இளம் ஜோடிகளுக்கு

அளவு முக்கியமா?
அழகும் ஆரோக்கியமும் நிறைந்த 25 வயது வாலிபன் அவன். ஒரு சுப தினத்தில் அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத் தேதி நெருங்க நெருங்க மனதின் உச்சியில் நின்று யாரோ உடுக்கை அடிப்பதுபோல் இருந்தது. அந்த பயத்துக்குக் காரணம் ஒரு 'சின்ன’ விஷயம்தான்.

தன்னுடைய ஆண் உறுப்பு அளவில் சிறியதாக இருப்பதாக அவனுக்குள் ஒரு வேதனையான நினைப்பு. திருமணம் நெருங்க நெருங்க அந்தச் சின்ன விஷயம் பெரிய வேதனையாக மாறி மனதை அலைக்கழிக்கத் தொடங்கியது. ஊரே வேடிக்கைப் பார்ப்பது மாதிரியான குற்றத்தைச் செய்தவன்போல் தடுமாறித் தவித்தான். பயத்தில், திருமணத்துக்கு முதல் நாள் யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டான்.
அந்த இளைஞனுடைய பயமும் சந்தேகமும் சரிதானா?
ஆண் உறுப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாததுதான் அந்த இளைஞனுடைய பயத்துக்கு முதல் காரணம்.
ஆணின் பிறப்பு உறுப்பு ஒரு உருளை (Cylindrical shape)போன்று இருக்கும். பெண்ணின் உறுப்புக்குள் இயல்பாக நுழைவதற்காகத்தான் இயற்கை அப்படி உருளை போன்ற அமைப்பைப் படைத்து இருக்கிறது. அந்தக் குழாய்க்குள் மூன்று உருளைகள் இருக்கும். இவை ஒருவித ஜவ்வால் இணைக்கப்பட்டு இருக்கும். உருளையின் முன்பகுதி கோன் வடிவில் இருக்கும். இதனை க்ளான்ஸ் (Glans) என்பார்கள். இது முன் தோலால் மூடப்பட்டு இருக்கும். ஆண் உறுப்பின் முன் தோலின் அடியில் சில சுரப்பிகள் உள்ளன. அதற்கு ப்ரீப்யூஷியல் சுரப்பி (Preputial glands)என்று பெயர். இந்தச் சுரப்பிகளில் இருந்து ஸ்மெக்மா (Smegma) எனும் திரவம் சுரக்கும். இதனால் இந்த இடத்தில் அழுக்கு சேர வாய்ப்பு உண்டாகும். பெற்றோர் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு, தினமும் ஆண் உறுப்பின் முன் தோலை பின்னால் தள்ளி சுத்தப்படுத்துமாறு சொல்லித்தர வேண்டும். அப்படி சுத்தப்படுத்தாவிட்டால், துர்நாற்றம் வருவதுடன் நோய்த் தொற்று வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
உருளை வடிவத்தில் உள்ள ஆண் உறுப்புக்குள் காற்றறைகள் இருக்கும். சாதாரண நிலையில் காற்று இல்லாத பலூன்போல இருக்கும் ஆண் உறுப்பு, பாலுணர்வு ஏற்படும்போது உடல் முழுக்க உள்ள ரத்தத்தின் ஒரு பகுதி ஆண் உறுப்புக்குள் வருவதால் காற்றடைத்த பலூன்போல விரைப்பு அடையும்.
##~## |
ஆணின் செக்ஸ் சுரப்பிகள் என்றால் அவை, விதைப்பைக்குள் இருக்கும் இரண்டு விதைகள்தான். செக்ஸ் நடவடிக்கையில் ஆண் உறுப்பின் உருளை போன்ற அமைப்பு முன்னிலை வகித்தாலும் அதற்கு காரணகர்த்தாவாக இருப்பவை விதைகள்தான். டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோனைத் (டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனால் தான் ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையே உண்டாகிறது.) தயார் செய்வதும், குழந்தையை உருவாக்கும் உயிர் அணுக்களைத் தயார் செய்வதும்தான் விதைகளின் வேலை.
இப்படித் தயாராகும் உயிர் அணுக்கள் விதையின் எபிடிடிமிஸ் (Epididymis) எனும் பகுதியில் சேகரமாகும். உயிர் அணுக்கள் தயாரான நாளில் இருந்து சுமார் 70 நாட்கள் கழித்துத்தான் பக்குவ நிலைக்கு வரும். அதன் பின்பு ஒரு டியூப் (Vasdeferens) மூலம் வெளியில் வந்து, ஆண் உறுப்பின் சிறுநீர்ப் பாதைக்கு வரும். அந்தப் பாதையின் ஓர் இடத்தில் உள்ள செமினெல் வெசிக்கிள், புரோஸ்டேட் சுரப்பிகள் சுரக்கும் திரவங்களுடன் சேர்ந்து, விந்துவாக வெளிவரும்.
பொதுவாக இரண்டு விதைகளும் சமமாக இருக்காது. ஒன்றுக்கு ஒன்று மேலும் கீழும்தான் இருக்கும். 'நமக்கு மட்டும்தான் இப்படியோ’ என நினைத்து இந்த விஷயத்துக்காகக் கவலைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இயற்கை இந்த இரண்டு விதைகளையும் ஏன் உடம்புக்கு வெளியே வைத்துள்ளது?
விதையானது நம் உடம்பின் இயல்பான வெப்ப நிலையில் (98.4 டிகிரி ஃபாரன்ஹீட்) வேலை செய்யாது. இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி குறைவான வெப்ப நிலையில்தான் ஆற்றல்மிக்கதாக இருக்கும்.
விதைப்பையானது இயற்கையாகவே சுருங்கி, விரியும் தன்மையைக்கொண்டு இருக்கும். வெப்பக் காலத்தில் விரிவடையவும், குளிர் காலத்தில் சுருங்கவும்தான் இந்த ஏற்பாடு.
இதனால் அந்தந்த காலக்கட்டத்துக்கான தட்பவெப்பத்தை விதைகள் பெறுகின்றன.
சரி... ஓர் ஆண் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய, அந்த ஆணுக்கு ஆண் உறுப்பு எந்த அளவில் இருக்க வேண்டும்?
- அளவில் சிறிதாக இருக்கும் ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியுமா?
- உடம்பு பெரிதாக இருப்பவர்களுக்கு ஆண் உறுப்பும் பெரிதாக இருக்குமா?
இப்படி எத்தனை எத்தனைக் கேள்விகள் ஒவ்வோர் ஆணுக்குள்ளும் படம் எடுத்துப் பாடாய்ப்படுத்துகின்றன?
- இடைவேளை