
இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3
மூணு மணி நேரத்துக்கு முன்னால சுட்டு, காய்ஞ்சுபோன தோசையும், தாளிக்காத தேங்காய்த் துவையலும்போல, வாழ்க்கை வறவறன்னு இருக்கு. மீசை மட்டும் வெளுத்துச்சா... இல்லை சாயமே வெளுத்துருச்சா...’ என நாற்பதுகளின் அங்கலாய்ப்பு இல்லாத பெண்கள் நகர்ப்புறத்தில் குறைவு. ‘ஏன் குளுகுளுன்னு மெட்ரோலதான் வரணுமாக்கும்? எவ்வளவு காஸ்ட்லி... நேத்துவரை சாதாரண எலக்ட்ரிக் டிரெயின்லதானே வந்தே... இப்போ என்னாத்துக்கு மெட்ரோ...” என்ற கேள்வியில் வெறுத்துப்போன பெண்கள் சென்னையில் கணிசம்பேர் உண்டு. கொளுத்தும் வெயிலில், நம்பிக்கைகளையும் நான்குமாதக் குழந்தைகளையும் சுமந்துகொண்டு, பேருந்து அட்டவணை, குட்டி டைரி, வெட்டிவைத்த வெள்ளரி, ஒரு ரூபாய் சைனா பேனா என எளிய பொருள்களை நசுங்கி நைந்து விற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு சிசேரியனில் தொங்கிப்போன தொப்பையைப் பற்றிக் கவலைகள் இல்லை. ஆனால், சமீபகாலமாகத் தகதகவென எரியும் பாத எரிச்சல் பற்றியும், மாதவிடாய்க்கு முன்னதாக மட்டும் கனக்கும் மார்பு, இப்போது அடிக்கடி கனத்து வலிப்பது பற்றியும் நிச்சயமாகக் கவலை உண்டு. ஒருவேளை புற்றாய் இருக்குமோ என்ற எண்ணம் அவர்களின் இயல்பைக் குலைக்கிறது. ஆனால், வீட்டுக்குப் போனதும் பொரியலுக்கு பீன்ஸை அளவாய் நறுக்குவதிலும், மகனுக்கு முறுகலாய்த் தோசை சுடுவதிலும் அந்த எரிச்சலும் கனத்தலும் மறந்துபோகும்.

நாற்பதில், பெண்ணானவள் நிச்சயம் படுநலமாக இருந்தேயாக வேண்டும். நாற்பதின் ஆணின் நலத்தைவிட, பெண்ணின் நலம் ஒருதுளி உசத்தியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால், முதியவருக்கு வீட்டில் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதியவளுக்குக் கொடுக்க நினைக்காத கொடூர சமூகம் இது. நாற்பதில் பெண் தன் உள நலத்தையும் உடல் நலத்தையும் சீராக வைத்திராவிடில் முதுமை, முக்கல் முனகலாய் மாறி வலிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
முதலில் எடை. திருமணச் சமயத்தில் சிற்றிடையுடன் சிணுங்கித்திரிந்த பெண், நாற்பதில் கன்னம், தாடை, வயிறு என அனைத்திலும் தொப்பை வந்து பென்குயின் போல நடக்க ஆரம்பிப்பதுதான் நலம் நசுங்க ஆரம்பிப்பதன் அடையாளம். உங்கள் தொப்பை எவ்வளவு ஆபத்தானது என சி.டி., எம்.ஆர்.ஐ எல்லாம் எடுத்துக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய கணக்கு போதும்.தொப்பை - இடுப்பு விகிதம்(waist hip ratio)!
அதிகம் சாப்பிடாமல் வயிறு இயல்பாக உள்ள நிலையில், தொப்புளை மையப்புள்ளியாக வைத்து, வயிற்றைச்சுற்றி இஞ்ச் டேப்பால் அளந்துபாருங்கள். அடுத்து, இடுப்பின் (பெல்ட் போடுவது மாதிரி) சுற்றளவை அளந்துகொள்ளுங்கள். இப்போது, வயிற்றுச் சுற்றளவை இடுப்புச் சுற்றளவால் வகுக்க வேண்டும். ஆணுக்கு 0.95-க்கு மேலிருந்தாலோ, பெண்ணுக்கு 0.85-க்கு மேலிருந்தாலோ, இதயநோய், பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்கிறது ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகம் (நம்ம டாக்டர்கள் சொன்னாங்கன்னா கேக்க மாட்டாங்க... அதனாலதான் ஹார்வர்டு பல்கலைக்கழகச் சான்று கொடுக்க வேண்டியிருக்கு).
அப்புறம், இன்னொரு முக்கிய விஷயம்... நாற்பது வயதில் குனிந்து நிமிர்ந்து, இடுப்பு அளவை எடுக்கும்போது, கோணல் மாணலாகி பிடிப்பு வர வாய்ப்புண்டு. அதற்கு ஒரு வழி சொல்கிறேன். ஓர் அழகான ஞாயிற்றுக்கிழமையில் சாவகாசமாக கணவர் உதவியுடன் இந்த அளவெடுப்பைச் செய்தால் காதல் பெருகி, தொப்பை குறையும்; சர்க்கரை குறையும்; ஹார்ட் அட்டாக் வராது.
