மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

சேவை - 17ஓவியம்: பாலகிருஷ்ணன்

1980-90களில் அந்தப் பிரதேச மக்கள் ஓர் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். அதாவது, அவர்களது பகுதியில் ஆண்டுதோறும் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. `நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என்று அந்த மக்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரின் வாயும் புகையிலையை மென்றுகொண்டிருந்தன.

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

இந்தியா-பங்களாதேஷ் எல்லையில், அஸ்ஸாமின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது பாராக் பள்ளத்தாக்கு.  அது இயற்கை வளம் சூழ்ந்த பகுதி. என்றாலும், ஓர் உருப்படியான மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால், கௌஹாத்திதான் ஒரே வழி. 350 கி.மீ தூரம் இருக்கும். சாலை வசதிகள் சரியில்லாத மலைப்பிரதேசம்; 24 மணி நேரமாவது பயணம் செய்யவேண்டியிருக்கும். அந்த பாராக் பகுதியில்தான் புற்றுநோய் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. தங்கள் பகுதியில் மருத்துவமனை ஒன்று அவசியம் என்று முடிவுசெய்த சில மனிதர்களின் கடுமையான முயற்சியால், 1992-ம் ஆண்டில் அங்கே கேச்செர் மாவட்டத்தின் தலைநகரான சில்சாரில், `கேச்செர் கேன்சர் ஹாஸ்பிட்டல் சொசைட்டி’ (Cachar Cancer Hospital Society) தொடங்கப்பட்டது. ஆனால், பணபலம் இல்லாததால், போதுமான வசதிகளைக் கொண்டுவர இயலவில்லை; நல்ல மருத்துவர்களையும் பணிக்கு அமர்த்த முடியவில்லை. பல ஆண்டுகளாக முழுமையாகச் செயல்படாமல் பெயரளவுக்கு அந்த மருத்துவமனை இயங்கியது.

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்



டாக்டர் ரவி கண்ணன்... சென்னைவாசி. அடையாறு புற்றுநோய் மையத்தில் 15 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவருக்கு கேச்செர் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரின் மனைவியும் மகளும் தயங்கினார்கள். `சில காலம் மட்டும் பணியாற்றிப் பார்ப்போமே’ என்று முடிவெடுத்து சில்சாருக்குக் குடும்பத்துடன் வந்தார். 2007-ம் ஆண்டு கேச்செர் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தார். அந்தப் பகுதியில் புற்றுநோயின் தாக்கம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதையும், தனது மருத்துவச் சேவை அந்த மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்துகொண்டார். 

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

``என் வழிகாட்டியான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்வார். `ஒரு நோயாளிக்கு மருத்துவம் செய்துகொள்ளும் அளவுக்கு வசதியில்லை என்றால் அதற்கான வழிகளைச் செய்து கொடுப்பதும் ஒரு டாக்டரின் கடமையே!’ ’’ - டாக்டர் ரவி கண்ணன் பேட்டி ஒன்றில் சொன்ன வார்த்தைகள் இவை. கேச்செரில் அவரிடம் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள். இலவச மருத்துவச் சேவை கிடைக்காவிட்டால், இன்னொரு முறை மருத்துவமனைக்கு வர மாட்டார்கள். நோய் முற்றி இறப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. தவிர, அவர்களால் சென்னை அடையாறுக்கோ, மும்பை கேன்சர் மையத்துக்கோ அல்லது வேறு நகரங்களுக்கோ பயணம்செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சையை கேச்செரிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் ரவி கண்ணன் இயங்கினார். 

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

பத்து ஆண்டுகள் அயராத உழைப்பு. அந்த மருத்துவமனை, `கேச்செர் கேன்சர் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர்’  (Cachar Cancer Hospital and Research Centre - CCHRC) ஆக வளர்ந்து நின்றது. ரவி கண்ணன் அங்கே வரும்போது பணியில் இருந்தவர்கள் வெறும் 23 பேர். 25 படுக்கைகள் மட்டுமே இருந்தன. இப்போது 200-க்கும் மேற்பட்டோர் இந்த மையத்தில் பணியாற்றுகிறார்கள். 

மாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்

100 படுக்கைகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற்று முற்றிலும் மீண்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 14,000 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அஸ்ஸாம் மட்டுமின்றி திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கான முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக `சிசிஹெச்ஆர்சி’ (CCHRC) செயலாற்றிவருகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை, நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை, மலிவு விலையில் மருந்துகள், நோயாளிகளுக்கு இலவச உணவு, மற்றவர்களுக்கு மலிவு விலையில் உணவு, மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுடன்கூடிய தங்கும் வசதி என அனைத்தையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் டாக்டர் ரவி கண்ணன். நோயாளி சிகிச்சை பெறும்போது அவர் உடனிருப்போர், தினச் சம்பள அடிப்படையில் அங்கே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளின் இல்லத்துக்கே சென்று அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து கவனிக்கிறார்கள். மையத்துக்கு வர முடியாத நோயாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று சிகிச்சை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

``என்னிடம் அர்ப்பணிப்புடன் இயங்கும் ஒரு குழு இருக்கிறது. வேறு ஏதாவது பெருநகரத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றாமல், இங்கே சேவை நோக்குடன் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நோயிலிருந்து குணமாகி, மகிழ்ச்சியுடன் சிந்தும் அந்தப் புன்னகைதான் எங்களுக்கான திருப்தி. அந்த உணர்வை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.’’ நெகிழ்ந்துபோய்ச் சொல்கிறார் ரவி கண்ணன்.

சேவை தொடரும்...