
உயிர் வரம் தரும் உடல் உறுப்பு தானம்!

‘உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’... நவீன மருத்துவ உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு; மரண வாசலில் தவிக்கும் நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்; உயிர்காக்கும் உயரிய சிகிச்சை. ஒருவரிடமிருந்து 25 உறுப்புகளையும் திசுக்களையும் தானமாகப் பெற்று, மற்றவர்களுக்குப் பொருத்த முடியும். நவீன மருத்துவத்தின் துணையுடன் எண்ணற்ற மனித உயிர்களின் மறுவாழ்வைச் சாத்தியமாகியிருக்கிறது உறுப்பு தானம்.

“தமிழகத்தில் இன்றைக்கு சிறுநீரகம், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மாற்று உறுப்புகளுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். தமிழக அரசின் உடல் உறுப்பு தான ஆணையத்தில் காத்திருப்போர் பட்டியலில் சுமார் 5,000 பேர் இருக்கிறார்கள். தேவை இருக்கும் அளவுக்கு உடல் உறுப்புகள் தானம் கிடைப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

உடல் உறுப்பு குறித்த விழிப்புஉணர்வு இன்னமும் பரவலாக வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அதேபோல, பல்வேறு தவறான புரிந்துணர்வுகளும், உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்குத் தயக்கம் இருப்பதுமே உறுப்பு தானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய அவகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறந்த சில மணி நேரத்துக்குள் கொடுக்கப்படாத உறுப்புகள் வீண். அதற்கான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்.


உடல் உறுப்பு தானம் செய்ய எங்கு பதிவுசெய்ய வேண்டும், எந்தெந்த உறுப்புகளையெல்லாம் தானம் செய்யலாம், அதற்கான நடைமுறைகள் என்னென்ன, ஒவ்வோர் உறுப்பையும் தானம் செய்வதற்கான கால வரையறை என்ன... எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார்.

“உடலிலுள்ள உறுப்பையோ அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, உயிருடன் இருக்கும்போதோ அல்லது மூளைச்சாவு அடைந்த பின்னரோ தேவைப்படும் ஒருவருக்கு வழங்கி, அவர் உயிர்பிழைக்க உதவுவதைத்தான் ‘உடல் உறுப்பு தானம்’ என்கிறோம். உடல் உறுப்பு தானத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, உயிருடன் இருக்கும்போதே தானமாக வழங்குவது. மற்றொன்று, ஒருவர் இறந்த பின்னர், பிறருக்கு பயன்படக்கூடிய அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வது.

உயிரோடு இருப்பவர்கள் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?
`மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து மட்டுமே உறுப்புகள் தானம் பெற முடியும்’ என்று பலர் நினைக்கிறார்கள். உயிரோடு வாழ்பவர்களும் சில உறுப்புகளை தானம் செய்ய முடியும். இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை தானம் செய்யலாம்.

இரண்டு சிறுநீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாகத் தரும்போது, அவரின் இரு சிறுநீரகங்கள் செய்யவேண்டிய வேலையை ஒரு சிறுநீரகமே செய்துகொள்ளும். கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால், அது தானாகவே மறுபடியும் வளர்ந்துவிடும். நுரையீரலின் ஒரு பகுதியைக் கொடுத்தாலும், மீதமுள்ள பகுதி சீராக வேலைசெய்யும்; பாதிப்பு இருக்காது. தானம் செய்த பிறகு வாழும் மீதிக் காலம் முழுக்க மருந்து சாப்பிட வேண்டும் என்பதும் அவசியமில்லை.

மூளைச் சாவடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறக்கூடிய உறுப்புகள்
மூளைச் சாவடைந்தவரிடமிருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறுகுடல், குரல்வளை, கண்கள், காதின் நடு எலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, சருமம், நரம்புகள், தமனிகள், கைகள், கை மற்றும் கால் விரல்கள், பெண்களாக இருந்தால், கர்ப்பப்பை ஆகியவற்றை தானமாகப் பெறலாம்.

இயற்கை மரணமடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறக்கூடிய உறுப்புகள்
இயற்கையாக மரணமடைந்தவர்களிடமிருந்து விழித்திரை, இதய வால்வுகள், சருமம், எலும்புகள், அவற்றைப் பாதுகாக்கும் தசை நார்கள், குருத்தெலும்பு, நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். அதேபோல, மரணமடைந்தவர்களின் உடலை ஆராய்ச்சிக்காகக் கொடுக்கலாம். இயற்கை மரணம், மூளைச்சாவாக இருந்தால், எலும்புகளையும் திசுக்களையும் எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தலாம். இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் திசுக்களையும் தானமாகப் பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேருக்குத் தன் உறுப்புகளை தானமாகத் தர முடியும். ஆனால் தற்கொலை, கொலை சம்பவங்களில் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடியாது.

