முதல் கோணல் முற்றிலும் கோணல் அல்ல!

##~## |
அதிகாலையிலேயே அந்த வீடு பதற்றத்தில் இருந்தது. ஆளுக்கு ஆள் குற்றப் பத்திரிகை வாசித்தார்கள். அந்த வீட்டின் தாழ்வாரத்தில் இடி இடித்தது. கூடத்தில் மழை பெய்தது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் இறங்கின வாய் வார்த்தைகள். 'வக்கீலிடம் செல்வதா... டாக்டரைப் பார்ப்பதா?’ என்கிற லாவணிக் கச்சேரி உச்சத்தைத் தொட்டது.
நடந்தது என்ன?
முகேஷ் - சரண்யாவுக்கு முதல் நாள்தான் திருமணம். அன்று இவர்கள் தலை மேல் விழுந்த அட்சதைகளின் எண்ணிக்கையைவிட இன்று அதிகாலையில் மணமகனின் மேல் விழுந்து தெறித்த வார்த்தைகள் அதிகம்.
திருமணமான அன்றே அவர்களுக்கு முதல் இரவு. ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகளுடனும் மிதக்கும் கற்பனைகளுடனும்தான் முகேஷ§ம் சரண்யாவும் அந்த முதல் இரவில் சந்தித்தார்கள். ஆனால், வாலிபமும் வளமையும் சேர்ந்து எத்தனை தடவை கியர் போட்டாலும் முகேஷால் சரண்யாவைத் திருப்திப்படுத்தவே முடியவில்லை. ஒரு பெண்ணை முதல் இரவில் திருப்திப்படுத்த முடியாதவனுக்குச் சமூகம் தருகிற பெயர் 'ஆண்மை இல்லாதவன்’. முகேஷ§க்கும் அந்தப் பொல்லாத பெயர் வந்து சேர்ந்தது. அதனால்தான் அந்த வீட்டில் அந்த அதிகாலையில் அவ்வளவு கலவர நிலவரம்.
நீங்கள் ஆரம்பத்தில் படித்த முகேஷ் - சரண்யாவுக்குமான இந்தப் பிரச்னை கதை அல்ல; நிஜம்!
மெத்தப் படித்தவர்கள்தான் முகேஷ் - சரண்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஓர் ஆணின் மீது அபாண்டப் பழி சுமத்த, ஒரே ஓர் இரவு மட்டுமே போதுமானது என்பது அவர்களின் திடமான எண்ணம். முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முதல் இரவிலேயே மனைவியைக் கணவன் செக்ஸில் ஈடுபடுத்தி, திருப்திப்படுத்த வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. இன்றைய நாட்களில் எப்படித் திருமணங்கள் நடைபெறுகின்றன? அதிகாலையில்தான் நல்ல நேரம் வருகிறது. அப்போது முகூர்த்தத்தை வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நெருக்கடியில் திருமணத்தை அதிகாலையிலேயே வைத்துவிடுகின்றனர். மணமக்கள் இருவருமே முதல் நாளில் இருந்தே சுற்றம் சூழ, தூக்கமின்றி இருக்க வேண்டும். அன்று மாலையிலேயே வரவேற்பும் தடபுடலான விருந்தும் நடைபெறும். இந்த நிலையில் அன்றிரவே முதல் இரவையும் வைத்துவிடுவார்கள். அசதியும் சோர்வும் ஓய்வு எடுக்கச் சொல்லும்.
முதல் இரவிலேயே தன்னை 'ஆண் மகன்’ என்று உலகுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் அந்த மணமகனுக்குள் மன அழுத்தத்தையும் உண்டு பண்ணியிருக்கும். இவை எல்லாம் சேர்ந்துகொண்டதால், அவனுக்குள் ஆர்வம், ஆசை இருந்தும் ஆண் உறுப்பு எழுச்சி அடையாமல் போயிருக்கலாம். இத்தகைய பின்னணி எதுவும் தெரியாமல், பெண்ணின் பெற்றோர் கள் மணமகனை ஆண்மை இல்லாதவனாகக் கருதிப் பழி சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால், மனமுடைந்துபோகும் புது மாப்பிள்ளையால், அடுத்தடுத்த நாளும் 'அது’ முடியாமல் போகலாம்.
ஒரு திருமண வீட்டில் இப்படி ஒரு பிரச்னை தலையெடுக்கும்போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சில சமயம் வழக்கறிஞரைப் பார்க்கிறார்கள் அல்லது போலி மருத்துவர்களை நாடுகின்றனர். இது இரண்டுமே தவறு. செக்ஸில் ஈடுபடும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையை சைக்கோ சோமேட்டிக் (Psychosomatic) என்பார்கள். அதாவது, மனதும் உடலும் ஒருங்கிணைதல் என்று அர்த்தம். இதில் சைக்கோ என்பது மனதையும் சோமேட்டிக் என்பது உடலையும் குறிக்கும். பலர் நினைப்பதுபோல் ஓர் ஆணுக்கு நினைத்தவுடன் சட்டென்று விறைப்புத்தன்மை வந்துவிடாது. இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் முதலிரவு முடிந்த காலையில் மாப்பிள்ளையை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லிவிடுகின்றனர். பொதுவாக, மனரீதியான தூண்டுதலும் உடல்ரீதியான தூண்டுதலும் சேர்ந்து மூளையில் இருக்கும் பாலியல் மையத்தைத் தூண்டிவிடும்போதுதான் விறைப்புத்தன்மை ஏற்படும். இது இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் விஷயம்.
இப்படியான சூழலில் பெற்றோர்கள், இதனைப் பெரிய பிரச்னை ஆக்காமல் புதுமணத் தம்பதியரை மருத்துவரிடம் அனுப்பி வைப்பதுதான் சரியானது. அவர் அந்தப் புதுமணத் தம்பதியிடம் முதலில் உண்மையைக் (Psychosomatic) கேட்டறிவார். அடுத்து, உடல்ரீதியாகப் பரிசோதிப்பார். மூன்றாவதாக ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பார். இவற்றின் அடிப்படையில் இறுதியில் சிகிச்சை தருவார். பொதுவாக இதுபோன்ற தம்பதியரின் செக்ஸ் பிரச்னைக்கு செக்ஸாலஜிஸ்டிடம் செல்லும்போது கணவன் - மனைவி இருவரும் சேர்ந்துதான் போக வேண்டும். நவீன செக்ஸ் மருத்துவம் செக்ஸ் பிரச்னையை ஆண்/பெண் என்று தனித்துப் பார்ப்பது இல்லை. ஆனால், சமூகம் செக்ஸ் பிரச்னையைத் தனித் தனியாகத்தான் பார்க்கிறது. இது தவறு.
உதாரணமாக ஒரு கணவனுக்கு விறைப்புத் தன்மை வராவிட்டால் அது அவனுக்கு மட்டும்தானா பாதிப்பைத் தருகிறது? அவனுடைய மனைவியும் சேர்ந்துதான் பாதிப்பு அடைகிறாள். எனவே, பிரச்னை மனரீதியில் மட்டும் என்றால் கவுன்சலிங் மூலமும் செக்ஸ் தெரபி மூலமும் சரி செய்யலாம். பிரச்னை உடல்ரீதியில் என்றால் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை தரப்படும். முதல்கட்டமாக மருந்து மாத்திரை மூலம் சரி செய்ய முயற்சிக்கப்படும். தேவைப்பட்டால் உபகரணங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படும். அதுவும் கைகொடுக்கவில்லை என்றால் விறைப்புத்தன்மை இன்மையை அறுவைசிகிச்சை செய்து சரிசெய்யலாம்.
- இடைவேளை