இப்படிக்கு வயிறு! - 4

கடல் அலையின் அழகைப் பாடாத கவிஞர்கள் இல்லை. கடல் அலையைப் போலதான் இந்தக் குடல் அலையும். குடல் சுருங்கி விரியும் இயக்கத்தைப் பார்த்தால், இதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். கடல் அலைக்கு எப்படி ஓய்வே இல்லையோ... அதைப்போலதான் குடல் அலைக்கும். கடல் அலையில் சீற்றமோ, உள்வாங்கும் தன்மையோ இருந்தால் இயற்கையின் அழிவுக்கான அறிகுறி என்பார்கள். குடல் அலையின் இயக்கம் அதிகமானாலோ... இல்லை நின்றுபோனாலோ வயிறாகிய எனக்கு உபாதைகள் உண்டாகின்றன என அர்த்தம். சில நேரங்களில் மட்டும் மூளைக்கு அடிபணிந்து நான் நடக்கும்போது, குடல் அலை இயக்கம் மிக அதிகமாகி காரணம் புரியாத பேதி ஏற்படும். இதனால், குடல் இயக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலும் பேதியும் மாறிமாறித் தோன்றுகின்றன.
குடலின் அமைப்பைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொன்னால்தான் உங்களுக்கு சுலபமாகப் புரியும். உணவுக் குழாயின் உள் அமைப்பை ஓர் உருண்டையான சிலிண்டர் அல்லது குழாய் போன்ற அமைப்புக்கு ஒப்பிடலாம். உணவுப் பாதையை உள்ளே நோக்கினால், அதற்குள் ஐந்து அடுக்குகள் இருப்பது தெரியும். இந்த அமைப்பு உணவுக் குழாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரைக்கும் பொருந்தும். உணவுக் குழாயின் அமைப்பையும் அதற்கான பெயர்களையும் இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. உணவுக் குழாயின் உட்சுவர் சவ்வுப் படலத்தால் ஆனது. இதனை மியுகோஸா (Mucosa) என்பார்கள்.
2. இதற்கு அடுத்து சப் மியுகோஸா அதாவது இரண்டாவது தசை அடுக்கு உள்ளது. இவற்றில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய்த் தசைகள் இருக்கும்.
3. இந்தத் தசைச் சுவர் நீளமாகப் போகும் இயங்குத் தசைகள் ஆகும். இவை தானாகவே இயங்குபவை.
4. நான்காம் அடுக்கும் குறுக்கு வட்டாக வட்ட வடிவமான தசைச் சுவர்களாக உள்ளது.
5. இவை அனைத்தும் சேர்த்து போர்வைபோல போர்த்தி இருப்பதற்கு மேல் உறை (Serosa) என்று பெயர்.
இந்த உறை உணவுக் குழாய், பெருங்குடலின் சில பகுதிகள், மலக் குடலின் ஒரு பகுதியில் இருப்பது இல்லை.
ஒரு நிறுத்தத்தில் இருந்து மற்றொரு நிறுத்தத்துக்கு நீங்கள் எப்படி லக்கேஜை எடுத்துச் செல்கிறீர்களோ... அப்படித்தான் குடல் அசைவு இயக்கம் அல்லது அலை இயக்கம் நடைபெறுகிறது.
இதில் இரு வகை அலைகள் உள்ளன.
1. தளர்வு அலை (Receptive Relaxation)
2. அசைவு அலை (Peristalsis)
தளர்வு அலை, உணவை உள்வாங்கிக்கொள்கிறது. அசைவு அலை, உணவை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு வெளித்தள்ளுகிறது. இந்த அசைவு இயக்கம் ஓர் இடத்தில் இருந்து அடுத்த இடத்துக்கு அதன் பிறகு அடுத்த இடத்துக்கு எனத் தொடர்ச்சியாக நடக்கும். இதைத்தான் பகுதிவாரியாக நடக்கும் அலை இயக்கம் என்கிறார்கள்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?
ஏன் இரு வகைத் தசைகள் உள்ளன?
அலை இயக்கம் எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டாலே, இந்தக் கேள்விகளுக்கான பதில் கிடைத்துவிடும்.
சுருங்குதல், தளர்தல் இரு வகைத் தசைகளிலும் அலை இயக்கம் நடக்கிறது. நீள் தசை சுருங்கும்போது வட்டத் தசை தளர்கிறது. அதன் காரணமாக அந்தக் குடல் பகுதி விரிந்து அதற்கு முன் உள்ள பகுதியில் உள்ள உணவை உள் வாங்குகிறது. வட்டத் தசை சுருங்கும்போது, நீள் தசை தளர்கிறது. விளைவு, அந்தக் குடல் பகுதி சுருங்கி அங்கு உள்ள உணவைப் பக்கத்துப் பகுதிக்குத் தள்ளிவிடுகிறது. இந்த அலை இயக்கத்தைப் பற்றி ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா? அடுத்த இதழில் சொல்கிறேன்...
- மெல்வேன்... சொல்வேன்...