தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

ட்டுமொத்த உலகையும் வசீகரித்த ஒரு மூலிகை எது என்றால், அது ஜாதிக்காய்தான். ஜாதிக்காயைப் போல ஜாதிபத்திரி என்றொரு மூலிகை உண்டு. இவை இரண்டும் நறுமணமூட்டிகளில் ‘இரட்டைக் குழந்தைகள்’. `ஐந்து திரவியம்’ எனும் மூலிகைத் தொகுப்பில் ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் தவிர்க்க முடியாத உறுப்பினர்களாக இருக்கின்றன.

உணவுகளின்மீது ஜாதிக்காய்ப் பொடியைத் தூவிச் சாப்பிடுவது அக்காலத்தில் உயர்ந்த அந்தஸ்தாகக் கருதப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஜாதிக்காய் அறிமுகமானபோது, அங்குள்ள செல்வந்தர்கள் ஜாதிக்காய் மற்றும் ஒரு வெள்ளி உடைப்பானை உணவு அருந்தச் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வார்களாம்.

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

நாடுகளுக்கிடையே நடைபெற்ற நறுமணமூட்டிகளுக்கான போராட்டத்தில் ஜாதிக்காய் மையப்பொருளாக இருந்திருக்கிறது. மலுக்கா தீவுகள்தான் இதன் பிறப்பிடம். ஜாதிக்காய் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, ஜாதிக்காய் காணப்படும் இடங்களில் வசிக்கும் மக்களையும், வணிகர்களை எதிர்க்கும் மக்களையும் டச்சுக்காரர்கள் கொடூரமாகக் கொலை செய்தது ஜாதிக்காய் வரலாற்றின் கறுப்புப் புள்ளி.

பண்டைய இங்கிலாந்தில், பருப்பு ரகங்கள் சேர்ந்த கஞ்சி வகைக்கு ஜாதிக்காய் உயிரூட்டம் கொடுத்துள்ளது. `பெகாமெல்’ எனப்படும் வெள்ளை ஃப்ரெஞ்சு சாஸுக்குக் கூடுதல் சுவை வழங்குவது ஜாதிக்காய். ஆந்திராவின் கடலோரப் பகுதியில் ஜாதிபத்திரி மற்றும் அன்னாசிப்பூ சேர்க்கப்பட்ட சமையல் பிரசித்தம். காஷ்மீரி மற்றும் முகலாயர்களின் சமையலில் நறுமணமூட்டிய பொருள்களில் ஜாதிக்காயும் ஒன்று. இந்தியாவில் தங்கியிருந்த சீனப் பயணி யுவான் சுவாங் உணவுப் பட்டியலில் தினமும் 20 ஜாதிக்காய்கள் இடம்பிடிக்குமாம்.

ஜாதிக்காயில் இருக்கும் `மிரிஸ்டிசின்’ எனும் பொருள், அதன் பிரத்யேக சுவை மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகிறது. ரத்தப் புற்றுநோய்க்கான மருத்துவ ஆய்வில் ஜாதிக்காய் இடம்பிடித்திருக்கிறது. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்கவைக்க `எலாஸ்டின்’ புரதம் காரணமாகிறது. அந்தப் புரதத்தைச் சிதைக்கும் காரணிகளைத் தடுத்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் மருத்துவக் கூறுகள் ஜாதிக்காயில் இருக்கின்றன.

தகித்துக்கொண்டிருக்கும் மனதை, சாந்தப்படுத்த ஜாதிக்காய் உதவும் என்கின்றன ஆய்வுகள். ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் மருந்தாகப் பல்வேறு நாட்டு பாரம்பர்ய மருத்துவ முறைகளில் பயன்படுகிறது. வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்தும் திறனும் ஜாதிக்காய்க்கு உள்ளது.

திராட்சை ரசத்துடன் பனைவெல்லம் சேர்த்து, ஜாதிக்காய்த் தூளைச் சேர்த்துச் சாப்பிட ருசி மட்டுமல்ல, ஆரோக்கியமும் கிடைக்கும். வாந்தி உணர்வை நிறுத்த, ஜாதிக்காயை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம். பொடித்த ஜாதிக்காயைச் சிட்டிகை அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் முழுமையான உறக்கம் வர வாய்ப்பு அதிகம்.

ஜாதிக்காயைப் பொடித்து கஞ்சியில் கலந்துகுடித்தால், கற்பனைவளம் பெருகுவதுடன் ஆண்மை பெருகும் என்பது `ஜான்ஜிபர்’ நாட்டு (இப்போதைய தான்சானியா) மக்களின் பாரம்பர்ய நம்பிக்கை. இதன் பொடியை முட்டை மற்றும் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால், விந்து முந்தும் பிரச்னை குணமாகும். சரியான அளவு உட்கொண்டால், சாகசங்கள் செய்ய உற்சாகமூட்டும் பொருளாகவே செயல்படும். மேலும், சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அளிக்கும்.

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

பாதாம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலம் மற்றும் குங்குமப்பூ உதவியுடன் செய்யப்படும் ‘பாதாம்கந்த்’ எனப்படும் இனிப்பு வகை, ஹைதராபாத் ஸ்பெஷல். பருப்பு சமையலில் ஜாதிக்காய், ஏலம், தயிர் மற்றும் பிசின் வகைகளைச் சேர்க்கும் வித்தியாசமான பருப்பு உணவு, லக்னோ வாசிகளின் ஃபேவரைட்.

