Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

ன்றைய விஞ்ஞான யுகத்திலும் பூப்பெய்தல்பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் பலருக்கு உண்டு. ஒரு பெண் 11-ல் இருந்து 15 வயதுக்குள் பூப்பெய்தலாம். ஒரு பெண், குழந்தை பெறும் தகுதியை அடைவதன் முதல் புள்ளிதான் பூப்பெய்தல். அப்போது தொடங்கும் மாதவிடாயின் ஆரம்பம் ஏறக்குறைய அந்தப் பெண்ணின் 50 வயது வரை நீடிக்கும். இதை மாதவிடாய்ச் சுழற்சி என்பார்கள்.

 ஒரு பெண்ணின் 11-15 வயதில் தொடங்கும் இந்த மாதவிடாய், முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கிறது?

மூளையில் ஹைபோதாலமஸ் என்று ஒரு பகுதி உள்ளது. இது, தன் பக்கத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டிவிடும். அந்தத் தூண்டுதல் காரணமாக பிட்யூட்டரி சுரப்பி ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் (Follicle-stimulating hormone),  லூத்தின்ஜிங் (Luteinizing)ஆகிய இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது.  ஒரு பெண்ணின் பாலியல் வளர்ச்சியையும் ரீபுரொடக்டிவ் காலத்தையும் (Reproductive Period)கட்டுப்படுத்துவதும் நிர்வகிப்பதும் இந்த இரண்டு ஹார்மோன்கள்தான். அது மட்டும் அல்ல... இந்த இரண்டும் புரொஜெஸ்டீரோன், (Progesterone)ஆக்சிடோஸின் (Oxytocin)  ஹார்மோன்களுடன் சேர்ந்து, மாதவிடாய்ச் சுழற்சியினை மாதாமாதம் சரியாக வருவது மாதிரி ஒழுங்குபடுத்தும்.

குட் நைட்!

ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு  இரண்டு வாரங்களுக்கு முன்பு, லூத்தின்ஜிங் ஹார்மோனின் உந்துதலால், அந்தப் பெண்ணின் கருமுட்டைப் பையில் ஒரே ஒரு கருமுட்டை மட்டும் பக்குவம் அடைந்து இருக்கும். அதன் பின்னர் லூத்தின்ஜிங் உந்துதலால் கருமுட்டைப்பையில் இருந்து பக்குவம் அடைந்த அந்தக் கருமுட்டை வெளியில் வந்து, ஃபலோப்பியன் குழாய் வழியாக பயணிக்கும். அப்போது இரண்டு விஷயங்கள் நடைபெறலாம்.  

இந்தச் சமயத்தில் உடலுறவு நடைபெற்றால் அந்தக் கருமுட்டை ஆணுடைய உயிரணுவுடன் சேர்ந்து கருத்தரிக்கலாம் அல்லது கருத்தரிக்காமலே கருப்பைக்குள் வந்து சேரலாம். ஒருவேளை கருத்தரித்துவிட்டால், அந்தக் கருமுட்டை கருப்பையின் எண்டோமெட்ரியம் சுவரில் போய் ஒட்டிக்கொண்டுவிடும். அப்போது கருமுட்டைக்கு வேண்டிய சத்துணவைப் பெற எண்டோமெட்ரியம் பெரிதாகிக்கொண்டே போகும். இதன் காரணமாக சத்துணவும் ஆக்சிஜனும் கருமுட்டைக்குத் தாராளமாகக் கிடைக்கும். இது குழந்தைப் பிறப்பு வரைக்கும் நீடிக்கும்.

கருமுட்டையானது ஆணுடைய உயிரணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகவில்லை எனில், பெருத்த என்டோமெட்ரியமும் கருமுட்டையும் வெளியேற்றப்பட வேண்டிய பொருளாகிவிடும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டீரோன் ஹார்மோன்களின் அளவும் குறைந்துவிடும். இந்தச்  சமயத்தில் ஆக்சிடோஸின் ஹார்மோன் தூண்டல் பெற்று, அதிக அளவு சுரந்து கருப்பையை இறுக்கும். இதனால்தான் மாதவிடாய் சமயத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.  அப்போது பெரிதான என்டோமெட்ரியம் பிய்த்துக்கொண்டு அதன் துகள்களும் கருவாகாத முட்டையும் ரத்தத்துடன் சேர்ந்து வெளியேறும்.

பொதுவாக மாதவிலக்கு சுழற்சிக் காலத்தில் மூன்று முதல் ஆறு நாட்கள் வரை ரத்தப்போக்கு இருக்கலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பு மூட் ஸ்விங்ஸ் (Mood Swings) எனும் எரிச்சல் படர்ந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கும். அதாவது அந்தப் பெண்ணுக்கு எந்த உணர்வும் நிலையாக இருக்காது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள்தான் காரணம். இந்த நிலைக்கு ப்ரீமென்ச்சுரல் சின்ட்ரோம் (Premenstrual syndrome (PMS)  என்று பெயர். மாதவிடாய் வருவதற்கு முன்பு உள்ள இந்த மனநிலையானது மாதவிடாய் வந்ததும் பல பெண்களுக்கு இயல்பான நிலைக்கு வந்துவிடும். அப்படியும் குறையாமல் தீவிரமாக இருந்தால், இதற்கு அவசியம் சிகிச்சை தேவைப்படும்.

மாதவிடாய்ச் சுழற்சியின்போது, சில பெண்களுக்கு குறைவாக ரத்தப்போக்கு இருக்கலாம். சில பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம். சிலருக்கு அடிவயிறு வலி இருக்கும். பலருக்கு இல்லாமல் போகலாம். மாதவிடாய்ச் சுழற்சியானது 28 நாட்களுக்கு ஒரு முறை வர வேண்டும். இதில், இரண்டு நாட்கள் கூடவோ குறையவோ செய்யலாம். உலகில் எட்டு சதவிகிதப் பெண்களுக்குத்தான் மிகச் சரியாக 28 நாட்களுக்கு  ஒரு தடவை மாதவிடாய்ச் சுழற்சி வரும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எனவே, எத்தனை நாட்களுக்கு வருகிறது என்பதுபற்றி கவலைப்படாமல், மாதந்தோறும் சரியாக வருகிறதா என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். மன அழுத்தம், வேலைப் பளு, உணவின் நிலைமை, மனக்கவலை... இவை எல்லாம் மாதவிடாய்ச் சுழற்சியை சீர்குலைக்கலாம். பூப்பெய்தலின் ஆரம்பத்தில் சில பெண்களுக்கு முதல் ஓரிரு வருடங்கள் மாதவிடாய்ச் சுழற்சியானது ஒழுங்கற்று இருக்கலாம். ரத்தப்போக்கிலும் பெரிய மாறுதல்கள் இருக்கலாம். ஆனால், 16 - 18 வயதில் இதில் நிலைத்த தன்மை ஏற்பட்டுவிடும். 45 வயதில் மீண்டும் ஒழுங்கற்ற நிலைமை ஏற்பட்டு, கடைசியில் ஓரிரு வருடங்கள் கழித்து மாதவிடாய்ச் சுழற்சியானது ஒட்டுமொத்தமாக நின்றே போய்விடும். இதனை மெனோபாஸ் என்போம்.

* மாதவிடாய் என்பது சாபமா?

* மாதவிடாய் வந்த பெண்ணை தீண்டலாகாதா?

- மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.

- இடைவேளை