குட் நைட்!

##~## |
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆன ஓர் இளம் ஜோடி என்னைப் பார்க்க வந்தது. 'கூடலில் துளியும் விருப்பம் இல்லாதவராக கணவர் இருக்கிறார்’ என்பதுதான் பிரச்னை. கணவரைத் தனியாக அழைத்து விசாரித்ததில், 'எனக்கு மனைவியுடன் சேர்ந்திருப்பதைவிட சுய இன்பத்தில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது’ என்றார்.
'சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண்ணைச் சுற்றிக் கருவளையம் வரும்; கண்கள் குழி விழுந்துவிடும்; தாடை உள்ளடங்கிவிடும்; உடல் இளைக்கும்; நினைவாற்றல் மங்கும்; முடி கொட்டிவிடும்; ஆண்மைக் குறைவு ஏற்படும்; குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடும்; படிப்பில் கவனம் செலுத்த முடியாது; கை, கால்கள் நடுங்கும்; நரம்புத் தளர்ச்சி ஏற்படும்; ஆயுள் குறையும்... இப்படி எவ்வளவோ தவறான கற்பிதங்கள், மூட நம்பிக்கைகள் உண்டு. போலி டாக்டர்களின் கைங்கர்யமும் இவற்றை எல்லாம் ஊக்குவிக்கின்றன!

சில தலைமுறைகளுக்கு முன்பெல்லாம் பருவ வயதில் திருமணம் என்பது இருபாலருக்குமே பொதுவானதாக இருந்தது. உடல் சார்ந்த தேவைகளையும் காம இச்சைகளையும் தன்னுடைய துணையுடன் சேர்ந்து பூர்த்திசெய்துகொள்ள அப்போது எல்லோராலும் எளிதில் முடிந்தது. ஆனால், இன்றைய சமூகச் சூழலில் படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட வைத்து இருக்கின்றன. திருமணம் நடக்கும் வரையில் உடம்பின் தேவை, ஹார்மோன்களின் கலாட்டா, பருவ வயதின் விளைவுகள் போன்றவற்றை அடக்கி ஆள்வது ஒரு வழி. ஹார்மோன்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளுவது இரண்டாவது வழி. முதல் வழி எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாதது. அடுத்த வழியோ, நிச்சயம் தவறானது. இந்த நிலையில்தான் மாற்றாக மூன்றாவது வழியாகத் தேர்வுசெய்யப்படுகிறது சுய இன்பம்.
ஒரு மனிதன் சுய இன்பத்தில் ஈடுபடும்போது அடையும் இன்பத்தை ஒரு பெண்ணுடன் செக்ஸில் ஈடுபடும்போது பெறுகிற இன்பத்துக்கு இணையானதாகக் கருதினாலும்கூட எமோஷனல் ஃபீலிங்ஸ் (Emotional feelings), ஆழ்ந்த திருப்தி, உறவு (Relationship), அன்புப் பரிமாற்றம், ஆண்-பெண் புரிந்துணர்வு, குழந்தை உருவாக்கம் போன்றவை செக்ஸில் மட்டும்தான் கிடைக்கும். சுய இன்பத்தில் ஒருவரே இன்பத்தை நுகர்கிறார். ஆனால் மனைவியுடனான செக்ஸில் கணவன், மனைவி இருவராலும் ஒரே சமயத்தில் மகிழ்ச்சி அனுபவிக்கப்படுகிறது. வாத்ஸ்யாயனரின் 'காமசூத்ரா’, சரகர் எழுதிய 'சரக சம்ஹிதா’ போன்ற நூல்கள் எதிலுமே சுய இன்பம் தவறானது என்று விலக்கப்படவில்லை.
சமூகத்தில் பின்னாளில் பிற்போக்குச் சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்த பின்னர்தான், சுய இன்பம் என்பது தவறானது, பாவகரமான செயல், குற்றம் என்பன போன்ற கருத்துகள் பரவத் தொடங்கின. சில மருத்துவர்களும் தங்கள் ஆதாயத்துக்காகச் சுய இன்பத்தை 'நோய்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
சரி, அப்படி என்றால் சுய இன்பப் பழக்கத்தால் பிரச்னையே இல்லையா? அப்படி இல்லை. மனம் தொடர்பான சில பிரச்னைகள் சுய இன்பத்தோடு சேரும்போது சிக்கல்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக 'அப்செஸ்ஸிவ் கம்பல்சிவ் டிஸார்டர்’ (Obsessive Compulsive Disorder) என்ற மனப் பிரச்னையில் உள்ளவர்கள், மனதில் ஆசை மற்றும் உடல் தேவை எதுவும் இன்றித் தொடர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்குத்தான் இது ஆபத்தாக முடியும். 'பெர்சனாலிட்டி டிஸார்டர்’ (Obsessive Compulsive Disorder)என்கிற மனநோய் உள்ளவர்களுக்கு, தேவதைபோல் மனைவி இருந்தாலும் சுய இன்பத்தில்தான் அதிக நாட்டம் இருக்கும்.
'பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவார்களா?’ இது பல ஆண்கள் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு விஷயம். சுய இன்பத்தைப் பற்றி மேலே விவரித்தது எல்லாமே ஆணுக்கு மட்டும் அல்ல; பெண்ணுக்கும்தான்!
முதல் பத்தியில் சொல்லப்பட்ட தம்பதியின் பிரச்னையில் - நல்லவேளையாக அந்த இளைஞருக்கு 'பெர்சனாலிட்டி டிஸார்டர்’ மனநோய் இல்லை. உடலுறவின் மேன்மையும் இனிமையும் புரிபடாததாலும் திருமணத்துக்கு முன்பு வரையில் மேற்கொண்ட பழக்கத்தின் தொடர்ச்சியாகவும்த£ன் சுய இன்பத்தை இனிமையானதாகக் கருதி இருக்கிறார். அவரிடம் கணவன் - மனைவி கூடலின் விஞ்ஞான விளைவுகளையும் உணர்வு ரீதியிலான விளைவுகளையும் எடுத்துச் சொன்னேன். கண்ணதாசன் பாடலைக் கொஞ்சம் மாற்றி 'மனைவியின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும்’ என்பதையும் புரியவைத்து அனுப்பினேன்.
சரியாக ஓர் ஆண்டு கழித்து அதே இளைஞர் மறுபடியும் என்னைப் பார்க்க வந்திருந்தார். முகம் நிறைய மலர்ச்சியோடு அந்த இளைஞருக்குப் பின்னிருந்து எட்டிப்பார்த்தார் அவருடைய மனைவி. அவருடைய கையில் தவழ்ந்தது அழகான குழந்தை!
- இடைவேளை