மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 9

இப்படிக்கு வயிறு! - 9

இப்படிக்கு வயிறு! - 9
##~##

கெவின் கார்டரின் உலகப் புகழ் பெற்ற 'குழந்தையும் பிணந்தின்னிக் கழுகும்’ புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பஞ்சமும் வறுமையும் சூழ வயிறு ஒட்டிக்கிடக்கும் மனிதர்கள் ஆப்பிரிக்க நாடுகளில் சகஜம். இந்தியாவுக்கும் பஞ்ச வரலாறு உண்டு. தண்ணீரே அரிதான உணவாகக் கிடைக்கும் அதுபோன்ற சூழல்களில் எல்லாம் உடல் என்ன நிலைக்கு ஆளாகும்? அப்படிப்பட்ட சூழலை எல்லாம் உடல் எப்படிச் சமாளிக்கிறது? 

இதுபோன்ற நேரங்களில் கல்லீரல்தான் கடைசிப் போராளியாக இருந்து உயிரைக் காக்கப் போராடுகிறது. தான் சேமித்துவைத்த புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் கடைசித் துளி வரை செலவிட்டு உடலைக் காக்க முயற்சிக்கும்.  

கல்லீரலின் செல்கள் லட்சக் கணக்கில் கயிறுபோல் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு அமைந்திருக்கின்றன. குடலில் உள்ள நிணநீர்க் குழாய்கள் வழியாக வரும் உணவுச்சத்துப் பொருட்களையும் இதயத்தில் இருந்து மகா தமனியின் (Artery) வழியே வந்து ரத்தக் குழாய் வழியே பெற்றுக்கொள்ளும் ஆக்சிஜனையும் வைத்து பல ரசாயன மாற்றங்களை இந்தக் கல்லீரல் செல்கள் நடத்தி முடிக்கின்றன. உடலுக்கு இன்றியமையாத புரதம் பயன்படுத்தப்படும்போது அம்மோனியாவை உண்டாக்குவது கல்லீரலின் பணியே. அம்மோனியா என்ற நஞ்சை யூரியாவாக மாற்றி சிறுநீராக வெளியேற்றுவதும்  கல்லீரலின் பணியே.

இப்படிக்கு வயிறு! - 9

இந்த மாதிரி நடைமுறைச் சுழற்சியில் சிக்கல் எழுந்தால், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாகும். அதனால், சிறுநீரகம் பாதிக்கப்படும். யூரியாவின் அளவைக் கட்டுப்படுத்துவது கல்லீரல்தான். தைராய்டு, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள் சுரப்பதை உடனுக்குடன் தேவையான அளவு மட்டும் ஏற்றுக்கொண்டு மீதியை அழித்துவிடுவதும் கல்லீரலின் பணிதான். இதேபோல் பாலின உணர்வு சுரப்பிகளையும் கல்லீரல்தான் கன்ட்ரோல் செய்கிறது. இதில் சிக்கல் என்றால், உடலுறவில் ஆர்வமின்மையோ அல்லது வெறியோ ஏற்படத் தோன்றும். விஷம் முறிக்கும் வைத்தியரின் வேலையையும் கல்லீரல்தான் செய்கிறது. மது, போதை தரக் கூடிய இதர பானங்கள், தவறுதலாக நாம் குடிக்கும் விஷத்தன்மை கொண்ட பொருட்கள் என எதுவானாலும், அவற்றில் உள்ள விஷத்தன்மையை நீக்குவது கல்லீரல்தான்.

சென்னை மாதிரியான நெரிசலான நகரங்களில் பயணிக்கும்போது சாலைகளில் கிளம்பும் தூசியையும் புகையையும் நாம் சுவாசிக்கிறோம். அவற்றைச் செயல் இழக்கச் செய்வது யார் என நினைக்கிறீர்கள். சாட்சாத் கல்லீரலேதான்! பெருநகரங்களில் வாழ்க்கை நடத்துபவர்கள் ஒவ்வொரு நாளும் சுவாசிக்கும்

இப்படிக்கு வயிறு! - 9

மாசுக்களைக் கணக்கிட்டால், ஒரு வார காலம்கூட உயிர் தாங்க மாட்டார்கள். அந்த மாசுக்களைச் செயல் இழக்கச் செய்வதும், அதற்கு மாற்றாகச் சில பொருட்களைச் செயல்பட வைப்பதும் கல்லீரலே.

