மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்

சேவை - 13ஓவியம்: பாலகிருஷ்ணன்

சந்த்தின் தந்தை அதிகாலையில் தியானம் செய்ய உட்கார்ந்துவிட்டால், வீடே அமைதியாகிவிடும். அப்போது, ஒன்பது வயதுச் சிறுவன் வசந்த், சத்தம் எழுப்பாமல் பூனைபோல நடந்துவந்து எதிரில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருப்பான். ஒருநாள், அவர் தியானத்தை முடித்த பின்னர் கேட்டான்.

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்

“எனக்கும் தியானம் செய்யச் சொல்லித் தருகிறீர்களா?”

“நான் சொல்லித் தர முடியாது. என் குருவிடம் அழைத்துச் செல்கிறேன்.”

எப்போது குருவைப் பார்ப்போம் என ஆர்வத்தோடு காத்திருந்தான் வசந்த். ஒருநாள் அதிகாலையிலேயே அவனை அழைத்துப் போனார் அப்பா. சிறிய அறை. அதனுள்ளே நூறு பேருக்கு மேல் நின்றுகொண்டிருந்தார்கள். வசந்த், முன் வரிசையில் அமர்ந்துகொண்டான். வெள்ளை குர்தாவில், எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார்; சாந்தமான புன்னகையோடு அமர்ந்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்



“யார் இந்தத் தாத்தா?” - தந்தையிடம் கேட்டான் வசந்த். “இவர்தான் குரு!” என்றார் தந்தை. பகவத் கீதையிலிருந்து ஒரு கதை; யோகா குறித்து சில விஷயங்கள்; ஜனனம், கர்மா, பக்தி குறித்து கொஞ்சம் தத்துவங்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் குரு. அவரது பேச்சில் கட்டுண்டு கிடந்தான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. குருவின் சொற்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

அடுத்த நாள் வசந்த், குருவிடம் சென்று “நான் உங்களிடம் தீட்சை பெற விரும்புகிறேன்” என்றான். அவர் புருவங்களை உயர்த்திப் பார்த்தார்.  வசந்தின் தலையில் தனது கையை வைத்தார். அவன் காதுகளில் மந்திரம் ஒன்றைச் சொன்னார். பின்பு, “நீ ஆயுர்வேத மருத்துவம் கற்றுக்கொள்வாய். பின்னர் ஆயுர்வேதம் கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியராகத் திகழ்வாய். அதற்காக வெளிநாடுகளுக்கெல்லாம் செல்வாய். மருத்துவப் புத்தகங்கள் எழுதுவாய்!” என்றார்.

“எனக்கு ஆங்கிலமே தெரியாதே. நான் எப்படி வெளிநாடுகளுக்கெல்லாம் செல்வேன்?” என்று கேட்டான். “தினமும் பிரார்த்தனை செய். எல்லாம் தானாக நடக்கும்!”

1943-ம் ஆண்டில் பூனாவில் பிறந்த வசந்த் லட், 1968-ம் ஆண்டில் பூனா பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளநிலைப் பட்டமும் (BAMS),  1980-ம் ஆண்டில் ஆயுர்வேத அறிவியலில் முதுகலைப்பட்டமும் (Master of Ayurvedic Science) பெற்றார். ஆயுர்வேத மருத்துவராகப் பயிற்சி எடுத்துக்கொண்டே, ஆயுர்வேதம் கற்றுக் கொடுக்கும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

1970-களின் இறுதியில் அமெரிக்காவிலிருந்து வந்த லென்னி பிளாங்க், வசந்த்தின் ஆயுர்வேத மருத்துவம் குறித்த உரைகளால் கவரப்பட்டார். “நீங்கள் அமெரிக்காவுக்கு வரலாமே. அங்கே மக்கள் இதை விரும்புவார்கள்” என்றார் லென்னி. “அமெரிக்கா, மருத்துவத்தில் மிகவும் முன்னேறிய நிலையை எட்டியிருக்கிறது. ஆயுர்வேதமோ மிக மிகப் பழைமையானது. இதை எப்படி அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?’’ வசந்த், சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார். 