யாரெல்லாம் தானம் செய்யலாம்?
18 வயது முதல் 60 வயதுவரை உள்ள ஆண், பெண் இருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யலாம். மூளைச் சாவடைந்தவர்கள் அல்லது இயற்கை மரணமடைந்தவர்கள் உடல் தானம் செய்யப் பதிவுசெய்திருந்தாலோ, அவரின் குடும்பத்தினர் விருப்பப்பட்டாலோ, உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்.

யார் செய்ய முடியாது?
ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், புற்றுநோய், இதயநோய், எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் நோய் போன்றவை இருந்தால் தானம் செய்ய முடியாது. அதே நேரத்தில், எய்ட்ஸ் தவிர மற்ற நோய்கள் இருந்தாலும் அவற்றுக்கான, முறையான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தானம் செய்ய முடியும்.

சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் மனித உடல் உறுப்பு தானம், 1962-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ஆனால், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவரவர் இஷ்டம்போல உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடக்கத் தொடங்கின. வழக்கம்போல பண வசதி உள்ளவர்களுக்குச் சாதகமாகவே இது நடந்துகொண்டிருந்தது. வசதியற்றவர்களும் வறியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டார்கள். 1994-ம் ஆண்டு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தும் அகில இந்திய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

தமிழகத்தில் 2008-ம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களுக்கு இடம் தராமலிருக்கவும் ‘தமிழக அரசின் உறுப்பு தானத் திட்டம்’ வழிவகை செய்கிறது. அதன்படி, 2008-ம் ஆண்டு முதல், தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் கொடுப்பது மற்றும் தானம் பெறுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது.

ஒருவருக்குச் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், அவரின் மனைவி, மகன்கள் அல்லது மகள்கள் என நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தானமாகப் பெறப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்தப்படுகின்றன. இது தவிர உறவினர்கள், நண்பர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, பொருத்தப்படுகின்றன.

சாலை விபத்துகளில் அல்லது வேறு வகையான விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர் என்று அறிவிக்கப்பட்ட நபரிடமிருந்து உடல் உறுப்புகள், மூளைச்சாவு அடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்துடன், அரசின் காத்திருப்போர் பட்டியலிலிருக்கும் நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன. சட்டப்படியான உடல் உறுப்புகள் தானத்தில், உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பவர், உடல் உறுப்புகளைப் பெறுபவரிடமிருந்தோ அல்லது அவரின் உறவினர்களிடமிருந்தோ பணம் பெறக் கூடாது.

18 வயதுக்குக் குறைவானவர்களின் உடல் உறுப்புகள் எந்தக் காரணத்தைக்கொண்டும் உறுப்பு தானத்துக்காக எடுக்கப்படக் கூடாது. இரு தரப்பிலும், `தானம்’ என்ற அடிப்படையில்தான் உறுப்பு தானம் கொடுக்கப்படுகிறது, பெறப்படுகிறது என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகே அதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது உடல் உறுப்பு தானத்துக்காக பணம் பரிமாறக்கொள்ளப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட வேண்டும்.

முன்னுரிமை எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
முன்னுரிமை அடிப்படையிலேயே ஒருவருக்கு உடல் உறுப்புகள் வழங்கப்படும். அரசு மருத்துவமனையானாலும், தனியார் மருத்துவமனையானாலும் `பதிவு மூப்பு மற்றும் நோயின் தன்மை’ அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும். அதே நேரத்தில் பதிவு மூப்பின் அடிப்படையில் உறுப்பு கிடைத்தாலும், உடல்நிலை மற்றும் ரத்த வகை பொருந்திப்போக வேண்டும். உதாரணமாக, `ஏ நெகட்டிவ்’ ரத்த வகைகொண்ட ஒருவரின் சிறுநீரகம் தானமாகக் கிடைக்கிறது என்றால், அதைக் காத்திருப்போர் பட்டியலில் `ஏ நெகட்டிவ்’ ரத்த வகை கொண்டவருக்குத்தான் பொருத்த முடியும். அவரின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லையென்றால், பட்டியலிலிருக்கும் அடுத்த `ஏ நெகட்டிவ்’ ரத்த வகை நபருக்குப் பொருத்தப்படும்.

