ஹெல்த்
தொடர்
Published:Updated:

உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி

உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி
பிரீமியம் ஸ்டோரி
News
உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி

விபத்துகளும் காயங்களும் நடிகர்களின் வாழ்க்கையில் சர்வ சாதாரணம்!

மீபகாலத் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துவருபவர் வினோதினி. கூத்துப்பட்டறை, நாடக மேடை என நிதானமாக ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து திரைத்துறையில் நுழைந்தவர், பத்து ஆண்டுகளைக் கடந்து பயணம் செய்துகொண்டிருக்கிறார்.

உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி

அண்மையில் வெளியான `கேம் ஓவர்’ திரைப்படத்தில், டாப்ஸியுடன் கதை முழுவதும் பயணம் செய்யும் முக்கிய வேடத்தில் நடித்து, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அவரிடம், திரைத்துறையில் பணியாற்றும் குணச்சித்திர நடிகர்களின் வாழ்க்கையில் ஏற்படும் உடல்நலம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள் குறித்துக் கேட்டோம்.

“எம்.எஸ்ஸி சைக்காலஜி படித்திருக்கிறேன். கூடவே எம்.பி.ஏவும் முடித்திருப்பதால், ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை கிடைத்தது. நான்கரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். மேடையிலும் திரையிலும் தோன்றும்போது கதாபாத்திரம் என்ற முகமூடியை அணிய வேண்டும். ஆனால் கார்ப்பரேட்டில், முழு நேரமும் முகமூடியோடுதான் பணியாற்ற வேண்டியிருக்கும். அதனாலேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி,  கூத்துப்பட்டறையில் சேர்ந்து முழு நேரமும் நடிப்புத்துறைக்குள் நுழைந்தேன். நாடகத்துறைக்கு வந்து அதிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தேன்.

சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. குடும்பத்தில் என் வயதுள்ள குழந்தைகளின் தனித் தன்மைகளை கவனிப்பேன். பொதுவாகவே கதை கேட்பதும், கதாபாத்திரங்களை கவனிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் தாக்கம்தான் நடிப்புத்துறைக்குள் என்னைத் திருப்பியிருக்கும் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ‘நடிகர்கள் எப்போதும் ஏ.சி அறையில்தான் இருப்பார்கள்; ஆப்பிள் ஜூஸ்தான் குடிப்பார்கள்’ என்று பலர் விமர்சிப்பதுண்டு. உண்மையில், ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தெருக்களில் எடுக்கப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் வெயிலில் வியர்த்துக் கொட்டும். காலையில் போட்ட மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வதே ஓர் உடல் இயக்கம்தான்.

‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் நான் பயணம் செய்யும் பேருந்து எதிரே வரும் பேருந்துடன் மோதுவதுபோல ஒரு காட்சி. பேருந்து கவிழ்ந்து விழுவது மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கினார்கள். பாதுகாப்புக்காக என் உடலில் கயிறெல்லாம் கட்டினார்கள். அப்படியும் முதுகுத்தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. ‘காத்தாடி’ என்ற படத்தில் நடிக்கும்போது சாலை விபத்தில் சிக்கி, உயிரிழப்பதுபோலக் காட்சியமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியிலும் பாதுகாப்புக்காக கயிறு கட்டியிருந்தார்கள். அப்படியிருந்தும் மீண்டும் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. சில காட்சிகளுக்கு டூப் நடிகர்களைப் பயன்படுத்துவார்கள். குளோஸ் அப் காட்சியில் அந்தந்த நடிகர்களே நடிக்க வேண்டும். அதனால் விபத்துகளும் காயங்களும் ஏற்படத்தான் செய்யும். இது போன்ற நிகழ்வுகளும் நடிகர்களின் வாழ்க்கையில் சர்வ சாதாரணம். சில இடங்களில் எப்பேர்ப்பட்ட முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும், விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன.

