மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 12

இப்படிக்கு வயிறு! - 12

இப்படிக்கு வயிறு! - 12
##~##

'உன் நண்பன் யார் எனச் சொல்... நீ யார் எனச் சொல்கிறேன்’ என்பது உலகின் பிரபலமான ஒரு பொன்மொழி. என்னுடைய நண்பர்களான கல்லீரலையும் பித்தப்பையையும்  பற்றிச் சொன்னபோதே, வயிறாகிய என் சிரமங்களும் உங்களுக்குப் புரிந்திருக்கும். அடுத்தபடியாய் எனக்கு எல்லாவிதங்களிலும் பேருதவியாக இருக்கும் கணையத்தைப் பற்றிச் சொல்கிறேன். கணையத்தின் செயல்பாடுகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் கணித்துவிட முடியாது. வயிறாகிய எனக்குள் ஹீரோ, ஆன்டி ஹீரோ என இருவேறு பாத்திரங்களையும் ஒரே ஆளாகச் செய்யும் உறுப்பு கணையம். எந்த நேரத்தில் கணையம் எப்படி மாறும் என்பதை என்னாலேயே யூகிக்க முடியாது. அதனால்தான் கணையத்தை 'வயிற்றின் எரிமலை’ எனச் சொல்வார்கள். 

உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் ஓர் இயக்கத்தைச் சேர்ந்திருக்கும். என்னுள் இருக்கும் உறுப்புகள் எல்லாமே என் இயக்கத்தைச் சேர்ந்திருக்கும். ஆனால், கணையம் மட்டும் ஜீரண நீர் சுரக்கும் எனது இயக்கத்தையும் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்கத்தையும் ஒருசேரக்கொண்டது. இதுபோன்ற ஆச்சர்ய உறுப்பு மனித உடலில் வேறு எதுவுமே இல்லை.

கணையம் 12 முதல் 20 செ.மீ. நீளம் உடையது. மென்மையான, தட்டை வடிவத்தில் நீளவாக்கில் இருக்கும். உறுப்பின் எடை 85 முதல் 95 மில்லி கிராம் வரை இருக்கும். ஆனால், இதற்கு 'வெயிட்’ அதிகம் என்பது வேறு விஷயம். இரைப்பைக்கு நேர்கீழாக, வயிற்றின் இடதுபுறம் இருக்கும் கணையம், தன் வால் பகுதியைக் கொஞ்சம் மேலே தூக்கிக்கொண்டு சாய்ந்த நிலையில் இருக்கும். ஆரம்பத்தில் கணையத்தை இரைப்பையைத் தாங்கும் ஒரு மெத்தை(Cushion bed)  என்றுதான் நினைத்தார்கள். கல்லீரலின் விரல் பகுதி என நினைத்தவர்களும் உண்டு. ஆனால், கணையம் தனித்தன்மை கொண்ட உறுப்பு.

இப்படிக்கு வயிறு! - 12

பேன்கிரியாஸ் (Pancreas) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. பேன் என்றால் 'எல்லாமும்’ என்று அர்த்தம். கிரியாஸ் என்பதற்குச் 'சதை’ என்றும் பொருள். அதாவது 'முழுவதும் சதையிலான உறுப்பு’ என்கிறார்கள் கணையத்தை. உடலின் மிகப் பெரிய நாளமில்லாச் சுரப்பி என்னும் பெருமையும் கணையத்துக்கே உரியது. பொதுவாகவே நாளமில்லாச் சுரப்பிகளின் சுரப்பு மிகவும் குறைவானதுதான். ஆனால், இவற்றின் செயல்பாடு மிக வேகமாக இருக்கும். குழாய்கள் வழியாகச் சென்றடையாமல், சுரப்புகள் நேரடியாக ரத்தத்தில் கலக்கும். உடலின் அனைத்து இடங்களுக்கும் அனைத்து செல்களுக்கும் சென்று தன் பணியை செவ்வனே ஆற்றும்.

