
சேவை - 11ஓவியம்: பாலகிருஷ்ணன்
டி.பேகுர், கர்நாடக மாநிலத்தின் ஒரு சாதாரண கிராமம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையிலிருந்தே அந்தக் கிராமத்தில் கூட்டம் சேர ஆரம்பித்துவிடும். சுமார் 200 கி.மீ தொலைவிலிருந்துகூடக் கிளம்பி வருகிறார்கள். சனிக்கிழமை இரவில் அந்த இடத்திலிருக்கும் கொட்டகைகளிலேயே தங்கிவிடுகிறார்கள். அப்போதுதான் ஞாயிறு காலையில் சீக்கிரமாக அவரைச் சந்திக்க முடியும். அவர் என்றால், டாக்டர் ரமணா ராவ். 1970-களில் மருத்துவப் படிப்பை மணிபாலின் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். பிறகு, இதயநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பெங்களூருவிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் டி.பேகுர்தான் ரமணாவின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர். அங்கே அவருக்குக் கொஞ்சம் பண்ணை நிலம் இருந்தது. அந்த ஊரிலோ, சுற்று வட்டாரத்திலோ பெரிய அளவில் மருத்துவ வசதிகள் கிடையாது. 1974, ஆகஸ்ட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. டாக்டர் ரமணா, தன் ஸ்டெதாஸ்கோப்புடனும், சில மருந்து மாத்திரைகளுடனும் டி.பேகுருக்கு வந்தார். அங்கே தன் நிலத்தில் ஒரு மேசை, நாற்காலி போட்டு உட்கார்ந்தார். ‘இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும்’ என்று ஊர் மக்களிடம் அறிவித்தார். அன்றைக்குக் காலை முதல் மாலைவரை ஐந்து பேர் வந்தார்கள். அவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். இலவசமாக மருந்து கொடுத்தார். மனதுக்கு நிறைவாக இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் வந்தார். சுமார் 46 வருடங்களாக இதைத் தவறாமல் செய்துவருகிறார்.

மைசூர் மகாராஜாவும் அவர் குடும்பத்தினரும் டாக்டர் ரமணாவிடம் சிகிச்சை பெற்றவர்கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன்றோருக்கும் ரமணா சிகிச்சையளித்திருக்கிறார். இந்தப் புகழெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், டாக்டர் ரமணாவை நம்பி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கிறது. அவர்கள் நோயால் துன்பப்படுபவர்கள். மருந்து வாங்கக்கூடப் பணம் இல்லாதவர்கள். ஆகவே, மழை, வெயில், பணிச்சுமை, சொந்தக் காரணங்கள் என்று பாராமல், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலையிலேயே அங்கே சென்றுவிடுகிறார் டாக்டர் ரமணா. அவரின் மனைவி, மருத்துவம் படித்த இரண்டு மகன்கள் (முதல் மகன் டாக்டர் சாரிட் போக்ராஜ் (Interventional Cardiologist), இரண்டாவது மகன் அபிஜித் போக்ராஜ் (Endocrinologist) என குடும்பத்துடன் மருத்துவச் சேவையைத் தொடர்கிறார்கள். தவிர, மருத்துவ மாணவர்களும், பயிற்சிநிலை மருத்துவர்களும் டாக்டர் ரமணாவுடன் கைகோத்துப் பணியாற்றுகிறார்கள். ஊரைச் சேர்ந்த சிலரும் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்கள்.
சில ஞாயிறுகளில் அங்கே ஏறத்தாழ 2,000 பேர்வரை வந்து செல்கிறார்கள். முதலில் ஒவ்வொரு நோயாளியையும் டாக்டர் ரமணாவே புன்னகை முகம் மாறாமல், அன்பு வார்த்தைகள் பேசியபடியே பரிசோதனை செய்கிறார். பொது மருத்துவம், சாதாரண நோய்கள் எனில், அவரே மருந்துகள் கொடுத்து அனுப்பிவிடுகிறார். குறிப்பிட்ட நோய்களுக்கான நிபுணர்கள் கவனிக்க வேண்டுமெனில், அங்கிருக்கும் உரிய மருத்துவர்களிடம் அனுப்பிவைக்கிறார். நோயாளிகளுக்கான மருந்து, மாத்திரைகள், குழந்தைகளுக்கான தடுப்பூசி முதல் பிற சிகிச்சைகள், உணவுவரை எல்லாமே இலவசம். கண்நோய்களுக்கான சிகிச்சை, சருமநோய்களுக்கான மருத்துவம், பல்நோய்களுக்கான மருத்துவம், சர்க்கரைநோய்க்கான மருத்துவம் போன்றவையும் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.

இப்படி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இலவச மருத்துவ சேவை செய்ய, டாக்டர் ரமணாவுக்கு ஆகும் செலவு சுமார் ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய். அதற்காகவே மருந்து நிறுவனங்களிடம் உதவி பெறுகிறார். சமூக சேவை அமைப்புகளிடம் நிதி திரட்டுகிறார். பொதுமக்களிடமும் நிதி பெறுகிறார். தவிர, தன் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை மக்களுக்கான இலவச மருத்துவத்துக்காகச் செலவு செய்கிறார். புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பெரிய பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு வேறு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை இலவசமாகக் கிடைக்கவும் வழிவகை செய்கிறார் டாக்டர் ரமணா.
மருத்துவச் சேவையுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தன் கிராமத்திலும், அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் இருக்கும் பல பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவி செய்கிறார். சுகாதாரம் பேணப்பட்டால் நோய்கள் குறையும் அல்லவா? எனவே, அந்தச் சுற்று வட்டாரத்தில் சுமார் 7,000 கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். 2008-ம் ஆண்டில் டாக்டர் ரமணா, கிராமப்புற மருத்துவச் சேவைக்கான ‘டாக்டர் அப்துல் கலாம் தேசிய விருதை’யும், 2010-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சேவையில் பல வருடங்களாகத் தன்னை இணைத்துக்கொள்ளத் தூண்டிய விஷயம் எது என்பதையும் டாக்டர் ரமணா சொல்லியிருக்கிறார்.

“இங்கே வாழும் பலரும் தினக்கூலிகள். குடும்பத்தில் யாரோ ஒருவரின் சம்பாத்தியத்தை நம்பி வாழ்பவர்கள். அந்த நபரும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் கதியே அவ்வளவுதான். அப்படிப் பல குடும்பங்களின் கண்ணீர் என்னை பாதித்திருக்கிறது. இந்த மக்களுக்கான தீர்வை ஒரு மருத்துவரால் மட்டுமே கொடுக்க முடியும். ஆகவே, இந்த மக்களுக்கு நோயற்ற வாழ்வு அமைவதற்காக நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்!”
சேவை தொடரும்...

வயோதிகத்தில் வாலிபம்!
பழைய டிஎன்ஏ-க்களை புதுப்பிக்கும் ஆற்றல்கொண்ட `Nicotinamide Adenine Dinucleotide - NAD’யைப் பயன்படுத்தினால், அது வயோதிகத்தைத் தவிர்த்திடும்’ என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.

- தொகுப்பு
சசித்ரா தாமோதரன் மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர்