Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

ல்லூரிகளில் நடக்கும் முன்னாள் மாணவ நண்பர்களுடனான சந்திப்பு, உண்மையில் ஒரு குதூகல உற்சவம். குறிப்பாக, நாற்பதுகளின் சந்திப்பு. செல்லத்தொப்பையும் முன்வழுக்கையும், கஷ்டப்பட்டு ‘ஹென்னா’ போட்டு மறைக்கும் நரைமுடியுமாக நடக்கும் அச்சந்திப்பில் நெகிழ்வான பல தருணங்கள் அமையும். தோழனின் தோளில் கைபோட்டுக்கொண்டு ஞாபகங்களில் கரைந்துகொண்டே கல்லூரியைச் சுற்றிவரும்போது, அங்கே காலியாக இருக்கும் சில இருக்கைகளைப் பார்த்து, `இது முரளியோட இடம்ல... இந்நேரம் நோய் அவனைக் கொண்டுபோகலைன்னா நம்மோடு இங்கே இருந்திருப்பான்ல...’ என்கிற ஏக்கமும் விசும்பலுமான பேச்சு இப்போதைய  நாற்பதுகளின் ‘அலும்னி’களில் அதிகம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

நாற்பதுகளில் நடக்கும் திடீர் மரணங்களில் பெரும்பாலானவை (கிட்டத்தட்ட 45%), அதிக ரத்தக் கொதிப்பால் வரும் மாரடைப்பு, மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றன என்கின்றன புள்ளி விவரங்கள்.  நம் சராசரி ஆயுள்காலம் கணிசமாக உயர்ந்திருந்தாலும், நாற்பதிலும் ஐம்பதிலும் ஏற்படும் மரணங்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது கசப்பான உண்மை. அப்படியான கசப்புக்குக் காரணம், உப்பு என்பது  நம்மில் பலருக்குத் தெரியாது.

இனிப்பைப் பார்த்து அச்சம் கொண்டு அல்லது விழிப்புணர்வு கொண்டு விலகும் மனோபாவம் வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அதே விழிப்புணர்வு இன்னும் உப்பில் வரவில்லை. `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என உப்பை அக்காலம்தொட்டே கொண்டாடுபவர்கள் நாம். `உப்புக்கா வரி?’ என ஆங்கிலேயனைப் பார்த்துக் கொதித்தெழுந்த வரலாறும் நமக்குண்டு. உப்பு மிக மிக முக்கியமானது என்பதிலும் அறுசுவைகளில் ஒன்று என்பதிலும் நமக்குத் துளியும் சந்தேகமில்லை.

ஆனால், இன்று நாம் சாப்பிடும் உப்பின் அளவு முன்பைவிட மிக மிக அதிகம். இரண்டு வகையான உப்புகளை நாம் அதிகம் சுவைக்கிறோம்.  ஒன்று சோடியம்.  இன்னொன்று பொட்டாசியம். ஆனால், சரியான விகிதத்தில். நாம் அதிகம் சமைக்காத இலை தழை உணவுகளைச் சாப்பிட்ட வரை, கடல் மீன்களையும் ஆற்று மீன்களையும் சாப்பிட்டவரை, வயலில் மேய்ந்துதிரிந்த கோழிகளையும் ஆடு மாடுகளையும் சாப்பிட்டவரை நமது உடலுக்குப் போதுமான பொட்டாசியமும் சோடியமும் சரியான அளவுக்குக் கிடைத்தன. இப்போது நிலைமை தலைகீழ். எல்லாம் சோடியம் மயம்.

