குட் நைட்!

##~## |
கலகல கல்யாண வீடு. செமத்தியான சூப்பர் தலைவாழைச் சாப்பாடு. கை நனைத்துவிட்டுப் போன அத்தனை பேரும் 'நான் திருப்தியாகச் சாப்பிட்டேன்’ என்று சொல்வார்கள் என நீங்கள் எதிர்பார்த்தால், ஏமாந்துபோவீர்கள். திருப்தி என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். திருப்தி என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. இது மனம் சம்பந்தப்பட்டது. பொதுவாகவே சுண்டலோ, பணமோ மனுஷனுக்கு எதுவுமே கை நிறைய இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பான்.
சமுதாயத்தில் எல்லா மனிதர்களுமே பிறப்பு உறுப்புகளைப் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்களுடன்தான் இருக்கிறார்கள். அளவில் பெரிதாக இருக்கும் ஆண் உறுப்பைக்கொண்ட மனிதனால்தான் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

அதேபோல உடல் பெருத்தவர்களுக்கு ஆண் உறுப்பும் பெரிதாக இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இதுவும் உண்மை இல்லை. உடலின் அளவுக்கும் ஆண் உறுப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உடல் பெரிதாக இருப்பவர்களுக்கு ஆண் உறுப்பும் பெரிதாக இருக்கும் என்பதும் ஒருவிதக் கற்பனையே.
உண்மையில் - ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் நல்லபடியாக செக்ஸ் வைத்துக்கொள்ள, ஆண் உறுப்பின் அளவானது - விறைப்புத்தன்மை உள்ள நிலையில் இரண்டு அங்குலம் (5 செ.மீ.) மட்டுமே போதுமானது.
ஏனெனில், பெண் பிறப்பு உறுப்பின் - முதல் இரண்டு அங்குலத்திலேயே உணர்ச்சி நரம்புகள் முடிந்துவிடுவதால்... ஒரு பெண்ணுக்கு சுகம் தர ஓர் ஆணுக்கு இரண்டு அங்குல நீளம் உள்ள ஆண் உறுப்பே போதுமானது.
ஆண் உறுப்பின் நீளம் மட்டுமல்ல; சுற்றளவு பற்றியும் எந்தத் தம்பதியும் கவலைகொள்ளத் தேவை இல்லை.
இயற்கை எல்லா ஆண்களுக்குமே இரண்டு அங்குல நீளத்துக்கு மேலான ஆண் உறுப்பைத்தான் தந்துள்ளது. மிகவும் அரிதாக லட்சத்தில் ஒருவருக்குச் சிறிய அளவில் ஆண் உறுப்பு (Micro penis)அமைந்திருக்கலாம். அதற்கும்கூட தீர்வு உண்டு.
ஆனால், மிகப் பெரிய ஆண் உறுப்பு உள்ள ஆண்தான் தன்னைத் திருப்திப்படுத்த இயலும் என்று ஒரு பெண் தவறாகக் கற்பிதம் செய்துகொண்டால், அந்தப் பெண் சுகத்தை மட்டும் அனுபவிக்கலாம். அவளால் திருப்தி அடைய முடியாது.
'ஆண் உறுப்பைப் பெரிது பண்ண முடியுமா?’ என்பது பலருடைய கேள்வி. ஓர் ஆண் 20 வயது வரை கிடுகிடுவென வளர்வான். அந்த வயது வரை ஆண் உறுப்பும் உடம்புடன் சேர்ந்து வளரும். அதன் பிறகு வளராது. சிலருக்கு ஹார்மோன் கோளாறு காரணமாக ஆண் உறுப்பின் அளவுகளில் குறைபாடு இருந்தால் ஹார்மோன் மருந்துகளைக் கொடுத்து அதனை சரிசெய்யலாம்.
'வேகுவம் பம்ப்’ (Vacuum Pump) மூலம் ஆண் உறுப்பின் அளவுகளை பெரிது பண்ணலாம் என்று விளம்பரம் செய்கிறார்கள். இது பொய். ஆண் உறுப்பில் எழுச்சிக் குறைபாட்டினை வேண்டுமானால் இதன் மூலம் ஓரளவு சரி செய்யலாமே தவிர, நீளத்தை அதிகப்படுத்த முடியாது.
ஒருவருக்கு உறுப்பு எப்படி அமைந்துள்ளது என்பதைவிட, அதை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். அது அனுபவத்தினால் மட்டுமே கூடும்.
திருமணமான தம்பதிகள் ஆண் உறுப்பு, பெண் உறுப்புகளின் அளவைப் பற்றி யோசிக்கவே கூடாது. ஒரு மனைவிக்குக் கணவனிடம் இருந்து கிடைக்கிற சுகம், வெறும் அளவுகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது இல்லை. அது அன்பு, அக்கறை, ஆறுதல் இவற்றுடன் எல்லாம் இணைந்த ஒரு ரசனை ரசாயனம்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண் உறுப்பு சிறிது வளைந்தே காணப்படும். இது இயற்கையானது. இயல்பானதும்கூட. ஆனால், பெய்ரோனிஸ் (Peyronie’s Disease) என்கிற பாதிப்பினால், ஒரு சிலருக்கு ஆண் உறுப்பின் உள்சதை சிதைவுற்று, அதன் காரணமாக ஆண் உறுப்பு வளைந்து காணப்படும். இப்படி இருப்பவர்களின் ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையும்போது வலி ஏற்படும். இதற்குத் தகுந்த சிகிச்சைகள் உண்டு.
அடுத்த இதழில்... பெண்ணின் ஜனன உறுப்பைப் பற்றிய ஆண்களின் சந்தேகங் களையும் குழப்பங்களை யும் பற்றி பார்ப்போம்.