
அஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்!
`உலர்ந்த இலை இவ்வளவு மாயம் செய்யுமா?’ என்று நம்மையெல்லாம் ஆச்சர்யப்படவைக்கும் இலைப் பொக்கிஷம் ஒன்று நம்மிடம் இருக்கிறது. `பிரிஞ்சி இலை’ என்று அழைக்கப்படும் அந்தப் பொக்கிஷம், ஆகச் சிறந்த மணமூட்டி!
உணவுக்கு மணமூட்டுவதில் தொடங்கி, பல்வேறு நோய்களை விரட்டியடிக்கும் பிரிஞ்சி இலை, அஞ்சறைப் பெட்டியின் அதிவாசனைக் கருவி. விதைகள், பட்டைகள், கிழங்குகள், தண்டுகள் வரிசையில் ஒரு மரத்தின் இலை, பிரமிப்பூட்டும் அதன் வாசனையால் சமையலறை முழுவதும் அலங்கரிப்பது இயற்கையின் அற்புத ஆற்றலுக்கு ஒரு சாட்சி.
‘தேஜ் பெட்டா’ எனப்படும் பிரிஞ்சி இலைக்கு ‘நெடியான இலை’ என்று ஒரு பொருள் உண்டு. இலைகளின்மேல் மூன்று வரிகளால் அழகிய ஓவியம் வரைந்தாற்போல, மூன்று நரம்புகளைச் சுமந்துகொண்டு உலர் பச்சையாகக் காட்சி அளிக்கும். சமையலின் போது லேசாக நொறுக்கிப் பயன்படுத்தினால், இதன் இலைகளில் காணப்படும் நறுமண எண்ணெய்கள் வெளிப்பட்டு வாசனையால் மதிமயக்கும்.
‘Cinnamomum tamala’ எனும் தாவரத்தின் இலைதான் `பிரிஞ்சி இலை’ எனப்படுகிறது. தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் துணைப் பெயர்கள். லவங்கத்தின் வாசனையையும், மிளகின் மெல்லிய காரத்தையும் கொண்டது பிரிஞ்சி இலைகள். வட ரோமானியரிடம் ‘மலோபத்ரம்’ என்ற பெயரில் முற்காலங்களில் பிரபலமாக இருந்தது. நேபாளம், பூடான் மற்றும் இமயமலைச்சாரல்களில் இவை அதிகமாக விளைகின்றன.

வடஇந்திய சமையலில் நீங்கா இடம்பிடிக்கும் பிரிஞ்சி இலை, முகலாயர்களின் சமையலின் தனித்துவமான வாசனைக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறது. இமயமலையின் கீழ்ப்பகுதியில் (Terai region) மெலிதான சமையலை மெருகேற்ற பிரிஞ்சி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலரவைத்துப் பொடித்தோ, முழுமையாகவோ, மசாலா கலவைகளில் சேர்க்கப்படுகின்றன.
சமையலில் சேர்க்கும்போது, இலையில் இருக்கும் `யுஜெனால்’, `சைமீன்’ போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் வெளியாகி மணத்தைப் பரப்புகின்றன. இலைகளிலுள்ள `செஸ்கொய்டெர்பீன்ஸ்’, நோய்களை எதிர்க்கும் திறனுக்குக் காரணமாகின்றன. உணவு செரிமானமின்மை, சுவாசக் கோளாறுகள், உடல்வலி, அதிக ரத்தஅழுத்தம், நீரிழிவு என சர்வரோக நிவாரணியாக பிரிஞ்சி இலைகள் செயல்படக்கூடியவை. நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் என சத்துக் களஞ்சியமாகவும் இவை திகழ்கின்றன.
எலிகளுக்குச் செயற்கையாக நீரிழிவை உண்டாக்கி, அவற்றுக்கு பிரிஞ்சி இலைகளின் சாரத்தைக் கொடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, ரத்த சர்க்கரையின் அளவை பிரிஞ்சி இலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதைக் கண்டறிந்தனர். ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள்களைக்கொண்டு பல்வேறு நோய்களைத் தடுக்கும் திறனும் பிரிஞ்சி இலைக்கு இருப்பது கூடுதல் பலன். காயங்களை விரைந்து குணமாக்கும் செயல்பாடு பிரிஞ்சி இலையிலுள்ள ஆவியாகக்கூடிய எண்ணெய்க்கு உண்டு.
பொதுவாக பிரியாணி, குருமா வகைகளில் மசாலாப் பொருள்கள் அரைத்தே சேர்க்கப்படும். அவற்றில் பெரிது பெரிதாக அப்படியே சேர்க்கப்படுவது பிரிஞ்சி இலை மட்டுமே. உணவில் தனது உயிர்சாரத்தை முழுமையாகக் கலந்துவிட்ட பிரிஞ்சி இலையைச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. காரத்தன்மை அதிகம் என்பதால், இலையைச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
பிரிஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சி தினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம். சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.
