மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 2

இப்படிக்கு வயிறு! - 2

இப்படிக்கு வயிறு! - 2
##~##

யிறு மற்றும் குடல்சார் நோய்கள் நிபுணர் டாக்டர் செல்வராஜன் வயிற்றின் சார்பாகப் பேசும் தொடர் 

கையில் எடுத்து வாயில் போட்டால்... சாப்பாடாகிவிட்டது என்று உங்களுக்கு அர்த்தம். ஆனால், அதைச் செரிமானமாக்க நான் எப்படி எல்லாம் சிரமப்படுறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் சாப்பிடும் அதேவேகத்தில உணவு இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குப் போவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சிறுகுடலால் உணவை உள்வாங்க முடியும். அதற்கு முன்னரே... அதாவது வாயிலேயே செரிமானத்துக்கான வேலை ஆரம்பமாகிவிடுகிறது. உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் அந்த வேலையைச் செய்கின்றன. பிறகு உணவுக்குழாய் வழியே இரைப்பையை நோக்கி உணவு பயணிக்கிறது.

இப்படிக்கு வயிறு! - 2

இரைப்பை தசைச்சுவர்களை சுருக்கி விரித்து மூடியபடி உணவை அரைக்கிறது. இரைப்பையின் முடிவுப்பகுதியில் பைலோரஸ் என்ற பெயரில் ஒரு சின்னத்துவாரம் உண்டு. அதுதான் இரைப்பையில் இருந்து உணவை சிறுகுடலுக்கு அனுப்பும். அங்கே உணவுப் பொருட்களை செரிக்க வைக்கும் விதமாக ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் செயல்பட ஆரம்பிக்கும். எலும்பு மாதிரியான உணவுகளைக்கூட இவை செரிக்க வைத்துவிடும். ஆனால், இந்த அசகாய சூரர்களால் ஆல்கஹாலை மட்டும் எதுவும் செய்ய முடியாது. அதனால், ஆல்கஹால் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும்! (குடிகார பெருமக்களே... உங்களுக்காகத்தான் இவ்வளவு அக்கறையாக சொல்றேன்) ரத்தத்துக்குள் புகுந்து அந்த சரக்கு ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன? ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டாலேயே ஆல்கஹாலை எதுவும் செய்ய முடியவில்லை என்றால், மற்ற உறுப்புகளை அது என்ன பாடுபடுத்தும் என்பதை நீங்களே கற்பனைப் பண்ணிப் பாருங்கள்... சரி, நம் விஷயத்துக்கு வருவோம்...

சிறுகுடலை, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் என மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் உணவில் நிறைய ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருக்கிறது. ஆனால், சிறுகுடலில் இந்த அமிலத்துக்கு எந்த வேலையும் இருக்காது. அதனால் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை செயல் இழக்கச் செய்வதற்கு கல்லீரலில் இருந்து சீரண நீர்கள் சுரந்து சிறுகுடலின் முதல் பகுதியான முன் சிறுகுடலுக்குச் செல்லும். அதேபோல் கணையத்தில் இருந்தும் சீரண நீர் வந்து சேரும். இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடினமான ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை கைப்புள்ள கணக்காக ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். அப்புறம்தான் அடுத்தகட்ட முக்கியமான செரிமான வேலை தொடங்கும்.

முன் சிறுகுடலில் இருந்து உணவு நடுச்சிறுகுடல் மற்றும் கடைச்சிறுகுடலுக்கு வரும். இங்கேதான் உணவில் இருக்கும் புரதச்சத்து அமினோ அமிலமாவும், மாவுச்சத்து சர்க்கரையாகவும், கொழுப்பு - கொழுப்பு அமிலமாகவும் மாறி கிரகிக்கும் வேலை நடக்கிறது. அதோடு உணவில் மிச்சம் இருக்கும்  சக்தியையும், கழிவையும் பிரித்தெடுக்கும் வேலையும் இங்குதான் நடக்கும். அப்புறம் கொழுப்பு சக்தி ரத்தக் குழாய்களுக்கும், கழிவுகள் பெருங்குடலுக்கும் அனுப்பிவைக்கப்படும். உணவில் இருந்து எடுக்கப்பட்ட அமினோ அமிலமும், சர்க்கரையும் கல்லீரலுக்குப் போகும்.

உணவுக்கழிவுகள் பெருங்குடலுக்குள் வந்து சேர்ந்ததும் அதில் உள்ள 80 சதவீத தண்ணீரையும் அப்படியே அது உறிந்து எடுத்துக்கொள்ளும். இப்படித் தண்ணீரை உறிந்து எடுக்காமல் பெருங்குடல் ஸ்ட்ரைக் பண்ணும்போதுதான் 'வயிற்றுப் போக்கு’ ஏற்படுகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் பெருங்குடல் வேலை செய்யும்போது, அங்கு கோழை மாதிரியான ஒரு திரவம் சுரக்கும். உணவுக்கழிவு இளகிய தன்மையை அடைவதற்கு இதுதான் உதவுகிறது. கழிவு, இளகியவுடனே மலக்குடலை (Rectum) அடைந்து, அங்கிருந்து ஆசனவாய் வழியே வெளியேறுகிறது.

குடல் பாதிப்புகளுக்கு அடிப்படைக் காரணமே, சுகாதாரம் இல்லாத உணவுகள்தான். என்னுடைய சிரமங்களை நினைத்துப் பார்த்தாலே சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுக்க நீங்கள் அக்கறை காட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், என்னைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்... சுத்தமாகவும் தரமாவும் நீங்கள் சாப்பிட்டாலே, என் வேலை அப்படியே பாதியாகிவிடும். உங்களுக்காக இந்த அளவுக்குப் போராடும் எனக்காக இதைக்கூட செய்ய மாட்டீர்களா என்ன?

- மெல்வேன்... சொல்வேன்...