உப்பைக் கண்டுபிடித்து, தோராயமாக 8000 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது உப்பு, தங்கத்தைவிட மதிப்புமிக்கதாகப் பார்க்கப்பட்டது. மாதச் சம்பளமாக உப்பைப் பெற்ற காலம் உண்டு. ‘Salary’ என்ற சொல்லே ‘Salt’ என்கிற வார்த்தையிலிருந்துதான் பிறந்திருக்கிறது. அந்த அளவுக்கு உப்பு மிக முக்கியமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் சுவைக்கு அடிமையான மனித இனம், மெல்ல மெல்ல தன் உணவில் அதன் அளவைக் கூட்ட ஆரம்பித்தது. அன்று ஒரு நாளைக்கு 0.7 -  0.9 கிராம் உப்பு சாப்பிட்டோம். இன்று 9-14 கிராம் சாப்பிடுகிறோம். 25-30 கிராம் வரை சாப்பிடும் நபர்களும்  நம்மிடையே உண்டு. அதுமட்டுமல்ல... நம் உடலுக்குள் செல்லும் சோடியம்-பொட்டாசியம் விகிதம் 20 மடங்கு கூடியிருக்கிறதாம். இதெல்லாம் நேரடியாக நம் உணவில் சேர்பவை. உணவைப் பாதுகாக்க, சுவையூட்ட, அதன் திட திரவ நெகிழ்வுத் தன்மையை மாற்ற எனச் சேர்க்கப்படும்  சோடியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டாமேட் முதலான உப்புகள் தினசரி நம் உணவில் மறைமுகமாகச் சேர்வது  தனிக்கணக்கு.

தொழிற்சாலைகள் கணக்கில் காட்டாமல், கண்ணுக்குத் தெரியாமல் பயன்படுத்தும் ஏராளமான மறைநீரால் (Virtual Water) எப்படி சுற்றுச்சூழல் குலைந்துபோகிறதோ, அதேபோல், கணக்கில் வராமல் மறைந்திருந்து தினமும் சேரும் இந்த ரசாயன உப்புகள் நம் உடலை ஏகத்துக்கும் பாதிக்கின்றன. 

சத்தமில்லாமல் ஏறும் ரத்தக் கொதிப்புக்கும் இந்த உப்புக்கும் என்ன தொடர்பு?  நாம் ஓட, உறங்க, இதயம் துடிக்க, சுயமாகச் சிந்திக்க என அத்தனைக்கும் உப்பு தேவை. ரத்தத்தில் உப்பு குறைந்தால் முதலில் குளறிப் பேசுவோம். அப்புறம் உளறிப் பேசுவோம். ரொம்பவும் குறைந்தால், கோமாவில் விழுந்துவிடுவோம். உப்பு, நிச்சயம் தேவையான ஒன்றுதான். ஆனால் அதே உப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் அளவில் கூடும்போது, மெல்ல மெல்ல ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. சிறுநீரகத்தையும் இதயத்தையும் மூளையையும் அதனுள்ளே செல்லும் அத்தனை குறுநாளங்களையும் பாதிப்புற வைக்கும் தன்மை ரத்தக் கொதிப்புக்கு உண்டு.

பரம்பரையாகக் குடும்பத்தில் ரத்த அழுத்தம் இருந்தால் நாற்பதுகளில் நுழைவோருக்கு, இந்நோய் வரும் வாய்ப்பு சற்று அதிகம். `தலைவலி வரும்; கிறுகிறுப்பு இருக்கும்; மரத்துப்போகும்; அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என அலட்சியமாக இராமல், ரத்த அழுத்தத்தின் அளவை அளந்தறிந்து, மிக அதிகமாக இருந்தால் ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. முதல் சோதனையில் சற்று உயர்வாகக் காட்டுகிறது என்பதற்காக தடாலடியாக மருந்துக்குச் செல்லாமல், வெவ்வேறு நேரத்தில் நான்கைந்து முறை ரத்த அழுத்தத்தை அளவிட்டுப் பார்ப்பது நலம்.  வீட்டிலிருக்கும் எலெக்ட்ரானிக் அளவீட்டுச் சாதனங்களைவிட, மருத்துவரிடம் போய், பாரம்பர்யமாகப் பார்க்கும் மின் அழுத்தமானியால் அளவிட்டுப் பாருங்கள். அதுவும் உட்கார்ந்து, நின்று, படுத்து சோதித்துக் கொள்வதுதான் ரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த உதவும். இப்போது இன்னும் துல்லியமாகக் கணிக்க மூளைக்குச் செல்லும் நாடியின் அழுத்தத்தை அளவிடும் கருவிகள் எல்லாம் வந்துவிட்டன. `இதெல்லாம் சும்மா! இந்த நம்பரையெல்லாம் மாத்திக்கிட்டே இருப்பாங்க. கிறுகிறுப்பு வந்தா பார்த்துக்கலாம்’ என்கிற தவறான எண்ணமும் வழிகாட்டுதலும் அலட்சியங்களும் தமிழகத்தில்  அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது வருத்ததிற்குரிய உண்மை.