தொப்பைக் கொழுப்பில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று,தோலுக்கு அடியில் படிந்திருக்கும் கொழுப்பு (Subcutaneous Fat). இன்னொன்று, வயிற்றுக்குள் உறுப்புகளைப் பற்றிப் படர்ந்திருக்கும் கொழுப்பு (Visceral fat). இதில் இரண்டாவது வகைக் கொழுப்புதான் பெண்களுக்கு அதிக பாதிப்பை உருவாக்கும். இந்தக் கொழுப்பு, ஈரலுக்குள், இதயத்துக்குள், மூளைக்குள் டிரைகிளிசரைடுகளைக் கொட்டக் கொட்ட, நோய்க்கான சாத்தியங்கள் கூடுகின்றன.
சாப்பாட்டைக் குறைக்காமல், எடையைக் குறைப்பது சாத்தியமே இல்லை. பீரோவாக இருந்த இடுப்பு ஜீரோவாக மாறுவதால் ஆரோக்கியம் கூடுவது மட்டுமல்ல... பெண்களுக்கு அழகும் கூடி, காதல் வைட்டமின்கள் கணிசமாய்க் கிடைக்கும்.
சாப்பாட்டை எப்படிக் குறைப்பது?
உலகம் முழுக்க, இரண்டு வகையாக எடை குறைக்கிறார்கள், ஒன்று, ‘லோ கார்போஹைட்ரேட் கீட்டோஜெனிக் டயட்.’ அதாவது, சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள, புலால் உணவு. கிட்டத்தட்ட பேலியோ டயட். இரண்டாவது வகை ‘லோ கார்போஹைட்ரேட் வீகன் டயட்.’ பால் பக்கமே போகாத முழு மரக்கறி டயட். இரண்டிலுமே எடை குறையும். சர்க்கரை குறையும். உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
எது சாத்தியம், எவ்வளவு நாள் எடுக்கலாம் என்பதையெல்லாம் நீங்களே முடிவுசெய்யாமல், இது குறித்த அறிவும் அனுபவமும் கொண்ட, பிரசங்கிகளாக இல்லாத, யதார்த்தமும் மருத்துவ நுட்பமும் பொருந்திய மருத்துவர்களை அணுகி ஆலோசிப்பது நல்லது.
எடை குறைக்க வேண்டும் என முடிவு செய்த மாத்திரத்தில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி, தானிய வகைகளைக் குறைத்துத்தான் ஆகவேண்டும். “ ‘ஆறாம்திணை’யில் சிறுதானியம் சாப்பிடச் சொன்னீங்க... இப்போ வேணாங்குறீங்க” என அவசரமாகச் சண்டைக்கு வரக்கூடாது. சிறுதானிய மரபரிசி வகைகள், நோய் வராமல் காப்பதோடு, பல கனிம உப்புச் சத்துகளை இயல்பான உடல்நிலை கொண்டவர்களுக்கு வாரி வழங்கும்தான். ஆனால், ‘தடாலடியாக எடையைக் குறைக்க வேண்டும்’ என்றால், மிகக்குறைந்த அளவில் தானியமும், அதிக அளவில் மரக்கறி அல்லது புலால் எடுக்கத்தான் வேண்டும்.

பிரசித்தி பெற்ற கீட்டோஜெனிக் உணவியல் வல்லுநர் டாக்டர் பெர்ன்ஸ்டீன் (Dr. Bernstein), வீகன் உணவியல் வல்லுநர் டாக்டர் நீல் பெர்னார்டு (Neal Barnard) போன்றோரின் வழிகாட்டுதல்களில் உலகெங்கும் இப்படித்தான் எடை குறைக்கிறார்கள். நம் ஊரில் அதிக எடைகொண்ட ‘நாற்பது’ பெண்மணிகள் இதில் பரிச்சயமும் பழக்கமும் உள்ள ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றலாம். புனேவைச் சேர்ந்த டாக்டர் திரிபாதி என்பவர், வீகன் முறையில் ஏராளமானோரின் எடையையும் சர்க்கரையையும் குறைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார். தமிழகத்திலும் பேலியோ அல்லது கீட்டோஜெனிக் உணவுத்திட்டங்கள் மூலம் தடாலடியாக எடையையும் சர்க்கரையையும் குறைக்கும் மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கீட்டோஜெனிக், பேலியோ உணவுத் திட்டங்களில், பாதாம், பிஸ்தா, முட்டை, கிரில்டு சிக்கன் போன்ற ‘காஸ்ட்லி’ உணவுகளைச் சாப்பிடுவதால் நமக்கு முன்னதாக நம் பர்ஸ் மெலிய ஆரம்பித்து விடும். மரக்கறி வீகன் உணவுத்திட்டத்தில் பட்ஜெட் இந்த அளவுக்கு இல்லை. பலனும்கூட சற்று மெதுவாகவே கிடைக்கும். இரண்டு உணவுத் திட்டங்களையும், அவற்றை பலமாகப் பரிந்துரைக்கும் மருத்துவர்களையும் கொஞ்சம் உற்று நோக்கினால் அதில் வலுவான உணவு அரசியல் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க லாம். வீகன் உணவுத் திட்டத்தை யூத விஞ்ஞானிகளும் உலகெங்கும் உள்ள உயர்சாதி/உயர் குடிமக்களும் உயர்த்திப் பிடிக்கின்றனர். கீட்டோஜெனிக் உணவுத் திட்டத்தை, தென்னமெரிக்க உழைக்கும் வர்க்கம் உயர்த்திப் பிடிக்கிறது. அரசியலை விலக்கிப் பார்த்தால், இரண்டின் அறிவியலிலும் உண்மையும், பயனும் இருக்கத்தான் செய்கின்றன. நம் நாட்டுக்கு, நம் மண்ணுக்கு, நம் உடல் நலத்துக்கு, நம் பர்ஸுக்கு ஏற்ற உணவுத்திட்டத்தைக் கையிலெடுத்து எடை குறைக்க முயல்வது நல்லது.

