
சேவை - 14ஓவியம்: பாலகிருஷ்ணன்
காலையிலேயே தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார் பெஷாஜ் ராம்டெகெ. அன்றைய அவரது பயணம் நீண்ட மலைப்பாதையில் இருக்கலாம் அல்லது அடர்ந்த வனத்துக்குள் இருக்கலாம். சில நேரம் பல மைல் தொலைவிலிருக்கும் பழங்குடி கிராமத்தை நோக்கியதாக இருக்கலாம். தீவிரவாதத் தாக்குதல் நிறைந்த ஏதாவது ஒரு பகுதியை நோக்கிக்கூட இருக்கலாம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெள்ளை கோட் அணிந்துகொண்டு, கையில் ஸ்டெத் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டு சைக்கிளில் ஏறிவிடுவார் டாக்டர் பெஷாஜ். நடக்கக்கூட பாதையற்ற கிராமத்தைநோக்கி, ஆற்றைக் கடந்து, அந்தரத்தில் தொங்கும் மரப்பாலத்தைக் கடந்து அவரது பயணம் நீளும். ஏனென்றால் அங்கே ஒரு குழந்தையோ, நோய்வாய்ப்பட்ட பெரியவரோ அல்லது ஒரு கர்ப்பிணியோ அவரை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கக்கூடும். அங்கு வாழும் சுமார் 88,000 மக்களுக்காக உழைக்கும் ஒரே மருத்துவர், பெஷாஜ் மட்டுமே.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் பெஷாஜ். அவரது பெயருக்கு சம்ஸ்கிருதத்தில் ‘மருந்து கொடுப்பவன்’ என்று அர்த்தம். பெஷாஜின் தந்தைக்கு, பிற்காலத்தில் தன் மகன் பிற்படுத்தப்பட்ட மக்களின் வலி தீர்க்கும் மருத்துவனாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. பெஷாஜ், நன்றாகப் படித்து, ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 2002-ம் ஆண்டு மருத்துவராகத் தேர்ச்சிபெற்றார். இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கேர் மாவட்டத்திலுள்ள அந்தாகர் சமூக மருத்துவ மையத்தில் பணியாற்ற, டாக்டர் பெஷாஜுக்கு உத்தரவு வந்தது. ‘வேண்டாம். வேறு எங்காவது எனது பணி உத்தரவை மாற்றிக் கொடுங்கள்’ என்று பெஷாஜ் வந்து நிற்பார் என்றே உயரதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

காரணம், நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் உண்டாகும் பகுதிகளை ‘சிவப்புத் தாழ்வாரம்’ (Red Corridor) என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. பெஷாஜ் பிறந்த பஸ்தர், அவருக்குப் பணி உத்தரவு கொடுக்கப்பட்ட காங்கேர் மாவட்டங்கள் என எல்லாம் சிவப்புத் தாழ்வாரத்தின் கீழ் வருபவையே. அந்தப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான அரசு மருத்துவ மையங்களில் ஒரு மருத்துவர்கூட கிடையாது. யாரும் வேலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக்கொண்டாலும், சில வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஆனால், டாக்டர் பெஷாஜ், மிகுந்த மகிழ்ச்சியுடன் தனக்கான பணி உத்தரவை ஏற்றுக் கொண்டார். மக்களிடமிருந்து உதித்து வந்த அவரால் மட்டுமே அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்தாகர் பகுதி சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது. மொத்த மக்கள்தொகையில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பழங்குடியினர். அடர்ந்த வனத்துக்கு நடுவே, சரியான பாதைகூட இல்லாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் காணப்படும் பல கிராமங்களில் மக்கள் வசிக்கிறார்கள். சிவப்புத் தாழ்வாரப் பகுதியில் கவனிப்பாரற்றுப் பாழடைந்து கிடந்த அந்த அந்தாகர் மையத்துக்கு வந்து, தனது மருத்துவச் சேவையை மனதிருப்தியுடன் தொடங்கினார் டாக்டர் பெஷாஜ்.

ஆரம்பத்தில் நோயாளிகளே வரவில்லை. ஜீப், மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிளில் ஊர் ஊராகச் சென்றார் பெஷாஜ். சாலை வசதி இல்லாத இடங்களுக்குக் கால்நடையாகவே நடந்து செல்வதும் உண்டு. அந்தப் பழங்குடி மக்களிடையே மருத்துவம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார். காலரா, மலேரியா போன்ற நோய்கள் பரவிய கிராமங்களில் வாரக்கணக்கில் முகாம் அமைத்துத் தங்கினார். பெரும்பாலும் ஒற்றை ஆளாக, பதினைந்து வருடங்களாகத் தன் மருத்துவச் சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார், முற்றிலும் இலவசமாக! ஏதோ ஒரு கிராமத்தை நோக்கி பெஷாஜ் சென்று கொண்டிருக்கும்போதே குண்டுகள் வெடிக்கும்; தோட்டாக்கள் தெறிக்கும்; கட்டுக்கடங்காத வன்முறை கண்முன் நிகழும். ‘டாக்டர்... உங்கள் உயிருக்கு ஆபத்து. தயவுசெய்து வேறு எங்காவது போய்விடுங்கள்’ என்று சிலர் கெஞ்சுவார்கள். ‘என் கடன் இந்த மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே’ என்று பெஷாஜ், அந்தாகர் மையத்தில்தான் மையம் கொண்டிருக்கிறார்.

மழைக்காலங்களில் சில கிராமங்களுக்குச் செல்ல முடியாது. தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும். அதனால், மழை ஆரம்பிக்கும் முன்னதாகவே அந்த கிராம மக்களுக்கு மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதற்குத் தேவையான மருந்துகளைக் கொண்டு சேர்த்துவிடுவார். ஆரம்பத்தில் அவரை ஏலியன்போலப் பார்த்த பழங்குடி மக்கள், போகப்போக தாங்கள் வணங்கும் தெய்வங்களில் ஒருவராகப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
டாக்டர் பெஷாஜுக்குப் பிறகு ஒரு சில டாக்டர்கள் அந்தப் பகுதியில் பணிக்குச் சேர்ந்தார்கள். ஆனால், அவர்களெல்லாம் வந்த வேகத்திலேயே தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பிப் போனார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளில் டாக்டர் பெஷாஜுக்குப் பலமுறை பணிமாற்றல் உத்தரவு வந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொருமுறையும் போராடி அதை ரத்து செய்திருக்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டால், மீண்டும் அந்த மருத்துவ மையம் மூடப்பட்டுவிடும் என்பது அவருக்குத் தெரியும்.
டாக்டர் பெஷாஜ் - சத்தீஸ்கர் சிவப்புத் தாழ்வாரத்தின் ஒன் மேன் ஆர்மி!
சேவை தொடரும்...

கறிவேப்பிலை கைகொடுக்கும்!
ஃப்ரெஷ்ஷான கறிவேப்பிலை 35 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளவும். அவற்றைக் கழுவி, உலரவைக்கவும். இரண்டு கப் சுத்தமான தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் உலர்ந்த கறிவேப்பிலையைப் போட்டு, மேலும் 10 நிமிடங்களுக்கு குறைந்த தணலில் கொதிக்கவைத்து, ஆறியதும் வடிகட்டி பத்திரப்படுத்தவும். தினமும் இரவில் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்துவிட்டு, காலையில் மைல்டான ஷாம்பூவால் அலசவும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியைத் தூண்டும் அருமையான சிகிச்சை இது.