குட் நைட்!

##~## |
முதல் இரவு... - எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். 'முதல் பகல் கூடாதா?’ என்கிற கேள்வியில் இருந்து இந்த அத்தியாயத்தைத் தொடங்குவோம். அமைதியான இரவுச் சூழல், தனிமைபோன்ற காரணங்கள்தான் தம்பதி கூடுவதற்கு இனிமையான நேரமாக இரவைக் கருத நினைக்கிறது.
நம் நாட்டில் சடங்கு, சம்பிரதாயங்களின் பெயரால் முதன்முதலில் ஒரு தம்பதி கூடும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள். காலையில் இருந்து திருமணக் கொண்டாட்டங்கள், விருந்து, உறவினர் - நண்பர்களின் பாராட்டு, சடங்குகளின் பெயரால் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் புதுமணமக்களைச் சோர்வடையவைத்திருக்கும். அதே நாளில் முதல் இரவைச் சந்திப்பதானால் செயற்கையாக உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டுதான் முதல் இரவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வீட்டுப் பெரியவர்களுக்குப் புரிவது இல்லை.

பலருக்கு என் கருத்து உவப்பானதாக இருக்காது. கணவன் - மனைவி கூடலுக்கு இரவைவிட பகல்தான் ஆரோக்கியமானது. எந்தவித அசதி - சோர்வு இல்லாத பகல் பொழுதில் உற்சாகமுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான விஷயமாகும். அதில் நடைமுறைச் சிக்கல் சில இருப்பது உண்மைதான். ஆனாலும் திட்டமிட்டு சம்பாதிப்பதுபோல, திட்டமிட்டுப் பணிகளைப் பார்ப்பதுபோல, சரியானத் திட்டமிடல் இருந்தால்... பகல் நேரக் கூடலும் சாத்தியமே.
முதல் இரவு அன்றே கணவன் மனைவி செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமா? இது பலருடைய கேள்வி. முதல் இரவு அன்றே கணவனும் மனைவியும் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அது தம்பதியினரின் மனதையும் புரிதலையும் சார்ந்தது. காமசூத்ராவில் வாத்ஸ்யாயனர் 'திருமணம் ஆகி ஒரு வாரத்துக்குள் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்கிறார். ஏனெனில் - வெவ்வேறு வாழ்வியல் நிலைப்பாடு, வெவ்வேறு பெற்றோர், வேறுபட்ட மனநிலைகளைக்கொண்ட இரண்டு பேர் முதன்முதலில் சந்தித்து, மனம்விட்டு உரையாடி, ஒருவரை ஒருவர் மனதார ஏற்றுக்கொண்ட பின்னர் செக்ஸ் வைத்துக்கொள்வதே கூடலின் தித்திப்பை அதிகரிக்கும் என்கிறார்.
முதல் இரவைச் சந்திக்கும் புதுமணத் தம்பதிகளின் மனநிலை இறக்கைக் கட்டிப் பறக்கும் என்பதுதான் பலருடைய எண்ணம் அல்லது கற்பனை. உண்மையில், 'முதல் இரவில் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா... அப்படி முடியாவிட்டால் புது மனைவி என்ன நினைப்பாள்?’ என்கிற கவலையில் கணவன் இருப்பான்.
'நம் கரம் பற்றிய இவன் வாழ்நாள் முழுக்க நம்மைப் பாதுகாப்பானா? இன்பம் - துன்பம் அனைத்திலும் நமக்கு இவன் தோள் கொடுப்பானா? முதல் இரவில் முதன்முதலில் கூடுகிறபோது வலிக்கும் என்கிறார்களே?’ என்பதுபோன்ற பிறாண்டும் சிந்தனைகள் மனைவிக்கு. இதுதான் நிஜ நிலை. இருவருக்குமே பயம், குழப்பம், கூச்சம் எல்லாமே கலவையான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கும்.
திருமணமான புதிதில் தேன் நிலவு என்பது மணமக்களுக்கு இனிக்கும் வார்த்தை. முன்பெல்லாம் பெரும்பாலும் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம்தான் அதிகம். உற்றார் - உறவினர் என்று எப்போதும் மணமக்களை சூழ்ந்துகொண்டே இருப்பார்கள். தனிமை என்பது அவர்களுக்கு அபூர்வமாகத்தான் இருக்கும். அதனால்தான் புதுமணத் தம்பதிகளுக்காகவே தேன்நிலவு செல்லும் பழக்கம் உருவாக்கப்பட்டது. வேறுபட்ட சூழலில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தேன்நிலவு உதவும் என்று நம்பினார்கள். இன்று பல பெற்றோர்கள் ஒரு தவறு செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைத் திருமணத்துக்குப் பின்னர் தேன்நிலவுக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி கட்டணம் குறைவு என்பதற்காக 'பேக்கேஜ் டூர்’ முறையில், புதுமணத் தம்பதியை தேன்நிலவுக்கு அனுப்பிவைப்பார்கள். தனிமையில் இனிமை காணப் போனவர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டிய நிலைக்கு உள்ளாக நேரிடும். திருமணம் ஆன சில நாட்களில் மனைவிக்கு சிறுநீர் போகும்போது மிகுந்த வலியோ அல்லது எரிச்சலோ இருக்கும். இந்த நிலைமைக்கு 'ஹனிமூன் சிஸ்டடைட்டிஸ்’ (Honeymoon cystitis) என்று பெயர். திருமணம் ஆன உடனேயே இப்படி வருவதால்தான் இதற்கு இந்தப் பெயர். பெண் உறுப்பின் சிறுநீர்ப் பாதையும் ஜனனப் பாதையும் அருகருகே இருப்பதால் இதுநாள் வரை இல்லாமல் புதிதாக உடல் உறவு கொள்வதால் ஜனனப் பாதையின் உரசல் சிறுநீர்ப் பாதையில் பிரதிபலித்து எரிச்சலை ஏற்படுத்தலாம். இது கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். புளிப்பான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழங்களைச் சாப்பிட வேண்டும். இரண்டொரு நாட்களில் இந்தப் பிரச்னை தீராவிட்டால், மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
முதல் இரவைப் பற்றிய அதீதக் கனவும் கற்பனையும் தேவை இல்லை. இதுபோலவே வீணான பயமோ, குழப்பங்களும்கூட தேவை இல்லை. அவரவர் இயல்போடு இருந்தால் அந்த இரவு மட்டும் அல்ல; எல்லா இரவுகளும் முதல் இரவுதான்!
- இடைவேளை