
எடை குறைப்பு - ஏ டு இஸட்
நீங்கள் விஜய் ரசிகையா, அஜித் ரசிகையா?
எடை குறைப்புக்கும் விஜய், அஜித்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்கள்...
என்ன ஆனாலும் சரி, இந்த முறை எடுத்த எடை குறைப்பு சபதத்தில் பின் வாங்குவதில்லை என முடிவெடுத்துவிட்டீர்களா? வாழ்த்துகள்!
முடிவெடுத்த பிறகு நாள், கிழமையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். இன்றே, இந்தக் கணமே நல்ல நேரம்தான்.
உங்கள் முடிவை அசைத்துப் பார்க்கும் சிறப்பான, தரமான சம்பவங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையிடத்தில், வீட்டில் எனத் தினம் ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வரும். திருமண விருந்துகள் காத்திருக்கும். பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கும். கண்முன்னே உணவுப் படையலை வைத்துக்கொண்டு விலகியிருப்பதென்பது சாதாரண காரியமில்லைதான். நீங்கள் விஜய் ரசிகை என்றால் ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்கிற டயலாக்கையும், அஜித் ரசிகை என்றால் ‘நெவர், எவர் கிவ் அப்’ என்கிற டயலாக்கையும் உங்களுக்கான மந்திரச்சொற்களாக நினைவில்கொள்ளுங்கள்.

இலக்கை அடைவதில் உங்களை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ளலாம்?
சிறிய அளவில் ஆரம்பியுங்கள்
எடுத்த எடுப்பிலேயே கடுமையான உணவுக்கட்டுப்பாடெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லை. எனவே சிறிய சிறிய மாற்றங்களி லிருந்து தொடங்குங்கள்.
உதாரணத்துக்கு உங்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை என்றால், அடுத்த ஒரு மாதம் முழுக்க தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். அந்த மூன்று லிட்டரில் நீங்கள் குடிக்கும் ரசம், சூப், மோர், காய்கறி ஜூஸ் என எல்லாம் அடக்கம்.
இன்னோர் உதாரணம்... காலை உணவுக்குத் தினமும் பிரெட் சாண்ட்விச்தான் சாப்பிடுவீர்களா? வழக்கமாக எடுத்துக்கொள்ளும் வெள்ளை பிரெட்டுக்கு பதில் கோதுமை பிரெட்டுக்கு மாறுங்கள். சாண்ட்விச்சில் தடவும் சீஸ் மற்றும் வெண்ணெய்க்குப் பதில் கொத்தமல்லி சட்னியும் புதினா சட்னியும் சேர்த்துக்கொள்ளுங்கள். சாண்ட்விச்சில் வெள்ளரிக்காய் வைத்துச் சாப்பிடுபவரா? கூடவே குடமிளகாய், தக்காளி, கேரட், வேகவைத்த சிக்கன் அல்லது முட்டை, முளைகட்டிய தானியங்கள் கொஞ்சம்... இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிய மாற்றம்தான், பெரிய பலன்களைத் தருவதை உணர்வீர்கள்.
யதார்த்தம் உணருங்கள்
நடைமுறையில் எவை சாத்தியமோ, அத்தகைய லட்சியங்களை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ குறைவதென்பது சாத்தியமில்லை. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்ததாகச் சொல்கிறவர்களை முன்மாதிரியாகக் கொள்ளாதீர்கள். மாதத்துக்கு இரண்டு முதல் நான்கு கிலோ எடையும், இடுப்பைச் சுற்றி ஒன்றிரண்டு இன்ச் சுற்றளவும் குறைக்கும் அளவுக்கு இலக்கு வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் வருடக்கணக்கில் சேர்த்துவைத்த எடையை ஒரே இரவில் உதறித்தள்ளிவிட நினைக்கலாமா?
பிடித்ததைப் பாருங்கள்
உங்களுக்கு மிகப் பிடித்த, உங்களை மிக அழகாகக் காட்டிய பழைய ஜாக்கெட் அல்லது சல்வாரை உங்கள் கண்களில் படும்படியான இடத்தில் மாட்டிவையுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் டபுள் எக்ஸ் எல்லில் இருக்கும் நீங்கள் முதலில் எக்ஸ் எல்லுக்கும், அடுத்து எல்லுக்கும் திரும்ப வேண்டியதன் அவசியம் உங்களுக்கு நினைவுக்கு வரும். எடை குறையும்போது தசை இழப்பு இருக்கக் கூடாது. ஆக்டிவ் செல்களான அவைதாம் உடலின் கொழுப்பை எரிப்பதில் உதவிசெய்து, உங்கள் உடலைச் சரியான ஷேப்புக்கு கொண்டுவரும்.