நிலத்தில் அலைந்து திரியும் நாட்டுக் கோழியிலிருந்து, கிரில்டு சிக்கன் கிடைக்காது. அமெரிக்காவின் கார்கில் (Cargill) புரதம் வேண்டும். நம் தேரிக்காட்டில், தரிசு நிலங்களில் மேயும் வெள்ளாட்டிலிருந்து, எடையைக் குறைக்கும் விலங்குக் கொழுப்பு கிடைக்காது. பிரேசிலின் JBS கம்பெனியின் கறி, சீனாவின் WH கம்பெனியின் கறி வேண்டும். உடலுக்கான புரதமும், ரத்த நாடியின் கொழுப்பைக் குறைக்கும் தரமான ஒமேகாவும் அயிரை மீனில் கிடைக்காது. அட்லாண்டிக் கடல் சால்மன் மீன் வேண்டும். இப்படி ஆரம்பித்தால் நம்மூர் அஞ்சலையின் இடுப்புச் சதையை எப்போதுமே குறைக்க முடியாது. அதேபோல, ‘வெந்தயம், பூண்டில் எப்படியப்பா கொழுப்பு குறையும்... புரோக்கோலியும் ஆலிவ் எண்ணெயும் வேணும். தினையிலும் சாமையிலும் மெலிவது எப்படி... அமெரிக்க கினோவா தானியம்தான் வேணும்’ என வீகனர்கள் பேசினால், அவர்களாலும் நம் ஊர் வைஷ்ணவியின் வயிறு குறையாது. உணவுத்திட்டம், உள்ளூர் உணவால், உள்ளூர் மரபால், உங்கள் உடல் நலத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும். பொத்தாம் பொதுவாக தீர்மானிக்கக் கூடாது. உங்களைக் கவனிக்கும் வேளையில், உங்கள் மண்ணையும் கவனிக்க வேண்டும். சத்தம்போட்டு எடையைக் குறைத்துவிட்டு சத்தமில்லாமல் இன்னொரு நோயைப் பெற்றிடவும் கூடாது.
காலையில் மங்கள் ஏரியைச் சுற்றி, அநேகமாக ஆயிரம் பேர் நடப்போம். அதிகாலை முதல் ஒன்பது மணி வரை ஏரிவலம் வருவோரில் நூற்றுக்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்ப் பூங்காக்களிலும் பெண்கள் நடப்பது குறைவாகவே உள்ளது. கிரிவலத்தில், கோயில் பிரகாரங்களில் மட்டுமே பெண்கள் சதவிகிதம் அதிகமாக உள்ளது. ‘ஆறு டு ஒன்பது நான் அடுப்பைப் பார்ப்பேனா... என் இடுப்பைப் பார்ப்பேனா... காலையில அவர் நடக்கப்போறதுக்கு முன்னாடி மூலிகை டீ கொடுக்கணும். வந்த உடனே சூப் கொடுக்கணும்... அப்ப எப்படி நான் நடக்கிறது’ என, ஆசையிருந்தும் ஆர்வமிருந்தும் நடையைத் துறக்கும் பெண்கள் நிறைய. ‘வீட்டிலேயே மூணு கிலோமீட்டர் நடந்திடுவேன்’ என கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடப்பதைக் கணக்கிலேயே சேர்க்க முடியாது. அவர்கள் ஒருகாலும் மெலிவதில்லை. `‘நம்ம மாதிரியே பருத்துப்போன சிம்ரன் எப்படி பேட்ட-யில சிக்குனு ஆகி சிலிர்ப்பா ஆடுனா... அவ சினிமாக்காரி, அவளுக்கென்ன” என அலைபேசியில் அடுத்தவீட்டு அக்காவிடம் பேசி அங்கலாய்ப்பதில் துளியும் பிரயோசனம் இல்லை. நடையும் உடற்பயிற்சியும் நாற்பது வயது பெண்களுக்கு மிக மிக அவசியம்.
எப்படி... என்ன செய்யலாம்... அடுத்த இதழில் பார்க்கலாம்!
- இனியவை தொடரும்...
- கு.சிவராமன், ஓவியம்: சந்தோஷ் நாராயணன்