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்

“உங்களுக்குப் புரியவில்லை. அமெரிக்கர்களுக்கு இது தேவை. பழைமையான இந்த மருத்துவத்தை அவர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.”

வசந்த், அமெரிக்காவுக்குச் சென்றார். ‘Santa Fe College of     Natural Medicine’-ல் சுமார் 200 மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பிறகு, பாரம்பர்ய மருத்துவ நிறுவனத்தில் (Institute of Traditional Medicine-ITM) நிறுவனத்தில் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். மாலை நேரத்தில் சிறு கிளினிக் ஒன்றில், தன்னைத் தேடி வருபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். சுக்கு, மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, ஏலக்காய் என்று சிறிய பொருள்களைக்கொண்டே மருத்துவம் பார்த்தார். ஒரு கட்டத்தில் பாரம்பர்ய மருத்துவ நிறுவனம்  மூடப்பட்டது. 1984-ம் ஆண்டில் டாக்டர் வசந்த், நண்பர்கள் உதவியுடன், நியூ மெக்ஸிகோவின் ஆல்புகெர்கி நகரில் `தி ஆயுர்வேதிக் இன்ஸ்டிட்யூட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். மாணவர்களுக்கு ஆயுர்வேதம் கற்றுக் கொடுக்கும், மக்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கும் லாப நோக்கற்ற சேவை நிறுவனம்.

தொடர்ந்து பல்வேறு அமெரிக்க நகரங்களுக்குப் பயணம் செய்த வசந்த், அங்கே மக்களிடையே ஆயுர்வேத மருத்துவம் குறித்த சொற்பொழிவாற்றி, அவர்களுக்கு மாற்று மருத்துவத்தில் நம்பிக்கையை உண்டாக்கினார். அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து, தனது ஆயுர்வேத மருத்துவச் சேவையைத் தொடர ஆரம்பித்தார். டாக்டர் வசந்த்தால் கண்டங்கள் தாண்டியும் ஆயுர்வேதத்தின் பெருமை பரவ ஆரம்பித்தது.  

மாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்

நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையளிக்கக் கட்டணம் எதையும் அவர் வசூலிப்பதில்லை. அவரது நிறுவனத்தில் யோகா, சம்ஸ்கிருதம், இயற்கை உணவுகள், அக்குபிரஷர் சிகிச்சை என்று பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன. ‘ஆயுர்வேதமென்பது ஆயுள்வேதம்... ஆயுளை நீட்டிக்கும் இயற்கையான மருத்துவ முறை’ என்று உணர்ந்துகொண்ட அமெரிக்கர்களும், பிற தேசத்தவர்களும், அமெரிக்கவாழ் இந்தியர்களும் அவரைத் தேடி வருகிறார்கள். சிகிச்சை எடுத்து, பலன் பெறுகிறார்கள். ஆயுர்வேதத்தைக் கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதுவரை டாக்டர் வசந்த் ஆயுர்வேதம் குறித்து 11 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றுமே ஆயுர்வேதத்தின் பெருமைகளை உலகெங்கும் பரவச்செய்திருக்கின்றன. பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரப்பியவிதத்தில், உலகின் முதல் இந்திய-அமெரிக்க ஆயுர்வேத மருத்துவர் வசந்த்தின் பணி மிக மிக முக்கியமானது. அதி நவீன மருத்துவம் அசுரப் பாய்ச்சலோடு வளரும் இந்த நூற்றாண்டிலும், ஐயாயிரம் வருடப் பழைமையான ஆயுர்வேதத்தின் பெருமையை அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியிலும் பரப்பும் டாக்டர் வசந்த்தின் சேவை பெருமைக்குரியது. இவருடைய சேவைகளை விளக்கும் ‘The Doctor from India’ என்ற ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சேவை தொடரும்...