அரசு மருத்துவமனையில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்தால், அவருடைய உறுப்புகள் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நபர்களுக்குப் பொருத்துவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஒருவேளை அந்த நேரத்தில் யாருக்கும் பொருந்தவில்லை என்றால், அந்த உறுப்பு தனியார் மருத்துவமனைக்குச் செல்லும். நம் மாநிலத்தில் பொருந்தவில்லையெனில், வெளி மாநிலத்துக்குச் செல்லும். ஒருவேளை மூளைச்சாவு அடைந்தவர் தனியார் மருத்துவமனையில் இருந்தால், அவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, அந்த மருத்துவமனையில் பதிவுசெய்து காத்திருப்பில் இருப்பவர்களுக்குத்தான் பொருத்தப்படும்.

முன்னுரிமைப் பட்டியலிலிருக்கும் யாருக்கும் பொருந்தவில்லை என்றாலோ அல்லது ஏற்க முன்வராமல் இருந்தாலோ மாநிலங்களுக்கான மண்டல அமைப்பின் (Regional Organ and Tissue Transplant Organization) மூலம் இந்திய அளவில் பதிவுசெய்த இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியர்கள் யாருக்கும் பொருந்தவில்லையென்றால் மட்டும்தான், அடுத்தகட்டமாக வெளிநாட்டவருக்கு உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடியும்.

பின்பற்றப்படும் நடைமுறைகள்
அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவருடைய உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாகத்தான் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்பவர்களையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும் இந்த ஆணையம்தான் ஒருங்கிணைக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைந்திருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச்சாவு ஏற்பட்டால், உடனே உறுப்பு தான ஒருங்கிணைப்புக்குழுவுக்குத் தெரிவிப்பார்கள். பரிசோதனைகளுக்குப் பின்னரும் அவருக்கு நினைவு திரும்ப வாய்ப்பில்லை எனும்போது, மூளைச்சாவு அடைந்தவர் என்பது உறுதிசெய்யப்படும். அதன் பிறகு மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களின் சம்மதம் கிடைத்ததும், அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள். பின்னர், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு உடல் உறுப்புகள் வழங்கப்படும்.

விபத்தில் சிக்கி, மூளை செயலிழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப்போவதை, மருத்துவர்கள் ‘கோமா நிலை’ என்கிறார்கள். இதில், `தன்னிலைக்கு மீண்டுவரக்கூடிய நிலை’ மற்றும் `மீண்டுவர முடியாத நிலை’ என இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் மீண்டுவர முடியாத நிலையைத்தான் `மூளைச்சாவு’ என்கிறார்கள். மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடித்தாலும், அவரால் சுயமாக மூச்சுவிட முடியாது.

எனவேதான், `மூளைச்சாவு என்பது மரணமடைந்ததற்குச் சமம்’ என்கிறார்கள். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு, செயற்கை சுவாசம் கொடுக்கப்படாவிட்டால், சில மணி நேரத்தில் இறந்துவிடுவார். செயற்கை சுவாசக்கருவி (Ventilator) மூலம் பிராணவாயு அளிக்கப்பட்டு, மூளை தவிர மற்ற உறுப்புகள் தற்காலிகமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள்.

சிலரின் உடல், தானமாகப் பெற்ற உறுப்புகளை ஏற்றுக்கொள்ளாது. காரணம், ஒருவரின் உடல் உறுப்பை மற்றொருவருக்குப் பொருத்தும்போது உடலிலுள்ள அந்நியப் பொருள் எதிர்ப்பு அமைப்பு (Foreign Body Reaction) அதை அனுமதிக்காமல் சில சந்தர்ப்பங்களில் நிராகரித்துவிடும். இது, அனைவருக்குமே பொருந்தும். அதனால்தான், அதற்கான மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்ட பிறகே தானமாகப் பெற்ற உறுப்பைப் பொருத்துவார்கள் மருத்துவர்கள். மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர், வாழ்நாள் முழுக்க மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

மூளைச்சாவு எப்படி உறுதிசெய்யப்படுகிறது?
ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு மருத்துவர் அறிவித்துவிட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவக்குழு சான்று அளிக்க வேண்டும்.

மூளைச்சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை நிர்வாகத்திலிருக்கும் ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்த நபருக்குச் சிகிச்சையளித்த ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையிலிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவர் அல்லது மற்றொரு மருத்துவர் ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் மருத்ததவர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் மூளைச்சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார்.

அனிச்சைச் செயல்கள் (Brainstem Reflexes) பரிசோதிக்கப்பட்டு, அவை நிரந்தரமாகச் செயலிழந்ததைச் சுமார் ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டு தடவை உறுதிசெய்வார்கள். அதாவது, மூளைச்சாவு அடைந்தவர் கண்மணியின் அளவு எப்படி இருக்கிறது, அது சுருங்கி விரிகிறதா என்று சோதிக்கப்படும். காட்டன் துணியால், கருவிழி அசைகிறதா எனத் தொட்டுப் பரிசோதிப்பார்கள். ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் அகற்றப்பட்ட பிறகு, அவரால் சுயமாக மூச்சுவிட முடிகிறதா என்று சோதிக்கப்படும்.

