
சேவை - 12ஓவியம்: பாலகிருஷ்ணன்
‘மருத்துவம் என்பது ஓர் உன்னதமான தொழில். இந்தச் சேவை ஆத்ம திருப்தியைத் தருகிறது. மருத்துவப் பணியின் மூலமாகத்தான் வாழ்வதற்கான நிதி, பொருளாதார முன்னேற்றம், பெயர், புகழ் அனைத்தையும் பெற்றேன். இவற்றையெல்லாம்விட மேலான, மக்களின் அன்பும் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைத்தன. இதன் மூலம் பெற்றதை நான் மக்களுக்குத் திருப்பி அளித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவத் தொழிலுக்கு என்றென்றும் நான் அடிமை!’’

டாக்டர் பல்வந்த் கட்பாண்டே உதிர்த்த இந்த வார்த்தைகள் உண்மையானவை. மருத்துவராக 78 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிக்கொண்டிருக்கிற இவரின் வயது 103. இந்தியாவின் / உலகின் மிக மூத்த மருத்துவர்களில் ஒருவர்.

பொதுவாக 60, 70 வயதுக்கு மேலானதும், `வீட்டோடு ஒரு டாக்டரை வைத்துக்கொள்ளலாமா அல்லது டாக்டரின் வீட்டுக்குப் பக்கத்திலேயே குடிபோய்விடலாமா?’ என்று நினைக்குமளவுக்கு உடலும் மனமும் தளர்ந்து வாழ்பவர்களே இங்கே அதிகம். ஆனால், நரைகூடிக் கிழப்பருவமெய்தி, பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கைப் பற்றிக்கொண்டு, `ஸ்டெத்’ தோளில் தவழ, தனது கிளினிக்குக்கு உற்சாகமாகக் கிளம்பிவிடுகிறார் டாக்டர் பல்வந்த். அதுவும், 365 நாள்களும்; லீப் இயர் என்றால் 366 நாள்களும்.
பல்வந்த், பூனாவின் பழம்பெருமை வாய்ந்த பி.ஜே மருத்துவக் கல்லூரியில் 1941-ம் ஆண்டில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில், அரசு மருத்துவராக, தனது பணியை ஆரம்பித்தார். 1941 முதல் 1948-ம் ஆண்டுவரை மகாராஷ்ட்ராவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். ‘`நான் அப்போது மகாராஷ்ட்ரா சதாரா மாவட்டத்தின், பதான் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரம் அது. என் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே, அரசு மருத்துவப் பணியைவிட்டு விலகினேன். பூனாவுக்கு வந்துவிட்டேன்’’ என்று குறிப்பிடுகிறார் பல்வந்த்.

பூனாவின் ராஷ்டா பேட் பகுதியில் சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார் பல்வந்த். அன்று முதல் இன்றுவரை அங்குதான் அவரது மருத்துவச் சேவை தொடர்கிறது. மிகக் குறைந்த கட்டணம்: வசதியற்றவர்களிடம் அதையும் எதிர்பார்ப்பதில்லை. அன்பான வார்த்தைகளும், கரிசனம் நிறைந்த கவனிப்பும்தான் நோயாளிக்கான முதல் மருந்து. தேவைப்பட்டால், மருந்துகளும் மாத்திரைகளும். பக்கவிளைவுகளை உண்டாக்கும் `ஹெவி டோஸ்’ எப்போதும் கிடையாது. அதனால்தான் நான்காவது தலைமுறையாக பல்வந்தைத் தேடி மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆம், `இந்தியாவின் மிக மூத்த குடும்ப மருத்துவர்’ பல்வந்த்.
103 வயதிலும் தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் 20 முதல் 30 நோயாளிகளைப் பார்க்கிறார். ஒருவருக்கு 10 நிமிடங்கள். நோயாளிகளுக்கான மெடிக்கல் ஹிஸ்டரியை சாதாரணமாக ஒரு நோட்டில் எழுதிவைத்திருக்கிறார்; அதை எடுத்துப் பார்க்கிறார்: தேவைப்படும் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். தற்போதைய விவரங்களையும் அடுத்த ஓரிரு நிமிடங்களில் நோட்டில் அப்டேட் செய்துவிட்டு, அடுத்த நோயாளியைப் பார்க்கிறார். இதற்கெல்லாம் ஓர் உதவியாளரைக்கூட அவர் வைத்துக்கொள்வதில்லை.
நோயாளிகள் இல்லாத நேரங்களில் தனது மருத்துவஅறிவை அப்டேட் செய்யும் நூல்களை, செய்தித்தாள்களைப் படிக்கிறார். அவர் மருந்து நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்திப்பதில்லை. அவர்கள் கொடுக்கும் சலுகைகளுக்காகவும் பரிசுப் பொருள்களுக்காகவும் நோயாளிகளுக்குத் தேவையற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. தவிர, இந்த டாக்டர் தாத்தா இதுவரை நோய்வாய்ப்பட்டுப் படுத்ததும் கிடையாது. சுகர், ரத்த அழுத்த மாத்திரைகள் என்று எந்த மருந்தையும் சாப்பிட்டதும் கிடையாது.

தன் ஆரோக்கியத்தின் ரகசியமாக டாக்டர் பல்வந்த் சொல்லும் விஷயங்கள் மிக எளிமையானவை. ``காலையில் சீக்கிரம் எழுந்துவிடுகிறேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சைவம் மட்டுமே உண்கிறேன். வீட்டில் சமைக்கும் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறேன்.’’
இன்று மருத்துவம் வணிகமயமாகிப் போனதில் டாக்டர் பல்வந்துக்குப் பெரும் வருத்தம் உண்டு. ``இன்று எல்லோரும் சாதாரண நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களை நாடும் நிலை உண்டாகியிருக்கிறது, உண்டாக்கப்பட்டிருக்கிறது. மக்களின் மனநிலையும் அப்படி மாறிப் போயிருக்கிறது’’ என்கிறார்.
‘இத்தனை வயதிலும் நீங்கள் ஏன் மருத்துவச் சேவையைத் தொடர்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு டாக்டர் பல்வந்த் சொல்லும் பதில் மிகவும் ஆத்மார்த்தமானது. ``மருத்துவச் சேவை என் உயிரோடு, உணர்வோடு கலந்தது. இதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது.இதைத் தொடராமல் என்னால் வாழ முடியாது. என் கிளினிக்கில், யாராவது ஒரு நோயாளிக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரிந்தால் நன்றாக இருக்கும். அதுதான் என் இறுதி ஆசையும்கூட.’’
மருத்துவத் தொண்டு செய்தே பழுத்த பழம்!
சேவை தொடரும்...

நீச்சலுக்கு முன்னுரிமை!
`ஆஸ்துமா நோயாளிகளுக்கு சைக்கிளிங், படகு ஓட்டுதல், நடைப்பயிற்சி இவையெல்லாம் சிறந்த உடற்பயிற்சிகள். ஆனால், அவற்றைவிட நீச்சல்தான் மிகச் சிறந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.