கணையத்தின் மற்றொரு பாகம் ஜீரண மண்டலத்துக்கான நீரைச் சுரக்கிறது. கணையம் முழுதாக வளர்ந்த நிலையில் இந்தப் பகுதி ஒரு தேனடையைப் போல் தன் சுரப்பு வேலையை ஆரம்பிக்கிறது. கணையத்தின் ஜீரணப் பகுதியில்  இருந்து பெறப்படும் நீரில் பல ஜீரண என்சைம்களும் (நொதிப்பொருட்கள்), சோடியம் பைகார்பனேட் போன்ற அயனிகளும் தண்ணீரும் அடங்கி இருக்கின்றன.

நீங்கள் புரதச் சத்து, மாவுப் பொருள், கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொண்டால், அவற்றைச் செரிக்கவைக்க கணைய நீர்தான் காரணம். அது மட்டும் அல்ல... இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக்கூழில் உள்ள அமிலத்தன்மையை நீக்கிச் சரிசெய்ய, கணையம் தன்னிடம் இருந்து பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து உடனடியாக சிறுகுடலுக்கு அனுப்புகிறது. உணவுச் செரிமானத்தில் கணையம் செய்கின்ற மிக முக்கிய வேலை இது.

கணையம் புரதத்தின் செரிமானத்துக்கு மூன்று விதமான நொதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அவை, ட்ரிப்சின், கைமோட்ரிப்சின், கார்பாக்சி பெப்டிடேஸ் ஆகியவை. பெயர் மட்டும் அல்ல இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமானவைதான். ட்ரிப்சின், கைமோட்ரிப்சின் இரண்டும் உணவில் உள்ள புரதத்தை, குறைந்த மூலக்கூறு எடை உள்ள கூட்டுப் பொருட்களாக மாற்றுகின்றன. இவை அமினோ அமிலங்களாக மாற்றப்பட்டு அதாவது... புரதத்தின் இறுதியான ஜீரணப் பொருளாக மாற்றப்பட்டு கல்லீரலைச் சென்று அடையும்.

இதில் டிரிப்சினின் வேலை மகத்தானது. என்னுடைய உயிர் காக்கும் தோழனே டிரிப்சின்தான். டிரிப்சின் சுரப்பு குறைந்தால், பாதி நிலையில் செரிக்கப்பட்ட புரதப் பொருட்கள் கணையக் குழாயை அடைத்து 'கணையத்தில் ஒவ்வாமை’ நிலையை (கணைய வீக்கத்தை) உண்டாக்கிவிடும். கணைய வீக்கம் அதிகமானால் உயிருக்கேகூட பாதிப்பு நேரலாம். இந்த நிலை உண்டாகக் காரணமே மதுவும் பித்தக்கற்களும்தான். பித்தக்கற்கள் கணையக் குழாயின் பொது வாயிலை அடைக்கும்போது, குடிப் பொருளில் உள்ள நச்சுத்தன்மை கணையத்தை வீங்கவைக்கும். அப்போது 'டிரிப்சின்’ அதிகம் சுரக்காமல்போனால் கணையக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவில் கணையத்தில் ஒவ்வாமை ஏற்பட்ட 80 சதவிகிதம் பேருக்கு மதுவும் பித்தக்கற்களும்தான் காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. கணையம் என்கிற உறுப்பு எந்த நேரத்தில் என்ன செய்யும் எனத் தெரியாது எனச் சொன்னேன் அல்லவா? சாது மிரண்ட கதையாக கணையம் ஒவ்வாமைக்கு உள்ளாகும்போது, அதையட்டி உடலுக்குள் ஏழெட்டுத் தொந்தரவுகளாவது உண்டாகும். அதனால், கணைய ஒவ்வாமையை 'மருத்துவ நோய்க்குறித் தொகுதி’(Acute Pancreatitis)  என வகைப்படுத்துவார்கள். சாதுவான உறுப்பை 'சரக்கு’ எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது பார்த்தீர்களா?

- மெல்வேன்... சொல்வேன்...