மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 6

இப்படிக்கு வயிறு! - 6

இப்படிக்கு வயிறு! - 6
##~##

கிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாகப் பசி எடுக்கிறதே... அது எதனால்? மகிழ்ச்சிக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம்? 

சோகமாக இருக்கும்போது சாப்பிடுகிற எண்ணமே இல்லாத அளவுக்கு பசி மங்கிவிடுவது ஏன்? அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால், உடனே சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதே... அது எதனால்?

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். மாநிலங்களை மாநில அரசும் மொத்த மாநிலங்கள் அடங்கிய தேசத்தை மத்திய அரசும் நிர்வாகம் செய்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் இணைப்புப் பாலமாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் செயல்படுகின்றனர். இதைப் போலதான் எனக்கும் மூளைக்குமான செயல்பாடுகளும் நடக்கின்றன.

மத்திய அரசு - மூளை

மாநில அரசு - வயிறாகிய நான்

இணைக்கும் எம்.பி-க்கள் - தானியங்கி நரம்பு மண்டலம்

தானியங்கி நரம்பு மண்டலத்தில் இருக்கும் உட்பிரிவுகளை இப்படி விளக்கலாம்.

1. ஆளும்கட்சி எம்.பி-க்கள் - இணைப்பரிவு நரம்பு மண்டலம் (Parasympathetic).

2. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் - பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic).

இப்படிக்கு வயிறு! - 6

விளக்கிச் சொல்கிறேன் என்கிற பெயரில் நான் அரசியல் பேசுவதாக தவறாக நினைக்க வேண்டாம். நம் உடல் என்கிற கட்டமைப்பு கிட்டத்தட்ட ஒரு தேசத்துக்கான கட்டமைப்பை ஒத்தது என்பதற்காகவும் அதன் மகத்துவத்தை மறைக்காமல் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரசியல் உதாரணங்கள் எல்லாம்! இனி விஷயத்துக்கு வருகிறேன்...

40 ஆயிரம் ஆண்டுகளாக மனிதனின் மூளை அதே அளவில்தான் இருக்கிறது. மனிதன் எத்தகைய பரிணாம வளர்ச்சிகளை அடைந்தபோதும் அவன் மூளையின் அளவு ஒரே அளவைத்தான் ஒத்திருக்கிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களின் எண்ணிக்கை 100 மில்லியன்கள். மூளையின் ஒரு செல் 'நியூரான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நியூரான்களின் கூட்டமைப்பில்தான் மூளை இயங்குகிறது. ஒரு நியூரானுக்கும் மற்றொரு நியூரானுக்கும் உள்ள இடைவெளியில் நியூரோ டிரான்ஸ்மிட்டர் என்னும் ரசாயனப் பொருட்கள் சுரந்து, ஒரு நியூரானுக்கும் அடுத்த நியூரானுக்கும் உள்ள நரம்பலை இயக்கத்தைத் தடைபடாமல் தொடர் இயக்கமாக இயங்க வைக்கின்றன.

இந்த நியூரான்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினால் அது லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் லண்டன் வரை அணிவகுக்கும். விநாடிக்கு ஒரு நியூரான் என்று எண்ண ஆரம்பித்தால் அத்தனை நியூரான்களையும் எண்ணி முடிக்க 3,171 வருடங்கள் ஆகும் என்கிறது மருத்துவ ஆய்வு. எதற்கு இந்த 'மூளைப் புராணம்’ என நீங்கள் கேட்பது புரிகிறது. மூளையும் அதன் செயல்பாடுகளும் இன்றைக்கும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஆச்சர்யமாகத்தான் தொடர்கின்றன. ஆனாலும், மூளையின் பகுதிகளையும் அதன் இயக்கங்களையும் அறிய நவீன கருவிகள் எம்.ஆர்.ஐ., பெட்ஸ்கேன் மூலம் நடக்கும் ஆய்வுகள் உதவுகின்றன. மூளையின் மையப் பகுதியில் 'சி’ வடிவத்தில் அமைந்துள்ள லிம்பிக் சிஸ்டம் என்ற அமைப்புதான் வயிறாகிய எனக்காகவே வடிவமைக்கப்பட்ட பகுதி (Visceral brain).  உணர்ச்சிகளின் இருப்பிடமாக இந்தப் பகுதி விளங்குவதால் சீரண மண்டலத்தின் இயக்கமும் இதைச் சார்ந்தே நடக்கிறது. இப்போது புரிகிறதா... மூளைக்கும் எனக்குமான பந்தம்?

நீங்கள் உண்கிற உணவை ஏற்பதும் செரித்து சக்தியாக்குவதும் என் வேலையாக இருந்தாலும், என் சம்பந்தமான பல வேலைகளின் தீர்மானிப்பு ஸ்தலமாக மூளைதான் இருக்கிறது. மூளைக்கும் வயிற்று நரம்பு இயக்கத்துக்கும் உள்ள இணைப்புப் பாலம் தானியக்க நரம்பு மண்டலம் (Autonomous Nervous System).

இப்படிக்கு வயிறு! - 6

தானாக உடலில் இயங்கும் உறுப்புகளின் இயக்கத்துக்கு முக்கியம் இந்தத் தானியக்க நரம்பு மண்டலம். இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகளோடு நானும் இந்தத் தானியக்க நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன். தானியக்க நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் இருப்பதாக அரசியல் உதாரணம் சொன்னேன் அல்லவா... அதில், பரிவு நரம்புகள் எனக்குள் நிகழும் குடல் இயக்கத்தைக் குறைக்கின்றன. சுரப்பு நீரின் அளவையும் குறைக்கின்றன. இணைப் பரிவு நரம்புகளோ எனக்குள் நிகழும் குடல் இயக்கத்தை அதிகப்படுத்துகின்றன; சுரப்பு நீர் அளவைக் குறைக்கின்றன.

என் அடுக்கு அமைப்பின் நடுவில் இருவிதமான நரம்புப் பின்னல்கள் உள்ளன. அவை மூளைக்குத் தங்கள் இணைப்பைத் தானியங்கி நரம்பு மண்டலம் வழியாக இணைத்துக்கொள்கின்றன. வயிறாகிய என் தசைச் சுவர்களையும் அவை சார்ந்த நரம்பு இயக்கங்களையும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் சற்றே அதிர்ந்துபோனார்கள். மூளையில் உள்ளதுபோன்றே செல்கள் வயிறாகிய என் பரப்பில் இருப்பதையும் அதே அளவு எண்ணிக்கையில் (100 மில்லியன் செல்கள்) இருப்பதையும் அறிந்து வியந்துபோனார்கள். நியூரான் என்னும் நரம்பு செல்களை இணைக்கும் 'க்ளையா’ (Glia) என்ற உள் இணைப்பு செல்கள் எனக்குள் இருப்பதையும் அறிந்து வியந்தனர். மூளையில் உள்ளது போன்றே வயிறாகிய எனக்குள்ளும் ரசாயனப் பொருட்கள் சுரப்பதையும் கண்டனர். இந்த ரசாயனப் பொருட்களே உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி சுரந்து குடல் இயக்கத்தை மூளை சீர்படுத்துகிறது. இப்படிப்பட்ட பல்வேறு ஒற்றுமைகளால்தான், 'உடலின் இரண்டாவது மூளை’ என்கிற பெயரை குடல் இயக்க நரம்பு மண்டலத்துக்கு மருத்துவ உலகம் சூட்டியது. மூளையைப் பற்றி நான் புராணம் பாடிய பின்னணி இப்போது புரிகிறதா?

- மெல்வேன்... சொல்வேன்...