குட் நைட்!

##~## |
இந்த வாரம் பெண் உறுப்பைப் பற்றிய பல புதிய செய்திகளை அலசுவோம்.
'ஆண்களுக்கு சுன்னத் செய்யப்படுவதுபோல (ஆண் உறுப்பின் முன் உள்ள தோலை அகற்றுவது) பெண்களுக்கும் உள்ளதா என்கிற கேள்வியைப் பலர் என்னிடத்தில் கேட்டுள்ளனர்.
ஆண் உறுப்பின் மிக மிகச் சிறிய வடிவம்தான் (மினியேச்சர்) பெண் உறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ். ஓர் ஆணுக்கு ஆண் உறுப்பின் மூலமாக எவ்வளவு சுகம் கிடைக்கிறதோ - அதே அளவு இன்பம் கிளிட்டோரிஸ் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும். ஏனெனில் - பெண்ணின் ஜனன உறுப்பின் ஆரம்பத்தில் உள்ள கிளிட்டோரிஸில்தான் அதிகபட்ச உணர்ச்சி நரம்புகள் இருக்கின்றன. சுன்னத் மூலம் ஆண் உறுப்பின் முன் உள்ள தோலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுபோலவே பெண்ணின் கிளிட்டோரிஸின் முன் தோலையும் அகற்றுவதும் உண்டு. இது மதரீதியிலான காரணங்களுக்காக அல்ல; ஒரு பெண்ணுக்கு அடிக்கடி பிறப்பு உறுப்பில் கிருமித்தொற்று ஏற்படுவது, கிளிட்டோரிஸ் பிறப்பு உறுப்புடன் ஒட்டிக்கொண்டு அசையாமல் இருப்பது போன்ற

மருத்துவரீதியிலான காரணங்களால் கிளிட்டோரிஸின் முன் தோலை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவார்கள். இதனால் பெண் பெறும் சுகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது.
ஆண்களின் சுய இன்பத்தில் எத்தனை குழப்பங்கள் இருக்கின்றனவோ... அதேபோல, பெண்கள் சுய இன்பம் தொடர்பாகவும் நம் சமூகத்தில் ஏராளமான குழப்பங்கள், சந்தேககங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் போலவே பல வழிகளில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். தலையணையை வைத்து பிறப்புறுப்பில் அழுத்தியும் இரண்டு தொடைகளையும் இறுக்கிக்கொண்டும் கை விரல்களை பிறப்பு உறுப்புக்குள் நுழைத்தும் பெண்கள் சுய இன்பம் கொள்கிறார்கள். ஆனால், இதில் என்ன ஒரு வேறுபாடு என்றால், ஆண்கள் சுய இன்பத்தில் தெரிந்து ஈடுபடுகிறார்கள். பெண்களில் பலர் அது சுய இன்பம் என்று தெரியாமலேயே ஈடுபடுகிறார்கள். ஆணோ, பெண்ணோ... சுய இன்பம் தவறானது அல்ல. இதற்காக எவரும் குற்ற உணர்வுக்கு உள்ளாக வேண்டிய அவசியமும் இல்லை!
பொதுவாக இருபாலருக்குமே 'பிறப்பு உறுப்புப் பகுதி ஏன் கறுப்பாக இருக்கிறது?’ என்கிற கேள்வி பலருக்கு உண்டு. மெலனின் என்கிற பிக்மென்ட் (றிவீரீனீமீஸீt) அதிகமாக இருப்பதால், அந்த இடம் பலருக்குக் கருமையாக இருக்கும். பூஞ்சைத்தொற்று மாதிரியான தோல் பாதிப்பு வந்தால்கூட அந்த இடம் கருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த நிறம்பற்றிய குழப்பம், பிரச்னை வந்தால் மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது.
செர்விக்ஸ் (Cervix) எனப்படும் கருப்பையின் அடிப்பகுதியில் உற்பத்தியாகும் திரவங்களும் பிறப்பு உறுப்பில் ஊறும் திரவங்களும் பெண்ணின் பிறப்பு உறுப்பை எப்போதும் ஈரப்பதத்துடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உணர்ச்சிவசப்படும்போது வெளிப்படுகிற திரவம்பற்றி பெண்கள் கவலைப்பட வேண்டாம். இதனை வெள்ளைப்படுதல் என்றும் இதன் காரணமாக உடம்பு பலவீனமாகிவிடும் என்றும் பலர் நினைக்கிறார்கள். இதில் துளியும் உண்மை கிடையாது. இதனால் எந்தப் பாதிப்பும் வராது. ஆனால், போலி மருத்துவர்கள் மக்கள் மத்தியில் இதனைப் பிரச்னையாக்கி, பயத்தை ஏற்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள்.
அதே சமயம், இந்த திரவம் துர்வாடை அடித்தாலோ, மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை நிறமாக மாறினாலோ, அது வெளியேறும்போது பிறப்பு உறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறப்பு உறுப்புக்குள் ஏற்பட்ட தொற்று காரணமாகக்கூட இது ஏற்படலாம். எனவே, மருத்துவர்களிடம் உடனே ஆலோசிப்பது நல்லது.
சரி, உறவில் ஈடுபடும்போது பெண்ணின் சிறுநீர்த் துவாரத்துக்குள் ஆண் உறுப்பு நுழைய வாய்ப்பு உண்டா? சிலருக்கு இப்படியும் சந்தேகம் உண்டு. பெண் உறுப்பின் மேலே உள்ளது சிறுநீர்த் துவாரம். கீழ் உள்ளது ஜனனத் துவாரம். சிறுநீர் துவாரம் மிக மிகச் சிறியதாக இருக்கும். அதில் ஆண் உறுப்பு நுழைய வாய்ப்பு இல்லை. தெரிந்தோ தெரியாமலோ ஆண் உறுப்பைச் செலுத்த முயற்சித்தால், பெண் வலியில் துடித்து சம்பந்தப்பட்ட ஆணின் உறவையே துண்டித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!
- இடைவேளை