மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயறு! - 13

இப்படிக்கு வயறு! - 13

இப்படிக்கு வயறு! - 13
##~##

ணையம் என்கிற உறுப்பைப்பற்றி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வது இல்லை. குடிமகன்கள்கூட 'குடித்தால் கல்லீரலுக்குப் பாதிப்பு’ என்பதைத்தான் உணர்கிறார்களே தவிர, கணையம் என்கிற மிகச் சாதுவான உறுப்பை மிக மோசமான ஒரு கொடூரத்தை நோக்கி மது தள்ளுகிறது என்பதை உணர்வது இல்லை. கணையம் எத்தகைய குணம்கொண்டது என்பதைச் சுலபமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமான நிலையில் அது ஒரு மண்புழு. மது உள்ளிட்ட விஷயங்களால் பாதிக்கப்படும்போது அது பாம்புபோல் ஆகிவிடுகிறது. 

குடிப்பழக்கத்துக்கு ஆளாகாதவர்களைவிட குடிகாரர்களுக்குத்தான் கணையம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில், மது குடிக்கும் காலத்துக்கு ஏற்ப கணையத்தின் பாதிப்பு இருக்கும் நிலவரத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கணையத்தில் மது உண்டாக்கும் பாதிப்பு எக்கச்சக்கம்.

நீங்கள் 6 முதல் 12 வருடங்கள் வரை 'குடி’மகனாக இருந்தால், நாட்பட்ட கணைய அழற்ச்சிக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மது குடிப்பவர்கள் கொழுப்பு, புரதம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது கணையத்தில் அழற்ச்சியை இன்னும் கூடுதலாக்கும்.

இப்படிக்கு வயறு! - 13

கணைய அழற்ச்சி பாதிப்புக்கு உள்ளாவோர் ஜப்பானில் குறைவாகவும் சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும் இருக்கிறார்கள். இதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் குடிப்பழக்கம்தான்.

உடலின் சக்தி மண்டலமாக இருக்கும் என்னைப் பொறுத்தமட்டில் மது என்பதே உடலுக்கு ஒவ்வாத ஒன்றுதான். மதுவானது, புரோட்டீஸ்,  அமைலேஸ், லைபேஸ் போன்ற நொதிகளின் உற்பத்தி அளவைக் கூட்டுகிறது. அதே நேரத்தில் ட்ரிப்சின் என்ற நொதிப்பொருள் சுரப்பைக் குறைக்கவும் செய்கிறது. மேலும், பித்தநீர்ப்பையைச் சுருங்கச் செய்கிற ஹார்மோனின் அளவை மது கூடச் செய்கிறது.

கணையப் பாதிப்புகளுக்கு மது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால், மிக முக்கியக் காரணங்களில் மதுவும் ஒன்று.

இந்தோனேசியா, தென்னிந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நாட்பட்ட கணைய அழற்ச்சி உருவாக உணவுப் பொருட்களே காரணமாக இருந்திருக்கிறது. இவர்களின் உணவு வகைகளில் கஸாவா என்ற பொருள் அதிக அளவில் இருந்ததும், இதுவே கணைய அழற்ச்சியை உருவாக்கி இருக்கிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. கஸாவா என்பது நமக்குத் தெரியாத அரிய வகை உணவுப் பொருள் இல்லை. நம் ஊர் மக்கள் அவ்வப்போது சாப்பிடும் கப்பைக் கிழங்குதான் அது.  

கப்பைக் கிழங்கில் க்ளைக்கோசைட் (glycoside)  100 கிராமுக்கு 65 மில்லி கிராம் என்ற அளவில் கலந்திருக்கிறது.  க்ளைக்கோசைட் என்ன செய்யும் என்றால், இது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹைட்ரோசயனிக் அமிலம் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கும். இதனால் 10-ல் இருந்து 12 வயது வரையிலான குழந்தைப் பருவத்தினருக்கு, நாட்பட்ட கணைய அழற்ச்சி உருவாகக் கூடும்.

அடுத்தது கணையப் புற்றுநோய். அமெரிக்காவில் கணையப் புற்றுநோய் என்பது துன்பம் விளைவிக்கும் தீவிரத்தன்மை உடைய நோய் வகைகளில் எட்டாவது இடத்தில் உள்ளது. வயதானவர்களுக்கு உண்டாகும் புற்றுநோய் மரணத்தில் கணையப் புற்றுநோய்க்கு நான்காவது இடம். சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி வருடத்துக்கு 300 முதல் 500 பேர் புதிய கணையப் புற்றுநோயாளிகளாக உருவாகி வருகிறார்கள் என்பது எவ்வளவு துயரமான செய்தி! இதில், கணையப் புற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று சதவிகிதம் பேர்தான், நோய் பாதிக்கப்பட்டு ஐந்து வருடம் வரை உயிரோடு இருந்திருக்கிறார்கள்.

கணையம், கரு உண்டான 26-ம் நாள் ஒரு பகுதியாகவும், 32-ம் நாள் இன்னொரு பகுதியாகவும் உருவாகிறது. இந்த இரு பகுதிகளும் சிறுகுடலைச் சுற்றி இணைந்து முழுமையான கணையம் உருவாகிறது. கணையத்தின் இரு பகுதிகள் இணையாமல்போனாலோ அல்லது இரு பகுதிகளும் இணைந்து சிறுகுடலைச் சுருங்கவைத்தாலோ, பிறவியிலேயே பாதிப்புகளை உருவாக்கக் கூடும்.

கணையம் என்கிற உறுப்பைக் காக்கும் விழிப்பு உணர்வு முன்னெடுப்புகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டன. ஆனால், நாம் இன்னும் கணையத்தின் அருமையை உணராமலேயே இருக்கிறோம். இன்றைய தினத்தில் இருந்து ஏற்போம்... 'கணையம் காப்போம்’ என்கிற உறுதியை!

- மெல்வேன்... சொல்வேன்...