வாயில் பிளாஸ்டிக் ட்யூப் வைத்து, இருமல் இருக்கிறதா என்றும், காதுக்குள் சுடுநீர் ஊற்றி கண்ணசைவு இருக்கிறதா என்றும் சோதிக்கப்படும். இப்படி, பலகட்டச் சோதனைகளை நடத்திய பிறகே, ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பது உறுதிசெய்யப்படும். அதற்குப் பிறகு `சுவாச நிறுத்தப் பரிசோதனை’ என்ற ஒன்றையும் செய்து மூளைச்சாவை (Brain Death) உறுதிசெய்வார்கள்.
சோதனையின்போது, மூளைச்சாவு அடைந்தவர் உடல், குளிர்ந்தநிலையில் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் அவரது உடலிலிருந்து ரத்தம் வெளியேறி, உடல் சூடான நிலையிலும் இருக்கக் கூடாது. நினைவு திரும்பக்கூடிய கோமாவாக இருக்கக் கூடாது.

உறுப்புகளை தானம் செய்வதற்கான காலக்கெடு
மூளைச்சாவு அடைந்தவரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், சருமம் ஆகியவற்றையும் மற்றவர்களுக்குப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகளைப் பதப்படுத்திவைத்திருக்கவும், பயன்படுத்தவும் அதற்கென உரிய காலக்கெடு வரையறுக்கப்பட்டிருக்கிறது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளைப் பதப்படுத்தி, குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் அல்லது நாள்களுக்குள் அல்லது வருடங்களுக்குள் பிறருக்குப் பொருத்தவேண்டியது அவசியம். அவற்றுக்கான காலக்கெடு...
இதயம் (Heart) : 6 மணி நேரம்வரை
சிறுநீரகம் (Kidney) : 72 மணி நேரம்வரை
கல்லீரல் (Liver) : 24 மணி நேரம்வரை
நுரையீரல் (Lungs) : 4-6 மணி நேரம்வரை
கணையம் (Pancreas) : 24 மணி நேரம்வரை
விழித்திரை (Cornea) : 14 நாள்கள்வரை
எலும்பு மஜ்ஜை (Bone Marrow) : 5 நாள்கள்வரை
சருமம் (Skin) : 5 வருடங்கள்வரை
எலும்பு (Bone) : 5 வருடங்கள்வரை
இதயத்தின் வால்வுகள் ( Heart Valves) : 10 வருடங்கள் வரை.

உறுப்புகள் தானத்துக்குப் பதிவுசெய்வது எப்படி?
உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், அவர் இருக்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து, பதிவுசெய்துகொள்ளலாம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவுசெய்துகொள்ளலாம். இன்னொரு வழிமுறையும் உண்டு. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையை, தமிழக அரசு இதற்கென்றே அமைத்திருக்கும் www.tnos.org இணையதளத்தில் பதிவுசெய்து அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

டோனர் கார்டு
இந்த அட்டையில் பெயர், ரத்தப் பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள்... என எந்த உறுப்பை தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும். உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவுசெய்துகொண்டவர்கள் கண்டிப்பாகத் தங்கள் குடும்பத்தினரிடம் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருக்கவேண்டியது அவசியம்.

அப்போதுதான் இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க முடியும். உறுப்பு தானத்தை பொறுத்தவரை பதிவு செய்திருந்தால்தான் உடல் தானம் செய்ய வேண்டும் என்பதில்லை. இறந்தவர் அல்லது இறக்கும் தறுவாயிலுள்ள மூளைச் சாவடைந்தவர்களின் குடும்பத்திலிருக்கும் உறுப்பினர்கள் நினைத்தால் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். எனவே, பதிவுசெய்தவரைவிட அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதற்கான பொறுப்புகள் அதிகம்.

ஏன் தானம் அவசியம்?
மண்ணில் மக்கியோ, நெருப்பில் எரிந்து சாம்பலாகியோ வீணாய்ப் போகும் இந்த உடல் உறுப்புகள், பிறருக்குப் பொருத்தப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு கிடைக்கும். நீங்கள் சம்பாதித்த பணத்தையோ, சேர்த்துவைத்திருக்கும் சொத்துகளையோ அடுத்த சந்ததிக்காக விட்டுச் செல்லும்போது, உங்கள் உறுப்புகள் மட்டும் ஏன் வீணாக மண்ணில் மக்கிப் போக வேண்டும்? அவையும் நம்மோடு வாழ்ந்த சமுதாயத்துக்குப் பயன்படட்டுமே!’’
- ஜி.லட்சுமணன்

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.