வெப்ப வீரியத்துடன் கார்ப்புச் சுவையைத் தாங்கியிருக்கும் பிரிஞ்சி இலைகளுக்கு வாய்வுஅகற்றி, பசித்தூண்டி, வியர்வைபெருக்கி ஆகிய செய்கைகள் இருக்கின்றன. அகத்தியர் குணவாகட நூல், பிரிஞ்சி இலையின் பெருமைகளை ‘மேகசுரம் சீதசுரம் வெட்டை சுவாசங் காசம்…’ எனத் தொடங்கும் பாடல் மூலம் விளக்குகிறது.
வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜுர நோய்கள், சுவாசகாசம், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை எதிரி. விரைவில் விந்து வெளியேறும் பிரச்னைக்கும் பிரிஞ்சி இலையால் செய்யப்பட்ட மருந்துகள் பலனளிக்கும். சித்த மருத்துவத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் லேகிய வகைகளில் பிரிஞ்சி இலைகள் சேர்க்கப்படுகின்றன.
ஊறுகாய் ரகங்களில் சிறிது பிரிஞ்சி இலைகளைக் கலந்து மதிப்புக் கூட்டலாம். நெஞ்சில் கோழை கட்டிக்கொண்டு துன்பப்படுத்தும்போது அதிமதுரம், திப்பிலி, பிரிஞ்சி இலை ஆகியவற்றை நீரில் போட்டு காய்ச்சிக் கொடுத்தால் சுவாசம் சுகமாகும். உளுந்தங்கஞ்சி, வெந்தயக்கஞ்சி தயாரிக்கும்போது பிரிஞ்சி இலைக்கும் இடமளிக்கலாம்.
மேற்கத்திய நாடுகளில் பிரிஞ்சி இலையைப் போல `பே லீஃப்’ எனும் இலைகளைப் பயன்படுத்துகின்றனர். `லாரல்’ எனும் மரத்தின் இலைகளே ‘பே லீஃப்’ என அழைக்கப்படு கின்றன. மெக்ஸிகன் பே, கலிஃபோர்னியன் பே, இந்தியன் பே (பிரிஞ்சி இலை), இந்தோனேஷியன் பே, மேற்கிந்தியத் தீவுகளின் பே என பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய அனைத்துக்கும் பலன்கள் ஒன்றே!
பல்லாயிரம் ஆண்டுகளாகவே மேற்கத்திய சமையலில் இந்த இலைகளின் தாக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் தலையில் இந்த இலைகளைக்கொண்டு கிரீடம் சூட்டும் வழக்கம் ரோமானியர்களிடம் இருந்தது. அந்தளவுக்கு இந்த இலைகளின் மதிப்பு உச்சத்தில் வைக்கப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் ஆரோக்கியமான சமையலுக்கு பிரிஞ்சி (பே) இலைகளை முக்கியக் காரணமாகச் சொல்லலாம்.
சான் ஃபிரான்சிஸ்கோவின் `சியோப்பினோ’ எனும் புகழ்பெற்ற மீன் குழம்பு ரகத்தில் பிரிஞ்சி இலைகள் நீக்கமற சேர்க்கப்படுகின்றன. வட அமெரிக்கக் குடும்பங்களின் அஞ்சறைப் பெட்டியில் இந்த இலைகளுக்குத் தனித்த அறை நிச்சயம் உண்டு. அத்திப்பழங்களைக் கொண்டு செய்யப்பட்ட கேக் ரகத்தை, `பே’ இலைகளால் கவசம்செய்து பரிமாறும் வழக்கம் பல கிரேக்கத் தீவுகளில் இருக்கிறது.
காய்களை வேகவைக்கும்போது பிரிஞ்சி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பானங்களிலும் பிரிஞ்சி இலைகளைச் சேர்க்கலாம். அரிசி மூட்டையில் ஒன்று அல்லது இரண்டு இலை களைப் போட்டுவைக்க, அரிசியின் மருத்துவக் குணங்கள் அதிகரிப்பதுடன் நறுமணம் கூடும். பிரிஞ்சி இலைகளை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு இறைச்சி ரகங்களைச் சமைக்கலாம்.