பெருவணிகத்தால் சூழப்பட்டுள்ளது நம் மருத்துவத்துறை. நாம் அறமற்ற வணிகத்தைக் களைந்து, உண்மையான அறிவியலை உற்றுப்பார்க்க வேண்டுமேயொழிய, ஒட்டுமொத்த அறிவியலையே புறக்கணிப்பது மிக மிக ஆபத்து. நவீனமோ மரபோ... இரண்டிலும் தற்போது சூழ்ந்திருக்கும் வணிகப்பிடியை விலக்கி அறிவியலின் வழிகாட்டுதலை அணுகவேண்டும். ரசாயன மருந்தோ, மூலிகையோ, மருந்தில்லாத சிகிச்சையோ, யோகாவோ, தியானமோ எதைச் செய்தாலும், ரத்த அழுத்த அளவு இதயம் சுருங்கும்போது 140-க்கு மிகாமலும், விரியும்போது  90-ஐத் தாண்டாமலும் இருக்க வேண்டும். தினசரி சின்னச் சின்ன அக்கறைகளால், செலவு குறைந்த மருத்துவத்தால் மிக அழகாகக் கட்டுக்குள் வைக்கக்கூடிய ரத்த அழுத்ததை அலட்சியமாக எண்ணிப் புறக்கணித்து, ஐம்பதுகளில் வாரம் இருநாள் டயாலிசிஸ்க்கு அலையும் நபர்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.

அது என்ன சின்னச் சின்ன தினசரி அக்கறைகள்? பெட்டிச் செய்தியைப் பாருங்கள்.

உப்பைத்தாண்டி இன்று பெருகி நிற்கும் மிகப்பெரிய ரத்த அழுத்தக் காரணி, மன அழுத்தம். இக்கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தபோது என் மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். அவருக்கு சிறிய ரத்த ஓட்டக் குறைபாடு. மூளையில் தாக்கம் ஏற்பட்டிருந்தது. மிக லேசான ‘syncope.’ காரணம், திடீரென அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம்.  முன்னர் சிகிச்சைபெற்று மீண்டுவந்துவிட்டார்.   அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படக் காரணம், நீட் தேர்வு. ஜூன் 5-ம் தேதிக்குப் பின்னர் ரத்தக்கொதிப்பு அதிகரித்தவர்களில் கணிசமானோர், பிள்ளைகளை ‘நீட்’ தேர்வு எழுத அனுப்பியவர்கள்.

