பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு, தடுப்பூசி விநியோகம், கருவள விகிதம், ஆண் பெண் விகிதம் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சுகாதாரக் குறியீடு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகையாகப் பிரித்து 2017-18-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், `தமிழகம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா, அரியானா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம், தடுப்பூசிகள் போடுவதில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, தட்டம்மைக்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கு காசநோய்க்கான (BCG) தடுப்பூசி மூன்று முறை, தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல், ரண ஜன்னிக்கான (DPT)தடுப்பூசி மற்றும் வாய் வழியாகக் கொடுக்கப்படும் போலியோ தடுப்பு மருந்து (OPV) மூன்று முறை வழங்கப்பட்ட விகிதத்தின்படி தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 2015-2016-ம்

ஆண்டில் 82.1 சதவிகிதமாக இருந்த தடுப்பூசி விகிதம், 2017-2018-ல் 76.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கேரளாவில் 94.6 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதாவது கேரளாவில் ஒரு குழந்தைக்குக்கூட தடுப்பூசி மருந்து வழங்கப்படாமல் இல்லை என்பது இதில் தெளிவாகிறது. மறுபுறம் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
நிதி ஆயோக் அறிக்கை தொடர்பாகப் பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, "நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் பின்பற்றும் சில வழிமுறையைத்தான் மத்திய சுகாதாரத்துறை பின்பற்றுகிறது. ஆனால், தமிழகம் பின்தங்கியிருப்பதாக தவறான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதில் தமிழகம் 76.1 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கணக்குப்படி 96 சதவிகிதம். எவ்வளவு குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை வைத்துக் கணக்கிடாமல், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்து உத்தேசமாகக் கணக்கிட்டதால்தான் தவறுகள் நடந்திருக்கின்றன" என்று தெரிவித்திருந்தார்.
இதே கருத்தைத்தான் தமிழக சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஆனால், சமூகச் செயற்பாட்டாளர்கள் இந்தக் கருத்தை மறுக்கின்றனர். 'தமிழகத்தில் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மந்தமாக உள்ளன' என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, "தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் விநியோகத்தில் சில சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. தடுப்பு மருந்து பற்றாக்குறையால்தான் கடந்த ஜனவரி மாதம் நடக்கவேண்டிய போலியோ தடுப்பு மருந்து முகாம் தாமதமாக நடைபெற்றது. தடுப்பூசிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி போடுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும்

தடுப்பூசிகளுக்கு எதிராக, குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் தொடர் பிரசாரம் செய்யப்படுகிறது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கடந்த ஆண்டு தொண்டை அழற்சி நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவையெல்லாம் முறையாக தடுப்பூசிகள் வழங்காததற்கான சான்றுகள்தான்.
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் தொடர்பாகவும் எதிர் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இதனால் வீடுகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் அறிவியல் ரீதியான விளக்கமளிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. 'நிதி ஆயோக் அறிக்கையில் தவறான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன' என்று அறிக்கையைக் குறைகூறிக் கொண்டிருக்காமல், தமிழகத்தின் சுகாதாரத்தில் உண்மையான அக்கறை எடுத்து அதன் தவறுகளைக் களைய அரசு முயற்சி எடுக்கவேண்டும்" என்றார் டாக்டர் ரவீந்திரநாத்.

'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் சென்னை', 'சுகாதாரத் துறையில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னோடி' என்று மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், உண்மை நிலையை நீண்ட காலம் மறைக்க முடியாது என்பதைத்தான் நிதி ஆயோக் அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் உண்மையான வளம் மனிதவளம்தான். மனிதவளத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் தடுப்பூசிகள் விஷயத்தில் இனியும் அலட்சியம் வேண்டாம்!