விந்தணு எண்ணிக்கை குறைதல், கழிச்சல், இருமல், இரைப்பு, வயிற்றுவலி, தலைவலி போன்ற அறிகுறிகளுக்கு ஜாதிக்காய் அற்புதமான மருந்து என்பதை, ஜாதிக்காய்க்குச் சொந்தமான `தாது நட்டம் பேதி… ஓதுசுவாசங் காசம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல் மூலம் தெரிந்துகொள்ளலாம். மணமூட்டி, வாய்வுஅகற்றி, உரமாக்கி எனப் பன்முகத் தன்மைகொண்டது ஜாதிக்காய்.

கருவளையத்துக்கு, பாலுடன் ஜாதிக்காயைச் சேர்த்துக் குழைத்துப் பற்று போடலாம். தேனுடன் ஜாதிக்காய் சேர்த்து முகத்தில் தடவுவது, சருமத்தை இயற்கையாக மெருகேற்றும் ஓர் உத்தி.

தக்காளி, நெல்லிக்காய் ஊறுகாய்போல, ஜாதிக்காயிலும் மருத்துவக்குணம் நிறைந்த ஊறுகாய் செய்து சுவைத்த மரபு நம்முடையது. இனிப்பு, காரம் கலந்த தனித்துவமான சுவை மற்றும் வாசனையை நம் உணவுகளுக்குப் பரிசளிக்க, சமையலின் கடைசியில் ஜாதிக்காய்ப் பொடி சேர்க்கலாம். காய்களை நறுக்கி அதன்மீது ஜாதிக்காய்ப் பொடியைத் தூவி சுவையாகச் சாப்பிடலாம். உருளை பிரட்டலை மெருகேற்ற இறுதியாக ஜாதிக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்ப்பால் சொதியோடும் இதைச் சேர்க்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்துதான் ஜாதிக்காய் அதிக அளவு ஏற்றுமதியாகிறது. கிரினீடா நாட்டில் விளையும் ஜாதிக்காய் தரத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய ரக ஜாதிக்காய்களும் சந்தையில் வலம் வருகின்றன.

தேவையான அளவு ஜாதிக்காயை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது பொடித்து சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவியாகும் எண்ணெய்ச் சத்து அதிகம் இருப்பதால், அவ்வளவு சீக்கிரம் இது தனது நறுமணத்தை இழக்காது. ஜாதிக்காயில் புழுக்களின் ஆதிக்கம் இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். எண்ணெய்ப் பசை நிறைந்த வரிகள் ஜாதிக்காயின்மீது ஓடுவதை வைத்து அதன் வயதை அறிந்து கொள்ளலாம். நாள்கள் செல்லச் செல்ல வரிகள் படிப்படிப்பாகக் குறையும். நறுமண எண்ணெய் மற்றும் மணமில்லாத தரம் குறைந்த ஜாதிக்காயை ஏற்றுமதியின்போது கலப்படம் செய்யும் வழக்கம் உலக அளவில் உள்ளது.

ஜாதிக்காய்… நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

-டாக்டர் வி.விக்ரம்குமார்

ஜாதிக்காய் சமையல்!

ஊறல் ரசம் / சாறு: பொடித்த ஆறு ஜாதிக் காய்கள், உடைத்த இரண்டு லவங்கப்பட்டை, சிறிது ஆரஞ்சுப்பழத் தோல், கால் கப் முழுமையான கிராம்பு, இரண்டு டீஸ்பூன் இஞ்சிப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு டீஸ்பூன் எடுத்துத் துணியில் முடிந்து வைக்கவும். கடாயில் ஒரு டம்ளர் திராட்சை ரசம் அல்லது ஆப்பிள் பழச்சாறு ஊற்றி, மெல்லிய தீயில் சூடேற்றவும். நறுமணமூட்டிகள் சேர்ந்த முடிப்பை அதில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து ஆசைதீர அந்தப் பழச்சாற்றைப் பருகலாம். இதுவரை நீங்கள் பருகிடாத வித்தியாசமான சுவை நாவில் இழையோடும்.

நறுமணமூட்டும் நால்வர்: ஒரு டீஸ்பூன் கிராம்பு, கால் கப் மிளகு, ஒரு ஜாதிக்காய், ஒரு டீஸ்பூன் அரைத்த இஞ்சி விழுதை மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். குழம்பு வகைகளின் சுவையைக் கூட்ட, இதைச் சேர்க்கலாம்.

நறுமணமூட்டிகள் மெழுகிய `நட்ஸ்’: தலா கால் டீஸ்பூன் பொடித்த ஜாதிக்காய், கிராம்பு, இஞ்சி விழுது, இந்துப்பு, ஒரு டீஸ்பூன் பொடித்த லவங்கப்பட்டை போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன் ஒரு முட்டை, மூன்று டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி, பசை பதத்துக்கு வரும் வரை கலக்க வேண்டும். தேவையான அளவு பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை மேலே சொன்ன மசாலா பசையில் குழைத்து, பொரித்துச் சாப்பிடலாம். கொட்டை ரகங்களில் உள்ள `ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்களும், நறுமணமூட்டிகளில் உள்ள நலமூட்டிகளும் உடலுக்கு வலுவூட்டும். பொரித்த வகை சிற்றுண்டி என்பதால், அளவுடன் இருப்பது நல்லது.

ஜாதிக்காய் - மாதுளை சாஸ்: அரை கப் நீரில் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். நான்கு டீஸ்பூன் ஜாதிக்காயைப் பொடித்து, கால் கப் மாதுளம்பழ ரசத்தில் கலக்கவும். இரண்டையும் சேர்த்து அடுப்பில் ஏற்றி (சில நிமிடங்கள்) நீர் நன்றாக வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி, பழத் துண்டுகளின்மீது சாஸை ஊற்றிச் சுவைக்கலாம்.