தமிழகத்தில் பல  பிள்ளைகள்  நீட் தேர்வில் மிகச்சிறப்பான மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள். ஆனாலும், கூடவே நிறைய கேள்விகளும் முளைக்கின்றன. `நீட்டில் நிறைய மதிப்பெண் பெற்றவர்கள் யார்... பள்ளியில் மட்டும் மிகச்சிறப்பாகப் படித்தவர்களா... அனிதாவின் அக்கா தம்பிகள் யாரேனுமா... 31-ம் தேதி மட்டும் முகம் மலரும் அடித்தளப் பணியில் அறத்தோடு வேலை செய்வோரின் பிள்ளைகளா என்றால், ‘இல்லை’ என்ற பதிலே வருகின்றன. அநேகமாக, எல்லோரும் குறைந்தபட்சம் மூன்று லட்ச ரூபாய் செலவழித்து, தனிப்பயிற்சி பெற்ற பிள்ளைகள்தான். அதிக மதிப்பெண் வாங்கி, ‘மருத்துவர் புரொடக்‌ஷன் கம்பெனி’களின் விளம்பரங்களை முகங்களால் நிரப்புவது அந்த வசதிபடைத்த பிள்ளைகள்தான். நீட், 50,000 கோடிரூபாய் வணிகத்தைக் கொண்ட விஷயம். இது புத்திசாலி மருத்துவரை உருவாக்கும் உத்தியா... புத்திசாலி வியாபாரிகளின் உத்தியா..? எதுவாக இருந்தாலும் நீட், பெற்றோருக்கு ரத்தக்கொதிப்பையும், பிள்ளைகளுக்கு மனவியாதியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பதுதான் சத்தியமான உண்மை.

மன அழுத்தத்துக்கும் ரத்தக் கொதிப்புக்கும் நிறைய தொடர்பு உண்டு.  `நானூறுக்கு மேல் வாங்கினால்தான் சீட் கிடைக்குமா..? அரசு இடம் கொடுத்தாலும், தனியார் கல்லூரியில்  வருஷத்துக்கு ஏழு லட்சம் கட்டணுமாமே? இன்னும் ஒரு வருசம் திரும்பவும் படிக்கணுமா? அதுவும் மூணு லட்சம் கட்டிப் படிச்சாதான் சீட் கிடைக்குமா?’ என மனக்குமுறலோடு  நிற்கும் தாய், எண்ணெய்ப் பலகாரம் அதிகம் சாப்பிடாதவள்தான். ஆனாலும் இந்த மன அழுத்தம் அவளின் மூளையின் ‘தலாமசை’ தூண்டி, அங்கிருந்து ‘அமைக்டலா’வை அழுத்தி, ‘ஹைப்போதலாமசை’ உலுக்கி, நாளமில்லாச் சுரப்பிகளின் வழி ‘கார்டிசால்’களையும் ‘அட்ரீனலை’யும்  தூண்டி அவளுக்கு ரத்தக் கொதிப்பைக் கொண்டு சேர்த்துவிடுகிறது.  பல அனிதாக்களின் அம்மாக்களுக்கு ரத்தக் கொதிப்பு இப்படித்தான் வருகிறது.

இன்று சத்தமில்லாமல் நாற்பதுகளிடம் பெருகும் ரத்தக் கொதிப்புக்கு அதிக உப்பும் அவசியமற்ற மன அழுத்தமும்தான் மிக முக்கியக் காரணங்கள்.

இவற்றைத்தாண்டி, குடிப்பழக்கமும் முக்கியக் காரணம். `குடியுயர கோன் உயரும்’ என்பதெல்லாம் பழசு. ` `குடி’ உயர உயரத்தான் கோனே நடக்கும்’ எனப் புதிய தத்துவத்தோடு தெருவுக்குத் தெரு ஊற்றிக்கொடுக்கும் டாஸ்மாக்குகள் நாற்பதுகளுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்து நிற்கின்றன.  நாற்பதுகள் இந்த உப்பிலிருந்தும் தப்பிலிருந்தும் நிச்சயம் விலகி இருக்க வேண்டும். மறுத்தால், ரத்தக் கொதிப்பு உயரும். பக்கவாதம் வந்து நீங்கள் அசைவற்றுக் கிடக்கையில், `அப்பா என்றழைக்காத உயிரில்லையே’ என உங்கள் மகன் நிச்சயம் உங்களைக் கைகளில் ஏந்தித் தூக்கிச்செல்ல மாட்டான். `அடல்ட் டயப்பர் விலை கொஞ்சமாவா இருக்கு... அவரு படுக்கையிலேயே ஒண்ணுக்குப் போய்த் தொலையுறாரு... இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி?’ எனச் சொல்லி, `எப்போ முடியும்?’ எனக் கேட்கும் பிள்ளைகள் கூட்டத்தின் நடுவேதான் நாம் நாற்பதில் நிற்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

