மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 7

இப்படிக்கு வயிறு! - 7

இப்படிக்கு வயிறு! - 7

னக்குள் சுரக்கும் ரசாயனங்கள்தான் பலவிதமான மாற்றங்களையும் நிகழ்த்துவதாக ஏற்கெனவே சொல்லி இருந்தேன். ரசாயனச் சுரப்பையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் ஒப்புமைப்படுத்திச் சொன்னால், உங்களுக்கு இன்னும் சுலபமாக விளங்கும். குடலின் ரசாயனப் பொருள்களில் டோபமின் அதிகமானால், வாந்தி உண்டாகும். 

டோபமின் குறைந்தால், பசியின்மை ஏற்படும். செரடோனின் அதிகமானால், ஐ.பி.எஸ். என்கிற வயிற்றுப்போக்கு நோய் உண்டாகும். செரடோனின் சுரப்பு குறைந்தால், மலச் சிக்கல் உருவாகும். அசிடைல்கோலின் சுரப்பு குடல் இயக்கத்துக்கு முக்கியமானது.

இது அதிகமானால், எச்சில் சுரப்புகள் அதிகரிக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மூளைக்கும் வயிறாகிய எனக்கும் எப்படிப்பட்ட தொடர்பு நிலவுகிறது என்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளிக்கு வேண்டாவெறுப்பாகக் கிளம்புகிறான். அப்போது அந்த மாணவனின் உணர்வுகளை மூளை அப்படியே பதிவுசெய்து அதைப் பகுத்து அதற்கான கட்டளைகளை லிம்பிக் நரம்பு மண்டலத்துக்கு அனுப்புகிறது. அங்கு அந்தக் கட்டளைகள் தானியங்கி நரம்பு மண்டலத்தின் மூலம் குடல் நரம்புகளுக்கு அனுப்பப்படுகிறது. இதையடுத்து, குடல் நரம்புகளில் டோபமின் என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் சுரக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட மாணவன் வாந்தி எடுக்கிறான். உடனே அவனுக்கு வயிற்று வலியும் உருவாகிறது. இதனால், பள்ளிக்குச் செல்வது தடைபடுகிறது. ஒருவனின் மனநிலைக்கு ஏற்ப குடலின் நிலைமைகள் எப்படி எல்லாம் மாறுகின்றன என்பது ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?! இதுதான் குடல் நரம்பு மண்டலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி.

##~##

இது நாள் வரை என்னுடைய அமைப்பு, பாகங்கள், செயல்பாடுகள், எனக்கும் மூளை நரம்பு மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றி சொன்னேன். மொத்தமாக என்னை 'வயிறு’ என்கிற ஒரு வார்த்தையில் சொன்னாலும் பிற உறுப்புகளின் உறுதுணையோடுதான் என் செயல்பாடுகள் செவ்வனே நடக்கின்றன. குறிப்பாக, என் இயக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றும் மூன்று உறுப்புகளைப் பற்றிச் சொன்னால்தான் நான் நன்றிக்குரிய பிறப்பாக இருப்பேன். அந்த மூன்று உறுப்புகள் எவை தெரியுமா? கல்லீரல், கணையம், மண்ணீரல்.

