மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 11

இப்படிக்கு வயிறு! - 11

இப்படிக்கு வயிறு! - 11
##~##

நீங்கள் உண்ணும் உணவு முழுவதுமாக ஜீரணிக்கப்பட, பித்த நீர்தான் உதவுகிறது. கல்லீரலில் இருந்து வெளிப்படும் பித்த நீரில் 97 சதவிகிதம் நீர், 2 சதவிகிதம் வரை பித்த உப்பு,  1 சதவிகிதம் பித்த நிறமிகள் மற்றும் கொழுப்பு அமிலம் உள்ளது. 

பொதுவாக, பித்த நீரில் கொழுப்பு அமிலம் எளிதில் கரையாது. ஆனாலும் எல்லோரது பித்தப் பையிலும் கற்கள் உண்டாவது இல்லை. காரணம், பித்த நீரில் உள்ள பித்த அமிலம் கொழுப்பு அமிலத்தைத் தூய்மையாக்கி அது திரவ நிலையிலேயே இருக்க உதவுகிறது. இந்த ரசாயனச் செயல் சிறுகுடலின் செரிமான வேலைகளைத் துரிதமாக்குகிறது. அப்படி இருந்தும் பித்தப் பையில் எப்படிக் கற்கள் உருவாகின்றன?

பித்தப் பைக் கற்களில் பல வகைகள் இருக்கின்றன. பித்த நீரில் கொழுப்பு அமிலத்தின் அளவு மிகுந்து, பித்த அமிலங்களின் துணையோடு தோன்றும் பித்த உப்புக்களின் அளவு குறைந்துபோனால், அது கொழுப்புக் கற்களாக மாறுகிறது. பித்தக் கற்களில் இந்த கொழுப்புக் கற்களின் பாதிப்பு 8 முதல் 10 சதவிகிதம் வரை இருக்கும். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வட்டமாகவோ, நீள்வட்ட வடிவமாகவோ இருக்கும். இது 1.25 செ.மீ. அளவு வரை இருக்கும். கனம் குறைந்ததாக, வெண்மை கலந்த, மஞ்சள் நிறம்கொண்டதாக இருக்கும்.

இப்படிக்கு வயிறு! - 11

அடுத்து அழற்சியின் காரணமாக அதாவது தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்கம் காரணமாகவும் பித்தக் கற்கள் உருவாகும். ஸ்ட்ரெப்ட்டோகாக்கை என்ற பாக்டீரியா, டைஃபாயிட் காய்ச்சல் கிருமி போன்ற உடலுக்குக் கேடு உண்டாக்கும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, ரத்தத்தில் பெருகி, பித்த நீர்ப் பையை அடைந்து, பின் பித்த நீரின் வழியாக வெளிப்படலாம். அப்படி வெளிப்படுகிறபோது பித்த நீர்க் குழாய்களில், பித்தப் பையின் உட்பகுதியில் இருக்கின்ற செல்களையும் பாதிப்படையச் செய்துவிடும். இதன் காரணமாகவும் உட்பகுதி சொரசொரப்புத் தன்மையைப் பெற்றுப் பித்தக் கற்களை உண்டாக்கிவிடும். கற்கள் உண்டாக இன்னொரு காரணம், பித்த நீர்த் தேக்கம். பித்த நீர் முறையாக வெளியேற முடியாதபடி தடை ஏற்பட்டாலும், பித்தக் கற்கள் எளிதில் தோன்றிவிடும். அடுத்து நிறமிக் கற்கள்... இவை கறுத்த நிறம் உடைய கால்சியம் கார்பனேட்டினால் உருவானவை. இந்த வகைக் கற்கள் ஜப்பான், கொரியா, போன்ற கிழக்கு நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு அடுத்தபடியாய் பித்தப் பையில் தோன்றுபவை கலப்படக் கற்கள். பித்தக் கற்களின் பெரும்பகுதி கலவைக் கற்களினால் ஆனவைதான். இவை எண்ணற்றவையாக இருக்கும்போது, பித்தக் குழாய், பித்தப் பை முதலியவற்றை முழுமையாகக்கூட அடைத்துவிடும்.

கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிரூபினேட், கொழுப்பு அமிலம்  போன்ற பலவற்றின் கலவையால்தான் இந்தக் கற்கள் உண்டாகின்றன. பித்தக் கற்களின் பாதிப்பில் 80 சதவிகிதத்தை இந்தக் கற்கள்தான் எடுத்துக்கொள்கின்றன. கொழுப்பு அமிலம் ரத்தத்தில் இருக்கும் அளவுக்கும் பித்தக் கற்கள் உண்டாவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பித்தக் கற்கள் உண்டாகுவதற்கான 10 காரணங்களை உங்களுக்குப் புரியும் விதமாகப் பட்டியலிடுகிறேன்.

1. வளர்சிதை மாற்றங்களின் காரணமாக (Changes In Sex Hormones)

2. கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு

3. கருவுற்ற பெண்களுக்கு

4. பரம்பரை வழியினர் (Genetic Factors)

5. குறுகிய காலத்தில் அதிக எடை போடுதல் காரணமாக

6. விரதம் இருப்பதன் காரணம்

7. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு

8. சிறுகுடல் பாதைகளில் இருக்கும் நாட்பட்ட வியாதிகளின் காரணமாக

9. தலாசிமியா (Thalassemia) என்ற ரத்தத்தில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு காரணமாக

10. சிக்கிள் செல் ரத்தசோகை (Sickle Cell Anemia) என்ற நோய்க் காரணமாகவும் பித்தக் கற்கள் உண்டாகும்.

பித்தக் கற்கள் பிரச்னை இன்றைக்கோ நேற்றைக்கோ ஏற்பட்டவை இல்லை. எகிப்துப் பிரமிடுகள் மற்றும் சீனக் கல்லறைகளைத் தோண்டி, நோய்க் காரணங்களை அறிந்துகொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, கிட்டத்தத்தட்ட 3,500 ஆண்டுகளுக்கு முன்பே, பித்தப்பைக் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலமாகக் கரைக்கலாம். அப்படியும் கற்களை அகற்ற முடியாவிட்டால், மருத்துவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. அறுவை சிகிச்சை மூலமாகப் பித்தப் பையை அகற்றிவிடுகிறார்கள். பித்தப் பையை நீக்கினால், உடலுக்கு ஏதும் ஆபத்தாகிவிடாதா என அஞ்சுகிறீர்களா? கவலையேபடாதீர்கள்... உணவு செரிமானத்துக்கு கல்லீரல் அனுப்பும் பித்த நீர் நேராகக் குடலுக்குச் சென்றாலே போதுமானது. என்ன ஒன்று... பித்தப் பை அகற்றப்பட்ட பிறகு கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவறியும் நினைக்கக் கூடாது. மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் கொழுப்பு அதிகமான உணவுகளை உண்டால், கெட்ட வாடையுடன் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். வாயைக் கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என மூத்தோர்கள் தெரியாமலா சொன்னார்கள்?!

- மெல்வேன்... சொல்வேன்...