வயிறாகிய எனக்குள் வந்துவிழுபவை உணவுப் பொருட்கள் மட்டும் அல்ல. மது, விஷம் உள்ளிட்டவை எனக்குள் விழும்போது அவற்றின் நஞ்சை நீக்க கல்லீரல் எப்படிப் போராடுகிறதோ... அதேபோல்தான் எனக்குள் வந்துவிழும் மருந்து, மாத்திரைகளும் கல்லீரலுக்கு கடுமையாக வேலை வைக்கின்றன. மருத்துவரின் சிபாரிசு இல்லாமல் தாங்களே மருத்துவர்களாக மாறி தலைவலி, காய்ச்சல் என எது வந்தாலும் சுயமாக மாத்திரை, மருந்துகளை பலரும் விழுங்குகிறார்கள். ஆனால், அவற்றைச் செயல்பட வைக்க கல்லீரல் படும் சிரமம் சாதாரணமானது அல்ல.

உடலில் எங்கேயாவது வெட்டுக் காயம் ஏற்பட்டால், ஒன்றிரண்டு நிமிடங்களில் ரத்தம் வருவது தானாகவே நின்றுவிடுகிறது. இந்த உறைதலை ஏற்படுத்துவது கல்லீரலால் தயாரிக்கப்படும் 'புரோத்ராம்பின்’ (Prothrombin)  என்கிற ரசாயனம்தான். 'புரோத்ராம்பினை உற்பத்தி செய்ய மாட்டேன்’ எனக் கல்லீரல் அடம்பிடித்தால், முகத்தை ஷேவ் செய்யும்போது ஏற்படும் சிறு வெட்டுக்காயமே நம் உயிரைப் பறித்துவிடும். இதற்கு நேர்மாறாக ரத்தத்தில் அடர்த்தி அதிகமாகி மூளை, இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகும்போது, ஹெப்பரிரன் என்கிற ரசாயனத்தை உருவாக்கி அதனைத் தடுக்கும் பணியையும் கல்லீரலே செய்கிறது.

நான் செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகளை - நான் சுமக்க வேண்டிய எத்தனையோ சிரமங்களைக் கல்லீரலே வலியவந்து ஏற்றுக்கொள்கிறது.

கசப்பு மிக்க பித்த நீரைக் கல்லீரல் சுரக்கிறது. இந்த நீர் பித்த நீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும்போது சிறுகுடலில் கொழுப்பு செரிமானம் ஆக இறக்குமதியாகி, உயிர்ச்சத்துக்களை குடல் உறிந்துகொள்ள உதவுகிறது. உணவுப் பொருட்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறும்போது தடுக்கும் வேலையைச் செய்வதும் இதுவே!

மொத்தத்தில், கல்லீரல் என்கிற காவல்காரன் உடலைக் காக்கும் அத்தனைவிதமான பணிகளையும் செய்தாலும், தனக்கு பாதிப்பு வரும்போது அதுகுறித்த அறிகுறிகளைக் காட்டவே மாட்டான். தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு வளரும் அசாத்திய சக்தி கல்லீரலுக்கு உண்டு. ஆனால், மது உள்ளிட்ட பழக்கங்களால் 75 சதவிகித அளவுக்கு கல்லீரல் அழிவை நெருங்கும்போது அதனைக் காப்பாற்றுவது கடினம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிற நிலைக்கு ஆளாகிவிடாமல், கல்லீரல் விஷயத்தில் எப்போதுமே கவனமாக இருப்பதுதான் நல்லது!

- மெல்வேன்... சொல்வேன்...