முதலில் என் உற்ற நண்பனான கல்லீரலைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு நிமிடம்கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்யும் அசாத்திய உறுப்பு இது. வருண பகவானின் கோபத்தால் கோகுலத்தின் ஆயர்கள் கஷ்டப்பட்டபோது, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்து, மழையில் இருந்து அவர்களைக் காப்பாற்றியதுபோல, வயிறாகிய எனக்குச் சிக்கல் வருகிறபோது எல்லாம் கோவர்த்தனக் குடையாகக் கல்லீரல்தான் கடமையாற்றுகிறது. தனி ஓர் உறுப்பாக இருந்துகொண்டு உடலின் பல உறுப்புகளைப் பாதுகாக்கும் பணியை கல்லீரல் செவ்வனே செய்கிறது. வயிறாகிய என் பகுதியின் மேற்புறத்தில் விலா எலும்புக்கூட்டுக்குள் நுரையீரல், உதரவிதானத்துக்கு அடியில் கல்லீரல் அமைந்து இருக்கிறது. இதன் பாதி அளவு மேலே உயர்ந்தும் மார்பு எலும்புக்கூட்டுக்கு உள்ளேயுமாக இருப்பதனால் இந்த உறுப்பு அதிகமாக வெளியே தெரிவது இல்லை. கல்லீரலின் பணியைப் பற்றிக் கச்சிதமாகச் சொல்வதானால், இது உடலுக்குள்ளேயே இருக்கும் ஒரு தொழிற்சாலை. 1.5 கிலோ எடைகொண்ட கல்லீரல் மனிதனின் உடலுக்குள் 500-க்கும் மேற்பட்ட ரசாயன இயக்கங்களைச் செய்கிறது. இரும்பு, செம்பு, மெக்னீஷியம், ஜிங்க், கோபால்ட் என எண்ணற்ற உலோகங்கள் இந்த உறுப்புக்குள் இருக்கின்றன. உலகத்தின் எத்தனையோ தலைசிறந்த நிபுணர்கள் இப்படி ஓர் உறுப்பை செயற்கையாக உருவாக்க நினைத்துத் தோற்றுப்போனார்கள். இதயம் துடித்து இயங்கவும் ரத்தக் குழாய்களின் பராமரிப்புக்கும் உண்ணும் உணவு செரிப்பதற்கும் மூளையின் முனைப்புக்கும் தசைகளின் வளம் மற்றும் வலிமைக்கும்... இன்னும் எக்கச்சக்கமான உடல் இயக்க வேலைகளுக்கும் கல்லீரல்தான் ஆதார சக்தி!

நீங்கள் சாப்பிடும் உணவைச் செரித்து அதில் உள்ள சக்தியை இரைப்பை பிரித்து எடுக்கிறது அல்லவா... இந்த சக்தி ரத்தக் குழாய் மூலமாக முதலில் கல்லீரலுக்குத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. கல்லீரல்தான் இந்த சக்தியை உடலில் இருக்கும் செல்களுக்கு ஏற்ற அளவில் மேலும் உடைத்து ரசாயன மாற்றம் நிகழ்த்தி ரத்தம் மூலமாக அனுப்பிவைக்கிறது. கல்லீரலில் உள்ள கூப்பர் செல்கள் ரத்த ஓட்டம் வழியாக உள் நுழைந்த நுண்கிருமிகளை விழுங்கி அழித்துவிடுகின்றன. ஆபத்து மிகுந்த தொற்றுகளிடம் இருந்து உடலைக் காக்க கல்லீரல் செய்யும் ரத்த வெள்ளை அணுக்களின் வேலைக்கு நிகரான பணி இது! கிட்டத்தட்ட உடலின் காவல்காரனைப் போல் கல்லீரல் பணியாற்றுகிறது. நரம்புகள் வழியாக உள்ளே செல்லும் குளுக்கோஸ் உடல் இயக்கத்துக்கான முக்கியமான எரிபொருள் சக்தியாக விளங்குகிறது. இது உரிய அளவை மீறி அதிகமானால், உடனே அவற்றைத் தலையில் தட்டி கிளைகோஜன் என்ற பொருளாக மாற்றிச் சேமிப்புப் பொருளாகத் தன்னிடமே வைத்துக்கொள்கிறது கல்லீரல். இப்படி கிளைகோஜனாக மாற்றப்பட்ட குளுக்கோஸ் தேவை என உடல் கேட்டுக்கொண்டால், அதற்கு ஏற்றபடி மாற்றி உடனடியாக அனுப்பிவைக்கிறது கல்லீரல். இது மட்டும் அல்ல... கல்லீரலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜன் அளவு அதிகமானால் எஞ்சிடும் குளுக்கோஸை உடலில் பல பாகங்களில் கொழுப்பாக மாற்றிச் சேமிக்கவும் கல்லீரலே துணை செய்கிறது. இந்த ரசாயனத் தொழிற்சாலை ஒருவிதத்தில் நமக்கு ஒரு ஸ்டோர் ரூம் மாதிரி. உடலின் பல பாகங்களில் சேமித்துவைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பு உணவு உண்ணாத வேளையிலும்  நோய்வாய்ப்படும்போதும் உடலுக்குத் தேவையான சக்தியாக மாறி உதவுகிறது.

கல்லீரல் மட்டும் இந்தச் சேமிக்கும் பணியைச் செய்யாவிட்டால், அண்ணா ஹஜாரே இத்தனை தடவை உண்ணாவிரதம் உட்கார முடியாது.

- மெல்வேன் சொல்வேன்