மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 8

இப்படிக்கு வயிறு! - 8

இப்படிக்கு வயிறு! - 8
##~##

சாப்பிடாவிட்டாலும் நம்மைக் காக்க கல்லீரல் போராடும் எனக் கடந்த இதழில் சொல்லி இருந்தேன் அல்லவா... அதற்காகக் கல்லீரல் இருக்கும் தைரியத்தில் பல நாட்கள் சாப்பிடாமல் இருப்பது தவறு. உடலின் பல பாகங்களிலும் சேமித்துவைக்கப்படும் சக்தி தீரும் வரைதான் கல்லீரலால் நம்மைக் காப்பாற்ற முடியும். அதற்கு மேலும் பட்டினியைத் தொடர்ந்தால், கவலைக்கிடம்தான்.

 வீம்புக்குச் சாப்பிடாமல் இருப்பது தனி. சிலரோ, ''எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிடவே முடியவில்லை'' எனப் புலம்பியபடி இருப்பார்கள். எனக்குத் தேவையான உணவை நீங்கள் அளிக்காவிட்டால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமுமே பாதிக்கப்படும் என்பதை மனதில்கொள்ளுங்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு மிக முக்கியக் காரணம் சரியான செரிமானம் இல்லாமைதான். உடலில், உணவுச் சத்துக்கள் குறைந்துவருகின்றன என்பதை உணர்த்த செரிமான மண்டலம் காட்டும் அறிகுறியே... பசி.

இப்படிக்கு வயிறு! - 8

உணவுச் சத்துக் குறையும்போது மட்டும் அல்லாது, உணவின் வாசனையை நுகரும்போதோ, உணவுகளை வகைவகையாகப் பார்க்கும்போதோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதோ பசி ஏற்படும். மூளையில் ஹைபோதலாமஸ் (Hypothalamus)என்னும் மையத்தில் பசியைத் தூண்டும் விசைகள் இருக்கின்றன. உணவு சாப்பிட்டு முடித்ததும், போதும் என்கிற திருப்தியை உண்டாக்கும் மையம் (Satiety Centre) இதன் அருகேதான் உள்ளது. 'நல்ல சாப்பாடு... நிறைவாக இருந்தது’ என உங்களைச் சொல்லவைப்பதுவும் இந்த மையம்தான். பசியை ஏற்படுத்தவும் அடக்கவும் இந்த இரு மையங்கள்தான் உதவுகின்றன.

பசி குறைந்தாலோ... இல்லை கடுமையாகப் பசி எடுத்தாலோ, அது நோயின் அறிகுறி என்பதை உணருங்கள். சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பது இவற்றின் காரணமாக அதிகமானப் பசி இருக்கும். இந்தப் பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும், உடல் பருமன் அதிகரிக்காது. இன்னும் சொல்லப்போனால், பலருக்கு உடல் எடை குறையவும் செய்யும்.

காய்ச்சல், புற்றுநோய், குடல் புழுக்கள், புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பசி உணர்வு குறையும். பசியின்மை ஏற்பட செரிமான மண்டலம் மட்டுமே காரணம் இல்லை. மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களாலும் பசியின்மை ஏற்படலாம். அதனால், பசியின்மை ஏற்பட்டால் அது செரிமானப் பிரச்னையாலா அல்லது மனரீதியான பிரச்னையாலா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறிந்துகொள்வது நல்லது. மனதுக்குள் ஆயிரமாயிரம் போராட்டங்களையும் குழப்பங்களையும் வைத்துக்கொண்டு நீங்கள் ஜீரணத்துக்காக சிகிச்சை எடுத்தால், அதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது.

பசி சம்பந்தப்பட்ட பிரச்னையை சிலர் வேறு விதமாகச் சொல்வார்கள். புளிப்பு, புளி ஏப்பம் (Acid eructation),ஏப்பம் (Belching), திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுரத்தல், பித்த மயக்கம், குமட்டல், வாந்தி எடுத்தல், குடலில் அதிக அளவில் இரைச்சல் கேட்பது (Excessive borborygmus), விட்டுவிட்டுப் பேதியாவது, மலச் சிக்கல்... இப்படிப் பலவிதமான குறைபாடுகளையும் சொல்வார்கள். இன்னும் சிலரோ, வாயுத் தொந்தரவு என்பார்கள்; உப்புசம் (Flatulence)  என்பார்கள். உப்புசம் ஏற்படும்போது வயிறு உப்பி இருப்பதை நம்மால் அறிய முடியும். ஆனால், அதற்கு என்ன காரணம் என்பதை நாம் அறிவது இல்லை.

முதல் நாள் இரவு கரைத்துவைத்த இட்லி மாவு புளித்து, அதில் காற்று உண்டாகி, முதலில் பாத்திரத்தில் முக்கால் அளவு இருந்தது மறுநாள் காலை பாத்திரம் முழுக்க நிரம்பி, குப்பென்று உப்பி இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். அந்த மாறுதலுக்கு ஃபெர்மென்டேஷன்  (Fermentation) அல்லது புளித்தல் என்று பெயர். இதற்கு, புளிப்பேற்றுதல், புளிப்பு ஊக்கம், நொதிப்பித்தல் எனப் பல பெயர்கள் இருந்தாலும், புளித்துப் பொங்கும்படி செய்தல் என்பதுதான் இந்த நிகழ்வுக்கான அர்த்தம்.

இப்படிச் சரிவர செரிமானமாகாமல் ரத்தத்தில் கலக்காத மாவுப் பொருட்கள் சிறுகுடலின் கிருமிகளால் (பாக்டீரியாக்களால்) புளிக்கச் செய்யப்படும் நிலையில், நிறையக் காற்று உண்டாகி, வயிற்றுப் பகுதியில் உப்புசம் ஏற்படச் செய்கிறது. உணவை விழுங்கும்போது நாம் சிறிதளவு காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். குறிப்பாக குழந்தைகள் பால் குடிக்கும்போது காற்று அதிகமாக வயிற்றுக்குள் போகிறது. அதுவும் உப்புசத்தை உண்டாக்குகிறது.

கரியமில வாயு கலந்த பானங்கள், பேதி உப்பு எனச் சொல்லப்படும் சில உப்புகள் (Seidlitz Powder) ஆகியவை வயிற்றுப் புளிப்போடு கலந்து அதிக அளவு கரியமில வாயுவை வெளிப்படுத்தும். இதனால், அடிக்கடி ஏப்பம் வரும். இதனாலும் உப்புசம் ஏற்படும்.

ஏப்பம் தொடங்கி உப்புசம் சம்பந்தமான அத்தனைப் பிரச்னைகளும் பசியின்மையை ஏற்படுத்தி, வயிறாகிய என்னைப் பாதிக்க வைக்கின்றன. 'பசிக்காவிட்டால் சாப்பிடும் வேலை மிச்சம்தானே...’ என நீங்கள் நினைக்கலாம். 'பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்பார்கள். ஆனால், பசியின்மை வந்தால், நம் உடலே பறந்துவிடும்!

- மெல்வேன்... சொல்வேன்...