முதுமையைத் தொட நமக்கு இன்னும் கொஞ்ச நாள்தான். 60-65-ல், நம் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து, பால்ய நண்பனோடு சைக்கிளில் டபுள்ஸ் போக வேண்டும்; பேத்தியோடு கோயிலுக்குப் போய் அங்கு யதேச்சையாய் வரும் ஒருதலையாய் நேசித்த குழிக்கன்னத்துக்காரியின் முதுமையை தூரத்திலிருந்து ரசிக்க வேண்டும்;  மூச்சிரைக்க மேடு பள்ளங்களில் ஓடியாடி, ` பார்த்து... பார்த்து’ என நம் முதுமையின் தள்ளாட்டத்தை ரசித்து எச்சரிக்கும் `கிழவி மனைவி’யைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்..!

என்றால், இப்போது நாற்பதில் நம் ரத்தம் நிச்சயம் கொதிக்கக் கூடாது. குதூகலமாகச் சுற்றிவர வேண்டும். செய்ய வேண்டியது, உப்பைக் கொஞ்சம் குறைத்து, உற்சாகத்தை உயர்த்துவது மட்டும்தான்.

- கு.சிவராமன்; படம்: சந்தோஷ் நாராயணன்

துரித உணவில் சேர்க்கப்படும் உப்புகள்

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

• கெட்டுப்போகாமல் இருக்க: சோடியம் பென்சோவேட், சோடியம் நைட்ரேட்.

• சுவைக்காக: மோனோ சோடியம் குளூட்டமேட் (மசாலா வாசனை), டைசோடியம் குவானிலேட் (காளான் வாசனை) டை சோடியம் இனோசினேட் (சிக்கன், மட்டன் வாசனை).

• மசாலாவோடு உணவுப்பொருள் நன்கு சேர: சோடியம் லாரல் சல்பேட்.

இன்னும், சத்துகளை உடலில் சேர்க்க,  உணவை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க, பார்வைக்கு அழகாக இருக்க எனக் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட சோடியம் வகையறாவைச் சேர்ந்த உப்புகள் பிஸ்கட், கேக், சாக்லேட், ரொட்டி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், சிப்ஸ் போன்றவற்றில் சேர்க்கப்படுகின்றன.

ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் மூலிகைகள்

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

வெள்ளைத்தாமரை இதழ்
செம்பருத்தி இதழ்

மருதம் பட்டை

(இவற்றை எப்படிச் சாப்பிடுவது என கூகுளில் தேடாமல், வாட்ஸ் அப்பில் விசாரிக்காமல், உங்களுக்கு அருகிலிருக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவர்களிடம் கேட்டறிந்து அவர்கள் பரிந்துரையின்பேரில் சாப்பிடுவது சிறப்பு)

ரத்தக் கொதிப்பை விரட்ட தினமும் செய்யுங்கள்!

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6

1. 45 நிமிட நடை

2. சீதளி பிராணாயாமம்

3. 7 மணி நேர இரவுத்தூக்கம்

4. யோக நித்திரைப் பயிற்சி

5. தினசரி தலைக்குக் குளித்தல், வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியல்

6.தின உணவில் சிறிய வெங்காயம் 10 (சமைக்காதது), சிறிய வெள்ளைப்பூண்டு 10 (வேகவைத்தது)

7. தின உணவில் பார்லி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி முதலான நீர்க்காய்கறிகளில் ஏதேனுமொன்று