சமையலில் நீண்ட நேரம் இடம்பிடிக்கும் போது, தனது குணத்தை அதிக அளவில் பிரிஞ்சி இலைகள் வெளியிடும். வேகவைப்பதால் பிரிஞ்சி இலைகளின் முழு வீரியமும் வெளிப்படும். பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில்கூட, பிரிஞ்சி இலைகளைச் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. பிரிஞ்சி இலைகளில் உள்ள நறுமணம், உணவுப் பொருள்களுக்குள் ஊடுருவி நமது உணவை முழுமையடையச் செய்யும்.
உலர்ந்த இலைகளில் மணம் அதிகம் இருப்பதுடன் கசப்புத் தன்மையும் குறைந்திருப் பதால் இரட்டைப் பலன்கள் கிடைக்கும். இலைகள் முழுமையானதாக, பசுமையாக, நிற மாற்றங்கள் அதிகமில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. இலைகளில் மஞ்சள் நிறம் அதிகம் ஏறியிருந்தால், நீண்ட நேரம் வெயிலில் உலர்த்தப்பட்டவை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்க்க வேண்டும். பிரிஞ்சி இலைகளை காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து, ஒரு வருடம் வரை வீரியம் குறையாமல் பயன்படுத்தலாம்.
பிரிஞ்சி இலைகளைப் புகையூட்ட, சுதந்திரமாக சஞ்சரித்துக்கொண்டிருக்கும் நுண்கிருமிகள் அழிவது உறுதி. சாம்பிராணியைப் போல இதன் இலைப்புகையை வீடு முழுவதும் பரவச் செய்தால் சுகாதாரமும் ஆரோக்கியமும் மேம்படும். இலைகளின் வாசனையே மன அமைதியை உண்டாக்கும். லவங்க எண்ணெயைப்போல, இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வெளிப்பிரயோகமாக பயன்படுத்தினால் மூட்டுவலிகளுக்கு அற்புதத் தீர்வு கிடைக்கும். தலைபாரத்துக்கு ஆவிபிடிக்கும்போது கற்பூரவள்ளி, நொச்சி, துளசி இலைகளுடன் பிரிஞ்சி இலைகளையும் சேர்த்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
பிரிஞ்சி இலை… அஞ்சறைப் பெட்டியின் உள்ளம் கவர் கள்வன்… முத்திரைப் பதிக்கும் முதல்வன்!
டாக்டர் வி.விக்ரம்குமார்

ஷெரிங்மா தேநீர் (Tsheringma tea): பூடான் நாட்டின் பாரம்பர்யமிக்க தயாரிப்பு இது. பிரிஞ்சி இலை, வேர் மற்றும் `கர்தமஸ் டிங்டோரியஸ்’ தாவரத்தின் மலர்களும்தாம் இந்த மூலிகைத் தேநீரின் உறுப்பினர்கள். தேநீரைப் பருகியதும் உற்சாகத்தை வாரி வழங்குமாம். ஆயுளை நீட்டிக்கும் பூடானிய கடவுளின் பெயரையே இந்த தேநீருக்குச் சூட்டியுள்ளனர்.
கும்பிலாப்பம்: வேகவைத்த பலாப்பழச் சதைகளுடன் ஏலம், சீரகம், தேங்காய்த் துருவல், பனைவெல்லம், அரிசி மாவு சேர்த்துப் பிசைந்து பிரிஞ்சி இலைகளுக்குள் திணித்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகவைத்துத் தயாரிக்கப்படும் சிற்றுண்டி ரகம் இது. பலாப்பழம் மற்றும் பிரிஞ்சி இலையின் வாசனைக் கலவையாகத் திகழும் இந்தச் சிற்றுண்டி, நம்மை சுண்டி இழுத்து சுவைக்கத் தூண்டும். கேரளாவின் உணவுப் பாரம்பர்யம் இந்த கும்பிலாப்பம்.
பிரிஞ்சி இலை டிப்: வெண்ணெய் தடவிய துணியில் பிரிஞ்சி இலைகளை வைத்துக் கட்டி குழம்பு மற்றும் சூப் தயாரிக்கும்போது அந்த முடிச்சை மூழ்கச் செய்து, நன்றாகக் கொதிக்கவைத்தால் தனித்துவமான சுவை பிறக்கும். குழம்பு வகைகளுக்குக் கூடுதல் மணம் மற்றும் மருத்துவக் குணத்தை இந்த பிரிஞ்சி இலை டிப் வழங்கும்.
பிரிஞ்சி பானம்: ஒரு பிரிஞ்சி இலை, கால் டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகம், இரண்டு ஏலக்காய், கொஞ்சம் மிளகு போன்றவற்றை நீர்விட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து வடிகட்டி, காலை பானமாக பருகினால் உடலில் உற்சாகம் கரை புரண்டோடும். கூடவே செரிமானக் கோளாறுகளுக்கான சிறந்த பானமாகவும் செயல்படும்.