கேரவன் வசதி இப்போது எல்லா நடிகர்களுக்கும் இருக்கிறது. அதனால் தனியுரிமைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கும், கேரவன் இருக்கும் இடத்துக்கும் இடையில் அதிக தூரம் இருக்கும். ‘கடல்’ படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற இடத்தில் நடந்தது. கடற்கரை அருகே படப்பிடிப்பு நடந்ததால், கேரவன் இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கேரவனுக்குச் சென்றுவர முடியாது. அதனால் அருகிலிருக்கும் வீடுகளில் அனுமதி கேட்டு, கழிவறையைப் பயன்படுத்தினோம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற படிநிலை சார்ந்த சமூகமாகத்தான் இருக்கிறோம். அது சினிமாவிலும் எதிரொலிக்கிறது. ஒருவருக்கு ஒரு சாப்பாடு, இன்னொருவருக்கு இன்னொரு சாப்பாடு என்று பிரிப்பதையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வேறு மாதிரி நடத்துவது அதிக கோபத்தை உண்டாக்கும்.

திரைத்துறையினரிடம் பலரும், ‘அடுத்து என்ன படம்?’ என்றுதான் கேட்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நடிகை திரைப்படங்களில் நடிக்கிறார், சின்னத்திரையிலும் நடிக்கிறார். ஆனால், தொடர்ந்து நடிக்க மாட்டார். அடிக்கடி  இடைவெளி எடுத்துக்கொள்வார். அவர் எங்காவது வெளியில் போகும்போது பார்ப்பவர்களெல்லாம், ‘என்னம்மா டி.வி-யில இப்போ பார்க்க முடியறதில்லை’ என்பார்கள். திரைப்படமோ, தொலைக்காட்சி நாடகங்களோ எதுவாக இருந்தாலும், அது வெளியாக எவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. எத்தனையோ இயக்குநர்கள் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், அதை வெளியிட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நான் நடித்த இரண்டு படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்ட ஒரு படத்தை மீதம் 10 சதவிகிதம் நிறைவுசெய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார் ஓர் இயக்குநர். இப்படி இருப்பவர்களைப் பார்த்து இப்படிக் கேள்விகளைக் கேட்பது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.

நண்பர்கள் அறிவுறுத்தலின்பேரில் 2011-ம் ஆண்டில் ட்விட்டரில் ஒரு கணக்குத் தொடங்கினேன். சில நாள்களிலேயே அதை டெலிட் செய்துவிட்டேன். ஆனால், என் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அந்த நேரத்தில் போலிக் கணக்குகள் பற்றிய செய்தியைக் கேட்டால், அன்றைய நாளே முடங்கிவிடும். எந்த வேலையும் ஓடாது. நண்பர்களிடம் சொல்லி அந்தக் கணக்கு போலியானது என்று புகார் சொல்லி, அதை நீக்கும்வரை எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், இப்போது இது போன்ற விஷயங்களைத் தலையில் ஏற்றிக்கொள்வதே கிடையாது. `சமீபத்தில் இறந்துபோன பிரபலங்கள்’ என்று யூடியூப்பில் வெளியான வீடியோ பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன். ‘பிரபலமென்று ஒத்துக்கொள்கிறார்களே’ என்று வேடிக்கையாக நினைத்துக்கொண்டேன். 

ஆடியோ ரிலீஸ் அல்லது விருது விழாவுக்குப் போக வேண்டுமென்றால், நட்சத்திர அந்தஸ்திலுள்ள நடிகர், நடிகைகளுக்கான ஆடைகளை விளம்பர நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துவிடும். ஆனால், என்னைப் போன்ற நடிகர்கள் சொந்தக் காசைச் செலவழித்து, உடைகள் வாங்கி அணிந்துகொண்டு போக வேண்டும். அதனால் விழாக்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். வரவுக்குள் செலவைத் திட்டமிட்டு, தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே பொருளாதாரரீதியாக எந்தப் பிரச்னையும் இருக்காது.

“எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். அப்போதுதான் சமநிலையான வாழ்க்கையை வாழ முடியும். என் அம்மா நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ‘இன்னும் கொஞ்சம் அவருடன் நேரத்தைச் செலவழித்திருக்கலாமோ’ என்ற குற்ற உணர்ச்சி எனக்கு ஏற்படவேயில்லை. காரணம், நான் எவ்வளவு வேலை இருந்தாலும், எந்த ஊரிலிருந்தாலும் நானும் அம்மாவும் மணிக்கணக்கில் செல்போனில் பேசியிருக்கிறோம். இப்போதும் என் அப்பாவுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். அதேபோல், குடும்பத்தினருடன் வெளியே செல்கிறேன் என்றால், முதலில் செல்போனை அணைத்துவிடுவேன். படப்பிடிப்பிலும்கூட அப்படித்தான். கைநீட்டி சம்பளம் வாங்குவதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்” என்கிறார்.

உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி

“கஷ்டம் இல்லாத துறை எதுவும் இல்லை. நான் எந்த விஷயத்துக்காக இந்த உலகத்துக்கு வந்தேனோ அந்த விஷயத்தைச் சரியாகச் செய்துகொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நடிப்பு, இசை, எழுத்தாளர் போன்று கலைத்துறைக்கு வருவதெல்லாம் ‘ஓர் அழைப்பு’ என்பார்கள். நம்மையும் மீறி ஒரு சக்தி அதற்குள் நம்மை இழுக்கும். அப்படித்தான் நடிப்பைப் பார்க்கிறேன்” என்று நிறைவாகப் பேசி முடித்தார் வினோதினி.

சிக்கல்களின்போது நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும்!

``திரைத்துறையினருக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை எப்படிக் கையாள்வது?’’ என்று மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம்.

“சினிமாவில் தொடர்ந்து நடிப்பவர்களுக்கு திடீரென்று வாய்ப்புகள் இல்லாமல் போகும். சிலருக்கு மண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். கையில் பணம் புரண்டுகொண்டே இருக்கும்; திடீரென இல்லாமல் போகும். சிலர் கையிலிருக்கும் பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்துவிட்டு, கடனில் சிக்கிக்கொள்வார்கள். இது போன்ற நேரங்களில் வெறுமை உணர்வு மேலோங்கி, மன அழுத்தம் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்.

உடலுக்கும் தொழிலுக்கும் - 13 - நடிகை வினோதினி

சிக்கல்களின்போது எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. நிகழ்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எந்தப் பிரச்னையையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தன்னைப் போன்ற சக நட்சத்திரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப்படக் கூடாது. 

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். இறப்புக்குப் பின்னரும் மக்கள் நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேச வேண்டும் என நினைத்து, சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஒரு நாளில் எத்தனை நல்ல காரியம் செய்திருக்கிறோம் என்று எழுதிவைத்து, ஒரு மாதம் கழித்து அதைத் திரும்பிப் பார்த்தால், வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமுள்ளதாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

வாய்ப்புகள் குறையும்போது துறை சார்ந்த வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம். துறை சார்ந்த நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல உறவை மேம்படுத்திக்கொள்வதும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையைக் கொடுக்கும்.

திரைப்படங்களில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. அப்படி ஏற்பட்டால் அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் விபத்துகள் அல்லது காயங்கள் ஏற்படும் என்று தெரிந்தால் கூடுமானவரை அந்தக் காட்சியைத் தவிர்த்துவிடலாம் அல்லது டூப் நடிகர்களை நடிக்க வைக்கலாம். தோற்றம்தான் திரைத்துறையினரின் ஆதாரம் என்பதால் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் டாக்டர் ஆனந்த் பிரதாப்.

வந்தனை செய்வோம்...

- ஜெனி ஃப்ரீடா;  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்