Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

பெண்களுக்கு வரும் மாதவிடாயை ஆதி காலத்தில் அறியாமையின் காரணமாக, சாபமாகக் கருதினார்கள். இன்றைக்கும்கூட பல பெண்கள் அதை ஒரு பெரும் சங்கடமாகக் கருதுவது உண்டு. ஆனால், மாதவிலக்குதான் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்துக்கான குறியீடு! 

கிராமப்புறங்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்களை வீட்டில் இருந்து ஒதுக்கிவைப்பதைப் பார்க்கலாம். இது ஏன்? சுத்தம்தான் காரணமா? இல்லை. மாதவிடாய் வந்த பெண் இயல்பாக எல்லா வேலைகளையும் செய்யலாம். ஆனால், அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு காரணமாக பெண்கள் சோர்வாக இருப்பார்கள். அவர்களுக்கு  ஓய்வு கொடுக்கும் விதமாகவே தனியாக இருக்கவைத்தார்கள்.

மாதவிடாய் சமயங்களில், பெண்கள் நல்ல ஊட்டச் சத்து மிக்க சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. ஆட்டு ஈரல், முட்டை, கீரைகள், கேழ்வரகு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம். இப்படிச் சத்தான உணவுகளைக் கொடுப்பதன் மூலம், ரத்தப்போக்கு சமயத்தில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

குட் நைட்!

சரி, மாதவிடாய் சமயங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

கண்டிப்பாகச் செய்யலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாதவிடாய் சமயத்தில் உடை விஷயத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம். சானிடரி நாப்கின், டாம்பூன் (Tampon) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். டாம்பூன் என்பது ரத்தத்தை முழுமையாக உறிஞ்சக்கூடிய தன்மை உடையது. சானிடரி நாப்கின் - மென்மையாக ஈரத்தையும் ரத்தத்தையும் உறிஞ்சும் தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். நடக்கும்போது உரசக் கூடாது. சானிடரி நாப்கினோ, டாம்பூனோ அது மிக மிகச் சுத்தமானதாக (Sterile) இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். டாம்பூனைக் காட்டிலும் நாப்கின்தான் சிறந்தது.

மாதவிடாய் சமயத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? இது பலரும் கேட்கத் தயங்கும் - ஆனால் - கேட்க விரும்பும் கேள்வி. இதற்குப் பதில்... தாராளமாக வைத்துக்கொள்ளலாம் என்பதே. ஒரே நிபந்தனை, சம்பந்தப்பட்ட பெண் விரும்பினால்!

ஆமாம், பெண்ணின் விருப்பம்தான் இதில் முக்கியமானது. பெண் விருப்பப்பட்டால் வைத்துக்கொள்ளலாம்.

அதே சமயம் இரு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று... அந்தச் சமயத்தில் பெண்கள் மிகுந்த அசதியோடும், சங்கடத்தோடும் இருப்பார்கள்; இரண்டு... அந்தச் சமயத்தில் கிருமிகள் மிக எளிதில் பெண் உறுப்பில் தொற்றிக்கொண்டுவிடும். எனவே, கணவனுக்கு ஜனன உறுப்பிலோ, சிறுநீர்ப் பாதையிலோ ஏதேனும் நோய்களோ, கிருமித் தொற்றோ இருந்தால், அது பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடும். மற்றபடி,

மாதவிடாய் சமயத்தில் பெண்ணோடு உறவு வைத்துக்கொண்டால் ஆணுக்கு ஜன்னி கண்டுவிடும் என்ற நம்பிக்கை முன்பு இருந்தது. இது உண்மை இல்லை. ஜன்னி என்கிற நோய்க்கு ஆங்கிலத்தில் டெட்டனஸ் (Tetanus) என்று பெயர். க்ளோஸ்ட்ரிடியம் டெட்டனி (Clostridium tetani) என்கிற கிருமியால் ஏற்படுவதே டெட்டனஸ். மாதவிடாயினால் வருவது அல்ல. மாதவிடாய் வந்த பெண்ணுக்குப் பால்வினை நோயோ, பூஞ்சைத் தொற்றோ இருந்து,  அந்தச் சமயத்தில் உடல் உறவு கொண்டால், அது ஆணுக்குத் தொற்றும் வாய்ப்பு இருக்கிறது.

இன்று பல பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட சில மாத்திரைகளை விழுங்குகிறார்கள். அடிக்கடி இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது தவறு. இயல்பாக வருகிற மாதவிடாயை இவை பாதிக்கும்.

தங்களின் சில உடல் நலக் குறைபாட்டுக்காக மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்கள், அந்த மருந்துகளை மாதவிடாய் நாட்களில் தவிர்க்கத் தேவை இல்லை. கைக் குழந்தை உள்ள பெண்கள் தாராளமாகக் குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் வராது.

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மாதவிடாய் இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒரு சம்பவம். அந்தச் சமயத்தில் சோர்வு, அசதி போன்றவை சிலருக்கு இருக்கலாம். இதனைப் புரிந்துகொண்டு வீட்டில் உள்ள கணவனும் மற்ற பெரியவர்களும் உதவியாக இருந்தால், அந்தப் பெண்ணின் உடல்நிலைக்கும் நல்லது; மனநிலைக்கும் நல்லது!

- இடைவேளை