இப்படிக்கு வயிறு! - 10

##~## |
மூச்சு முட்ட பிரியாணி சாப்பிட்டுவிட்டு, 'வயிறு மதமதப்பா இருக்கே?’ என எப்போதாவது ஃபீல் பண்ணி இருக்கிறீர்களா? கொழுப்பு அதிகமான சாப்பாட்டைச் சாப்பிடும்போது, நான் சற்று மதமதப்பாகத்தான் இருப்பேன். ஆனால், அதுவே அடிக்கடி இப்படி மதமதப்பாக இருந்தால், பித்தப் பையில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம்.
உடல் என்கிற வீட்டின் வாட்டர் டேங்க், பித்தப் பை. பித்தப் பையில் இருந்து வலது மற்றும் இடது புறத்தில் இரு சிறிய பித்த நீர்க் குழாய்கள் மூலமாக பித்த நீர் செல்கிறது. அந்த இரண்டு குழாய்களும் ஓர் இடத்தில் இணைகின்றன. இதற்குப் பொதுப் பித்த நீர்க் குழாய் என்று பெயர். பித்த நீர் என்பது ஒரு திரவக் கலவை மாதிரியானது. பித்த உப்பு, கொழுப்புத் தன்மை வாய்ந்த ஒரு படிகம் போன்ற பொருள் மற்றும் சில வேதியியல் பொருளின் பண்பு மாறுபடாத மிகச் சிறிய நுண்கூறுகள் (Phospholipids and lecithin)ஆகியவை கலந்த திரவக் கலவை (Liquid Mixture). சரி, இந்தப் பித்த நீர் எங்கே, எப்படி உருவாகிறது?

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் தொடர்ந்து அழிந்து, அந்த இடத்தில் புதிது புதிதாக வேறு செல்கள் உருவாவது வழக்கம். நமது சிறு குடலில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி, 36 மணி நேரத்துக்கு ஒரு முறை அழிந்து, அதே வேகத்தில் புத்தம் புது செல்களால் புதுப் பிறவி எடுக்கிறது. இதேபோல், நமது சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் செல்களும் தொடர்ச்சியாக அழிந்து, அந்த இடத்தில் புதிய புதிய செல்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இப்படி, அழிந்து காலாவதியாகிவிட்ட ஹீமோகுளோபின் செல்களை கல்லீரல், ஹீம் (Haem),க்ளோபின் (Globin) என இரண்டாக உடைக்கிறது. இந்த ஹீம்தான் பித்த நீருக்கு மஞ்சள் நிறத்தைக்

கொடுக்கிறது. இதற்கு பித்த நிறமி என்று பெயர். இப்படி, கல்லீரலில் உற்பத்தியாகி கல்லீரலின் வலது மற்றும் இடது கல்லீரல் பித்த நாளங்களில் சென்றடைந்து, அங்கே இருந்து குடலுக்குச் செல்லும்போது பித்த நாளத்தை அடைகிறது பித்த நீர். இந்தப் பித்த நாளம் 'டியோடினம்’ என்ற முன் சிறு குடல் பகுதியில் போய்ச் சேருகிறது. இங்குதான் இரைப்பையில் இருந்து தள்ளப்பட்ட உணவுக் கூழ் முதலில் தலைகாட்டுகிறது. செரிமானமும் செரிக்கப்பட்ட உணவில் இருந்து சத்துப் பொருட்கள் உறியப்படும் நிகழ்வும் இங்கு நடக்கிறது. முன் சிறு குடலுக்கு வந்து சேரும் உணவைச் செரிக்கவைக்க, குடலுக்குள் சில வகையான செரிமான நீர் சுரக்கும். ஆனாலும், இந்த நீரால் நீங்கள் உண்ணும் உணவை முழுவதுமாகச் செரிக்கவைக்க முடிவது இல்லை. சாப்பிடும் உணவில் கொழுப்பு மிகுதியாக இருந்தால், சொல்லவே வேண்டியது இல்லை. அதைச் செரிக்கவைக்க முடியாமல், செரிமான நீர் போராடும். கொழுப்பைச் செரிக்கவைக்க பித்த நீர் தேவைப்படும். 'பித்த நீர் தேவை’ எனச் சிறு குடல் நரம்புகளின் வழியாக கல்லீரலுக்குத் தகவல் போனதும், ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடனே குடலுக்குக் கல்லீரல் பித்த நீரை அனுப்பிவைக்கும். கொழுப்பைச் செரிக்கவைக்கும் வேலையை பித்த நீர் செவ்வனே செய்யும்.
ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் பித்த நீர் நம் உடலில் சுரக்கும். பித்த நீர் நாளங்கள் வழியாக வரும்போது, இடையில் இந்தப் பித்தப் பையிலும் கொஞ்சம் நீரைச் சேமித்துவைத்துவிட்டு குடலுக்கு ஓடும். சிறு குடலுக்குப் போய் அங்கே கொழுப்பை ஜீரணம் செய்கிற வேலையைச் செய்து முடித்தவுடன், ரத்தக் குழாய் வழியாக கல்லீரலுக்கு ரிட்டர்ன் ஆகிவிடும். கல்லீரலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், ரத்தத்தில் பித்த நிறமியின் அளவு அதிகமாகிவிடும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண், முகம், உள்ளங்கை எல்லாம் மஞ்சள் நிறத்தில் தெரிவது இதனால்தான்.
பித்தப் பையில் சேமித்து வைக்கப்படும் பித்த நீர் அப்படியே இருக்குமா என நீங்கள் கேட்கலாம். அதனால்தான் ஆரம்பத்திலேயே அதனை வாட்டர் டேங்க் எனச் சொன்னேன். நீரைப் பத்திரப்படுத்தி தேக்கிவைத்து, தேவைக்குத் தக்கபடி வழங்குவதுதானே வாட்டர் டேங்க் வேலை. அதையேதான் பித்தப் பையும் செய்கிறது. பித்தப் பையில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீர் அங்கேயே தங்குமா இல்லை செலவிடப்படுமா என்பதை நீங்கள் சாப்பிடும் உணவுதான் தீர்மானிக்கும். நீங்கள் தயிர் சாதம் சாப்பிட்டால், சுலபத்தில் செரிமானமாகி, பித்தப் பை நீர் அப்படியே இருக்கும். நீங்கள் மட்டன், சிக்கன் என செம கட்டுக் கட்டினால், செரிமானம் சிக்கலாகி பித்தப் பை நீர் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
நீங்கள் என்ன சாப்பிடப்போகிறீர்கள்... தயிர் சாதமா? மட்டன், சிக்கனா?
- மெல்வேன்... சொல்வேன்...