கமிட்மென்ட் முக்கியம்
கமிட்மென்ட்டுக்கு முக்கியம், எடுத்த செயலில் தீவிர முனைப்பும் அதற்கேற்ற ஒரு ஸ்ட்ராட்டஜியும்.
சிகரம் தொடுவது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால், ஒரே ஜம்ப்பில் அது நடக்காதில்லையா? எனவே, நடைமுறைக்கு சாத்தியமான இலக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை அடைகிற உங்கள் திட்டங்களை ஏற்படுத்தி, அவற்றை நோக்கித் தெளிவாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வையுங்கள்.
இது உங்கள் ஆரோக்கியம் சம்பந்தப் பட்டது. கூட்டமாக இருக்கும்போது அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தயங்கி, ஆரோக்கியமற்ற உணவு களைச் சாப்பிடாதீர்கள். அதற்காக `குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெளியே போவதோ, வெளியிடங்களில் சாப்பிடுவதோ கூடாதா' என நீங்கள் கேட்கலாம். தாராளமாகப் போகலாம். ஆனால், மாதம் ஒருமுறையோ, இரண்டு வாரங்களுக்கொரு முறையோ மட்டும். அப்போது ஒருவேளை உணவு மட்டும் அவர்களுடன் சாப்பிடலாம்.
வெளியே செல்கிறீர்களா? குறிப்பாக தியேட்டருக்குச் செல்லும்முன், வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். அங்கே விற்கப்படும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைத் தவிர்க்கலாம். வேறு இடங்களுக்குச் செல்லும்போது வீட்டிலேயே தயாரித்த ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எடுத்துச்செல்லுங்கள்.
உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்!
ஏன் எடை குறைக்க வேண்டும் என்கிற கேள்வியை உங்களுக்கு நீங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் பெற்றோருக்காக, வாழ்க்கைத் துணைக்காகவா? அப்படியென்றால் உங்கள் எடை குறைப்பு இலக்கிலிருந்து நீங்கள் சீக்கிரமே பின்வாங்கிவிடுவீர்கள். அடுத்தவருக்காகச் செய்கிற எந்த விஷயத்திலும் தொடர் ஈடுபாடு இருக்காது.
‘இல்லை... எனக்காகத்தான் எடை குறைக்கிறேன்’ என்று சொன்னால் ஒரு பேப்பரில் எடை குறைத்தால் உங்களுக்கு ஏற்படப் போகிற நன்மைகளை எழுதி, உங்கள் கண்முன் படும்படியான இடத்தில் ஒட்டிவையுங்கள். கூடவே, ஒல்லியாக இருந்தபோது எடுத்த உங்களுடைய பழைய படத்தையும்!
நம்மால் முடியும்!
-ஆர்.வைதேகி
ஆசை... தோசை... சசிகுமார

‘பிரம்மன்’ படத்துக்காக நடிகரும் இயக்குநருமான சசிகுமாருக்கு நான் டயட் கவுன்சலிங் கொடுத்தேன். தோசை அவரது ஃபேவரைட் உணவு என்பதால் அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. ஒருவேளை மட்டும் தோசைக்கு அனுமதி கொடுத்தேன். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, புதினா சட்னி அல்லது தேங்காய், பொட்டுக்கடலை சட்னி, மீன், சிக்கன், மட்டன் - இவற்றில் ஏதேனும் ஒரு கிரேவி. கிரேவியை அதிகம் எடுத்துக்கொள்ளாமல், அசைவத் துண்டுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்தேன். புரதம் அதிகமுள்ள உணவுகள், புதிய தசைகள் உருவாகவும், கொழுப்பு கரையவும் உதவும்.
டயட் என்பது நீங்கள் பயப்படுகிற மாதிரி உங்கள் விருப்ப உணவுகளை ஒதுக்கிவைக்கிற விஷயமில்லை. உங்களுக்குப் பிடித்த உணவுகளையே ஆரோக்கியமானவையாகவும் மாற்றிக்கொள்வதுதான் டயட். அதற்காகத்தான் இந்த உதாரணம்!