Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!

ந்த வாரம் இரண்டு உதாரணக் காட்சிகள்!

குட் நைட்!

காட்சி 1 :ராஜேஷ§க்கும் சௌம்யாவுக்கும் நிச்சயக்கப்பட்டது திருமணம். சுற்றமும் நட்பும் சூழ்ந்து அட்சதை மழை பொழிய... அவர்கள் இல்லறப் படிக்கட்டில் அடி எடுத்துவைத்தனர்.

அவர்களின் முதல் இரவு... நிலா வேளை... உற்சாகம் கும்மியடித்தது ராஜேஷ§க்கு. ஆ...னால்... சௌம்யாவைப் பயமும் பதற்றமும் சுருட்டி எடுத்தது. அவள் உடல் முழுக்க மெல்லிய உதறல்.

சௌம்யாவின் பயத்தையோ, நடுக்கத்தையோ உணராத ராஜேஷ், அவளைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கி றான். ஆனால், குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும் அவளுக்கு வியர்க்கிறது. ராஜேஷின் முரட்டுத்தனம் தாளாமல்  வீறிட்டு அலறிவிடுகிறாள் சௌம்யா.

அந்த நிலா இரவு அந்தப் புதுமணத் தம்பதிக்கு ஏதும் நிகழா இரவானது.

காட்சி 2 : 'இல்லறக் கரை முழுதும்...

           இனி, சந்தோஷ அலை புரளும்’ என்கிற கவிதை மீண்டும் மீண்டும் வீணாவுக்குள் ஊர்வலம் போனது.

அன்று இரவு தன் கணவனைத் தனி அறையில் சந்திக்கப்போகும் சந்தனப் பொழுதுக்காக அவள் காத்திருந்தாள்.

இரவு வந்தது.

கட்டிலில் காத்திருந்தான் கணவன். ஆனால்... வீணாவின் கண்களைச் சந்திக்க மறுத்தன அவனது கண்கள். அளவு கடந்த அச்சம் அவனைப் புரட்டி எடுத்தது.

''ஃபர்ஸ்ட் நைட்ல தோத்துப்போனேனு வெச்சிக்க மச்சி... அப்புறம் உன் வொய்ஃப் உன்னை மதிக்கவே மாட்டா...'' என்று நண்பர்கள் சொல்லியது மனதுக்குள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தது. கணவனின் அச்சத்தை உணர்ந்த வீணா, அவனை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாள்.

##~##

இதுவரை சினிமா கதைகளின் மூலம் ஆண்தான் 'ஆக்ஷன் கிங்’ என்று புரிந்துவைத்து இருந்த அவனுக்கு, மனைவியின் 'முன் முயற்சி’ குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கியது. உச்சக் கட்டத்தை எட்டாமலே அந்த இரவு கசப்போடு கழிந்தது.

- மேலே சொன்ன இரண்டு வெவ்வேறு காட்சிகளின் பின் விளைவுகள் கடுமையானவை.

முதல் சம்பவத்தில் - நோயாளிப் பெண்ணைத் தன் மகனுக்குக் கட்டிவைத்துவிட்டார்கள் என்றும்...

இரண்டாவது சம்பவத்தில் - ஆண்மை இல்லாத ஒருவனுக்குத் தன் மகளைத் தந்துவிட்டோமே என்றும்...

பெற்றோர்கள் உருண்டு புரண்டனர். வார்த்தைகள் எல்லை கடந்து மனம் வலித்தது உற்றார் உறவினருக்கு.

இதுபோன்ற நிலைமைக்கு யார் காரணம்?

திருமணம் நிச்சயம் ஆனதும் மண்டபம் பிடிப்பதில் தொடங்கி, நகைகள், பந்தக்கால், முகூர்த்தம் எனச் சகலத்தையும் யோசித்து யோசித்துத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பெற்றோர்கள்... திருமணத்துக்குத் தயாராகி நிற்கும் மணமகளிடமோ, மணமகனிடமோ இல்லற வாழ்க்கைகுறித்து மறைமுகமாகக்கூட பேசுவது இல்லை.

பொதுவாக - இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளுக்கு எதை எல்லாம் சொல்லித்தருவது, எதை எல்லாம் சொல்லித்தரக் கூடாது என்கிற வரைமுறைகளைத் தயாராக வைத்திருக்கிறார்கள். 'இதை எல்லாமா சொல்லித்தருவார்கள்?’ என்கிற தயக்கத்தில் பெற்றோர்கள் உழல்கிறார்கள்.

உயிரற்ற பொருட்களை, எந்திரங்களை வாங்கும்போது 'உபயோகிப்பாளர் கையேடு’ என்று ஒரு புத்தகத்தைத் தருவார்கள். 'இல்லற வாழ்க்கை இனிக்க’ எந்தக் குறிப்புப் புத்தகமும் இதுவரை இங்கு இல்லை.

இரண்டு மனங்கள் இணைவதனால்தான் அதற்குத் திருமணம் என்று பெயர். அது அர்த்தம் நிரம்பியதாக, உண்மையானதாக இருக்க வேண்டும் எனில், ஆண்-பெண் உறவுபற்றி, ஜனன உறுப்புகள்பற்றி, அவற்றின் முறையான செயல்பாடுகள்பற்றி ஒவ்வொருவரும் திருமணத்துக்கு முன்பாகவே தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உறவு நிலையில் முழுமையான திருப்தி வரும். தேவையற்ற விவாகரத்துகளைத் தவிர்க்க முடியும். ஒருகாலகட்டத்தில் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களில் சிலர், மறைமுகமாக இவற்றை எல்லாம் சொல்லித் தருபவர்களாக இருந்தார்கள். அதுவும் இப்போது இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப வழியே இல்லையா..? நிச்சயம் இருக்கிறது. அந்த சூப்பர் ஆலோசனை அடுத்த இதழில்...

-இடைவேளை