2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெறுகிறது. அதில் ஒரு தென்னாப்பிரிக்க பௌலர் 4 விக்கெட்டுகள் எடுக்கிறார். அவருக்கு அந்தப் போட்டிதான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகப் போட்டி. அப்போது தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்திடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ``ஏன் அவரை முன்னரே பயன்படுத்தவில்லை?"... அதற்கு ஸ்மித்தின் பதில்... ``இவரைப் பற்றி மற்ற அணிகளுக்கு போதுமான அளவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அணியில் விளையாட அனுமதிக்கவில்லை."

ஆம், அவர் பெயர் முகம்மது இம்ரான் தாஹிர். 2011-ம் ஆண்டு தாஹிர் தென்னாப்பரிக்க அணியில் இடம்பிடித்தபோது, அவருக்கு வயது, 32. ஸ்மித் சொன்னது மாதிரியே வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். இன்னொன்று சொன்னால் எல்லாருக்கும் ஞாபகம் வரும். சிஎஸ்கேவில் விக்கெட் எடுத்ததும் ஒரு ஸ்பெஷல் ஓட்டம் கொடுப்பாரே.. அவர்தான்!
முகம்மது இம்ரான் தாஹிர், 1977-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சொந்த நாடு பாகிஸ்தானாக இருந்தாலும், இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று, அந்த அணியில் இடம்பெற்று கிரிக்கெட் வீரராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது தென்னாப்பிரிக்காவின் முக்கியமான கிரிக்கெட் வீரர். லேட்டாக வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாக உபயோகித்து திறம்படச் செயல்பட்டவர். நிக்கி போயே என்ற ஸ்பின்னருக்குப் பின்னால் தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல ஸ்பின்னர் கிடைக்காமல் இருந்தது. அந்தக் குறையை முழுமையாகப் பூர்த்தி செய்தவரும் இம்ரான் தாஹிர் மட்டும்தான். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும், இவரது ஸ்பின்னிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது. 2013-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னை நிராகரித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

அதேபோல விக்கெட்டை எடுத்துவிட்ட பின்னர், இவர் ஓடும் ஓட்டம் இருக்கிறதே உசேன்போல்ட்கே சவால்விடும் ஓட்டமாக இருக்கும். விக்கெட் எடுத்துவிட்டால் பிரேக் பிடிக்காத ரேஸ்கார்போல ஓடுவார். தாஹிரின் இந்த ஸ்டைல் ரசிகர்களுக்கு ஏனோ மிகவும் பிடித்துப் போனது. தென்னாப்பிரிக்காவிற்காக விளையாடினாலும், தமிழக மக்களின் இதயத்திலும் இடம்பிடிக்கத் தவறவில்லை, இந்த தாஹிர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடி வரும் தாஹிர், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் பெற்றார்
இப்போது உலகக் கோப்பையில் விளையாடி வரும் இவருக்கு வயது 40. உலகக் கோப்பையின் முன்னணி பந்துவீச்சாளர்களில் இப்போது முக்கியமானவர். பௌலிங்கில் ராஜா என்றால், பீல்டிங்கில் ராஜாதிராஜா! தென்னாப்பிரிக்க வீரர் என்றாலும் சென்ற இடமெல்லாம் கொண்டாடப்படுபவர் தாஹிர். இந்தியன் பிரீமியர் லீகில் `சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நம் ரசிகர்களைக் கொள்ளை கொண்டது போலவே பாகிஸ்தான் சூப்பர் லீகில் `முல்தான் சுல்தான்ஸ்’ அணியில்... கரீபியன் பிரீமியர் லீக்கில் ‘கயானா அமேசான் வாரியர்ஸ்’ அணியில் என்று ஆல் ஏரியா கில்லியாக வலம் வருகிறார். 2016-ம் ஆண்டு, ஜூன் 15-ம் தேதி, நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
இவரது ஸ்பின்னை எதிர்கொள்ள பிரபல பேட்ஸ்மென்களே தடுமாற, `டேஞ்சரஸ் பௌலர்’ என்று கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்பட்டார். விளையாடிய 58-வது போட்டியில் தனது 100-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 100 விக்கெட்டுளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் இன்னொரு சாதனை இவர் மகுடத்தில் சேர்ந்தது. கிரிக்கெட்டில் ஒருவருக்கு 35 வயதாகிவிட்டாலே அவரது ஃபிட்னஸ் சம்பந்தமான பேச்சுகள் வர ஆரம்பித்துவிடும். ஆனால் 40 வயதில் உலகக் கோப்பை விளையாடிக் கொண்டிருக்கும் தாஹிரின் ஃபிட்னஸ் குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு சென்னை ஐ.பி.எல்-க்காக விளையாடும்போது, மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி முதுகு வலியின் காரணமாக ஆடவில்லை. அந்தப் போட்டிக்குப் பின்னர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார், தோனி. ஸ்பின் பௌலிங்கின்போது ஹெல்மெட்டைக் கழற்றி வைத்து விளையாடுவது தோனியின் ஸ்டைல். ஒருமுறை ஸ்பின், ஸ்பீடு என மாற்றி மாற்றி எதிர் கொண்டார். அதற்கு முன்னர் முதுகுவலியால் அவதிப்பட்ட தோனி, ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டை எடுக்கக் குனிந்து, நிமிர்ந்துகொண்டிருந்தார். இதை லாங்ஆனில் நின்று கவனித்த இம்ரான் தாஹிர், தோனி கழற்றி வைத்த ஹெல்மெட்டை எடுக்க வந்தபோது, எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடிவந்து ஹெல்மெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஓடிப்போய் தனது இடத்தில் நின்று கொண்டார். இவரது எக்ஸ்பிரஸ் வேக ஓட்டத்தால் `பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரும் இவருக்குண்டு. இவருக்கும் பராசக்திக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? ‘ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினேன்...’ ரேஞ்சில் ஓடுவதால் நம்ம ஆட்கள்தான் அவருக்கு இந்தப் பட்டப்பெயரைக் கொடுத்தது!
2017-ம் ஆண்டு பிப்ரவரி 17,-ம் தேதி இருபது ஓவர் போட்டியில் எடுத்த விக்கெட் மூலமாக 50 விக்கெட்களைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார். 2017-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, நியூசிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மிகக் குறைவான சராசரியுடன் பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியில் இதுவரை வேறு யாரும் செய்யாத சாதனையை இவர் செய்திருக்கிறார். ஆம், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு விக்கெட் எடுத்தார். அதையும் சேர்த்து உலகக் கோப்பையில் மட்டும் அவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 39 ஐத் தொட்டது. அதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார், தாஹிர். இதற்கு முன்னர், வேகப்பந்து வீரர் ஆலன் டொனால்டு 38 விக்கெட் எடுத்து முன்னிலையில் இருந்தார். மிகத் தாமதமாக அணியில் இடம்பிடித்து கடந்த 9 ஆண்டுகளில் அசைக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார். இவ்வளவு சாதனை நிகழ்த்திவிட்டு, இந்த உலகக் கோப்பையுடன் தனது ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேன் என முன்னரே அறிவித்துவிட்டார். தனது ஓய்வுக் காலத்தை அறிவித்துவிட்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும்போது வெறி இருக்கத்தானே செய்யும். இவரின் பெயரை வர்ணனையாளர்கள் உச்சரிக்கும்போது, அதில் ஒருவித எச்சரிக்கையும் கலந்து ஒலிக்கும். அது பேட்ஸ்மேன்களுக்கான எச்சரிக்கை.
தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் பல வீரர்கள் வரலாம் போகலாம். ஆனால் தாஹிரின் இடத்தை நிரப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.