தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

இலக்கை அடைவதில் குறுக்குவழிகள் ஒருபோதும் உதவாது. இது வாழ்க்கையின் எந்த இலக்கை அடைவதற்கும் பொருந்தும். எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட நினைப்பவர்கள் இதைத் தாரக மந்திரமாகக் கொண்டே முயற்சியில் இறங்க வேண்டும்.

எடைக் குறைப்புக்காக என்னென்னவோ வழிகளையெல்லாம் பின்பற்றி, எதிலும் இலக்கை அடைய முடியாத எத்தனையோ பேரை என்னுடைய 20 வருட அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் அத்தனை பேருக்கும் எடையைக் குறைக்க வேண்டும் என்பதைவிடவும், அதை சீக்கிரமே சாதிக்க வேண்டும் என்கிற வெறியே அதிகமிருந்தது. அதற்காக அவர்கள் நாடிய அனைத்துமே குறுக்குவழிகள் என்பதில்தான் சிக்கல்.

சிலர் பேதி மருந்துகளை எடுத்துக் கொண்டார்கள். சாப்பிட்ட எதுவும் வயிற்றில் தங்காது, அதன் மூலம் எடை குறையும் என்கிற நம்பிக்கையில்!

இன்னும் சிலர் சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டார்கள். சிறுநீர் அதிகம் வெளியேறுவதுடன், உடலில் நீர்ச்சத்து முற்றிலும் வறண்டுபோகும். வெயிட் மெஷினில் ஏறி நின்றால், அது காட்டும் எடையில் மகிழ்ந்துபோவார்கள்.

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

இன்னொரு பிரிவினர் உண்டு. மூன்று வேளைகளுக்கும் வெறும் பழங்கள், பச்சைக் காய்கறிகள் அல்லது வேகவைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் வாரக்கணக்கில் வெறும் முட்டைகோஸ் சூப் மட்டுமே குடித்து உயிர்வாழ்வார்கள். இன்னும் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பேலியோ டயட் பிரபலமாக இருந்தது. இப்போது கீட்டோ டயட்!

எதைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், வெறும் அசைவ உணவுகளையும் சீஸ், பனீர் போன்றவற்றை யும் சாப்பிட்டு எடையைக் குறைக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் பலரும். காய்கறிகளை அறவே தவிர்க்கும் இவர்களது அறியாமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

உண்மையான எடைக் குறைப்பு என்பது இதுவல்ல. கொழுப்பைக் குறைத்து, தசைகளின் அடர்த்தியைக் கூட்டுவதுதான் உண்மையான எடைக் குறைப்பு. சரியான எடையைத் தக்கவைத்துக்கொள்வதுதான் சரியானது. அது எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வியே. சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளும், பேதி மருந்துகளும் உடலின் எலெக்ட்ரோலைட் மற்றும் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்துபவை.  உடலின் ஒட்டுமொத்த நீரிழப்பு நிலைக்குக் காரணமாகும் என்பதால் எலெக்ட்ரோலைட் விஷயத்தில் விளையாடுவது ஆபத்தானது.எடைக் குறைப்புக் கான ஆலோ சனைகள்  ஒவ் வொருவருக்கும் வேறுபடுபவை. உங்கள் தோழிக்கோ, சக ஊழியருக்கோ பலன் தந்தது என்பதால் அவர்கள் பின்பற்றும் அதே எடைக் குறைப்பு முறை உங்களுக்கும் சரியாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. டி.வியிலும் சினிமாவிலும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் சொல்கிற எடைக் குறைப்பு சீக்ரெட்ஸ் எல்லாம் உங்களுக்கானவையல்ல. உங்கள் உடலுக்குப் பொருந்தாத டயட் முறையைப் பின்பற்றுவதால் தசைகளின் அடர்த்தி குறையும், வளர்சிதை மாற்றம் சீரற்றுப் போகும்.

பொருந்தாத டயட் ஏற்படுத்தும் விளைவுகள்

 

• முடி உதிர்தல்

• நோய் எதிர்ப்புத் திறன் குறைதல்

• எதற்கெடுத்தாலும் எரிச்சல்

• தீவிரமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துக் குறைபாடு

• குடலின் இயக்கத்தில் சீரற்றநிலை

• அதீத களைப்பு

• சருமம் பொலிவிழந்து போவது, சுருக்கங் கள் ஏற்படுவது, சரும வறட்சி.

