதையோ நிறுத்தக் கூடாது’’ என்றபடி 75 வயதிலும் ஓடி ஓடி உழைக்கிறார்.கண்களில் கருணை ததும்ப அவர் சொல்லும் வார்த்தைகள், ``என் வாழ்வின் இறுதிநாள்வரை எனது மருத்துவச் சேவையைத் தொடர்வேன்.’’

சேவை தொடரும்...