• கவனத்திறனில், புரிந்துணர்வில், முடிவுகளை எடுக்கும் திறனில் மந்தநிலை.

உங்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராவது பொருந்தாத டயட்டைப் பின்பற்றலாம், அளவுக்கதிகமாக டயட் செய்யலாம். அவர்களிடம் கீழ்க்கண்ட அறிகுறிகளை நீங்கள் பார்க்கலாம்.

ரொம்பவும் கறாரான உணவுமுறையைப் பின்பற்றுவார்கள். உதாரணத்துக்கு, வேகவைத்த காய்கறிகள் அல்லது வேகவைத்த சிக்கனை மட்டுமே இவர்கள் தினசரி உணவாக உட்கொள்வார்கள். அதில் சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வெரைட்டியான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். வாரத்தில் ஒரு நாளோ, விசேஷங்களிலோகூட இந்தக் கொள்கையைத் தளர்த்திக் கொள்ளாத விடாக்கொண்டர்களாக இருப்பார்கள்.

ஒரு கப் பொங்கலோ, பிரியாணியோ சாப்பிட்டுவிட்டால், அதை ஈடுகட்ட அடுத்தடுத்த நாள்களில் இரண்டு, மூன்று மணிநேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்வார்கள் அல்லது பட்டினி கிடப்பார்கள்.

கோயிலில் கொடுக்கப்படும் கொஞ்சூண்டு பிரசாதத்தையும், பிறந்தநாள் பார்ட்டியில் கொடுக்கும் ஒரு துண்டு கேக்கையும் சாப்பிடக்கூட ரொம்ப யோசிப்பார்கள்.

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?! - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

சாப்பிடுவது, வேலை செய்வது என எல்லாவற்றிலும் கலோரிகளைக் கணக்கு பண்ணுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதற்கென `ஆப்' உபயோகிப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் சாப்பிடுதல் என்கிற இனிய அனுபவத்தை வேண்டுமென்றே தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள்.

‘உடலைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி’ எனக் குறிப்பிட்ட நாள்களுக் கொரு முறை டீடாக்ஸ் திட்டங்களைப் பின்பற்றுவது, பலநாள்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டிருப்பது போன்றவற்றையெல்லாம் முயற்சி செய்வார்கள். சிறுநீரகங்களும் கல்லீரலும் ஆரோக்கியமாக இருந்தால், அவையே உடலின் கழிவுநீக்க வேலைகளைச் செய்துவிடும் என்கிற உண்மையை உணராதவர்கள் இவர்கள்.

கிராஷ் டயட் (Crash Diet) எனப்படும் இந்தக் குறுக்குவழி எடைக் குறைப்பு முறைகள் சீக்கிரமே பலன் தருவதுபோல இருக்கும். குறைந்த அதே வேகத்தில் மீண்டும் அவர்களுக்கு எடை கூடும். எடைக் குறைப்புக்குத் தேவை வாழ்வியல் மாற்றங்கள்தாம், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் அல்ல என்பதை இவர்கள் உணர வேண்டும்.

எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

• மைதா உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் இனிப்புகளை அறவே தவிர்க்கலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம்.

• உணவை நன்கு மென்று உண்பது அவசியம். ஒவ்வொரு வேளை உணவையும் 20 நிமிடங்கள் நன்கு மென்று விழுங்க வேண்டும்.

• பாக்கெட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செயற்கையான எதையும் சாப்பிடக் கூடாது.

• ஒவ்வொரு வேளை உணவுடனும், அது சிறுதீனியாக இருந்தாலும், அதில் புரதச்சத்து இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

• முழுத்தானியங்கள், நட்ஸ், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

• நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

• தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நம்மில் பலரும் தாகத்தைப் பசியெனத் தவறாகப் புரிந்துகொண்டு, அதிக அளவு சாப்பிடுகிறோம்.

• உடற்பயிற்சி செய்வது தினசரி ஒழுக்கமாக மாற வேண்டும்.

• தினமும் இரவு 10 மணிக்கு உறங்க வேண்டும். தாமதமான தூக்கம், இன்சுலின், லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை பாதிக்கும். அது உணவுத் தேடலையும் பசி உணர்வையும் அதிகரிப்பதுடன், எடையையும் கூட்டும்.

- நம்மால் முடியும்!

-ஆர்.வைதேகி