மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 14

இப்படிக்கு வயிறு! - 14

இப்படிக்கு வயிறு! - 14
##~##

''ஆ... அம்மா... வலி உயிர் போகுதே...'' என அலறுபவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். தலைவலிக்கு அடுத்தபடியாக மனித வர்க்கத்தை ரொம்பவே வாட்டுவது வயிற்று வலிதான். நான் வீணாக உங்களை அழவைத்து ரசிக்க மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும். செரிக்க முடியாததைச் சாப்பிட்டு எனக்கு நீங்கள் குடைச்சலைக் கொடுத்தால்தான் அதன் சிக்கலை உங்களுக்குப் புரியவைக்க வலி வடிவில் உங்களுக்கு நான் அலாரம் அடிப்பேன். செரிமானப் பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி சில மணி நேரத்திலேயே சரியாகிவிடும். ஆனால், குடல்வால் (Appendix) பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி அப்படிப்பட்டது அல்ல. இன்றையக் காலகட்டத்தில் குடல்வால் பிரச்னை பலருக்கும் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் குடல்வால் பிரச்னை நமக்குத் துளி அளவு பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

பெருங்குடலின் முடிவுப் பகுதியில் குடல்வால் இருக்கிறது. அது ஓர் எச்ச உறுப்பு. மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், மனிதக் குரங்கு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வோம்பார்ட் (Wompart)  என்கிற பாலூட்டி விலங்கினத் துக்கும் குடல் வால் இருக்கிறது. இதர  விலங்கினங்களில் அது 'சீக்கம்’

இப்படிக்கு வயிறு! - 14

என்கிற பெருங்குடல் பாகத்தின் தொடர்ச்சி யாகவே பயணிக்கிறது. அத்தகைய விலங்குகளில் எச்ச உறுப்பாக இல்லாமல் சிறிதளவு செரிமானப் பணியையும் சீக்கம் செய்கிறது.

மனிதனுக்குக் குடல்வால் தேவையற்ற உறுப்பு. அப்படி என்றால் இயற்கை ஏன் அந்த உறுப்பை மனிதனுக்குப் படைக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். இயற்கை என்கிற மாபெரும் சக்தி 'தேவையற்றது’ என எதையும் படைத்தது இல்லை. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நான்கு கால்களில் இருந்து இரண்டு கால்களில் நடந்தபோது ஏற்பட்ட மாறுதல்களில் முக்கியமானது குடல் வாலின் தோற்றம். நான்கு கால்களில் நடந்த நம்முடைய குரங்கு வடிவ மூதாதையர்களுக்குக் குடல்வால் பயனுள்ள உறுப்பாக இருந்திருக்கலாம்.

குழந்தை கருவாகி உருவாகும்போதே  வளர்ச்சி அடையும் உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் உடலுக்குள்ளாகவே அதன் வளர்ச்சியை வைத்துக்கொள்கின்றன. ஆனால், சிறுகுடலும் பெருங்குடலும் வயிற்றுக்கு வெளியே வளர்ச்சி அடைகின்றன. வளர்ச்சி அடைந்த குடல்கள் வயிற்றின் உள்ளே  செல்லும்போது  90 டிகிரி கோணத்தில் திரும்புகிறது.

இந்த மாதிரி சென்றவுடன் அந்தந்த உறுப்புகள் அதனுடைய பாகங்களுக்குச் சென்று நிலைகொள்கிறது. குழந்தையின் கால் பக்கம் உள்ள பகுதி முதலில் செல்ல தலைப்பக்கம் உள்ள பகுதி கடைசியாகப் போகிறது. இதைத்தான் குடலின் சுழற்சி முறை(Intestinal rotation) என்கிறோம்.

இந்தக் குடல் மாற்றத்தில் சீக்கம் என்னும் பெருங்குடலின் தொடர்ச்சியாக உள்ள பெருங்குடல் சுருங்கி உபயோகமற்ற செரிமானப் பணி இல்லாத உறுப்பாகச் சுருங்குகிறது. புழு போன்ற இதன் தோற்றத்தை வைத்து இதை 'வெர்மிபார்ம் அப்பெண்டிக்ஸ்’ (Vermiform appendix) என்பார்கள்.

உடற்கூறியலை ஆராய்ந்த லியனார்டோ டாவின்சி  15-ம் நூற்றாண்டில் அப்பெண்டிக்ஸ்பற்றி அறிவித்த முதல் அறிஞர். அப்பெண்டிக்ஸ் வீக்கம்பற்றி 1711-ல் ஜெர்மனியைச் சேர்ந்த அறுவைசிகிக்சை  நிபுணர் லாரன்ஸ் ஹேஸ்டர் (Lorenz Heister) கூறும் குறிப்புகளே மருத்துவத்தில் அப்பெண்டிக்ஸ் பற்றிய முதல் குறிப்பு. 18, 19-ம் நூற்றாண்டுகளில்தான் வயிற்றின் வலதுபுற அடிவயிற்று வலி குடல்வால் பிரச்னையால் ஏற்படுவது என்பதை யூகிக்க ஆரம்பித்தார்கள். குடல்வால் பற்றிய விவரங்கள் மற்றும் வெளிப்பாடுகளை முழுவதுமாக வெளிக் கொணர்ந்தவர் ரெஜினால்ட் ஃபிட்ஸ். அப்பெண்டிக்ஸ் நீக்கும் முதல் அறுவை சிகிச்சையை செய்தவர் லாசன் ட்யெட்.

குடல்வால் மற்றைய குடல் பாகங்களில் இருந்து வேறுபட்டு அதிகமான நிணநீர் கட்டிகளைப் பெற்று இருக்கிறது. அதனால்தான் உடலில் எந்தவித அழற்சி கலந்த பாதிப்பு உருவானாலும் குடல் வால் வீங்குகிறது. குடல்வால் பிரச்னை ஏன் ஏற்ப டுகிறது. 100 வருடங்களுக்கும் மேலாக குடல்வால்குறித்து எத்தனையோ ஆய்வு களை மருத்துவ உலகம் நடத்திவிட்டது. ஆனால், 'இதுதான் காரணம்’ என எதையும் மருத்துவ ஆய்வுகளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. குடல்வால் பிரச்னைக்கு பல காரணங்களைப் பட்டியல் போடுகிறது மருத்துவ உலகம்.

நவீன உலகில் உணவின் மாற்றம் ஒரு முக்கியக் காரணம். குறைந்த நார்ச்சத்து உணவு குடலுக்குள் வரும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, மலக் கல் உருவாகக் காரணமாகவும் அமைகிறது. மலக் கல் அல்லது புழுக்கள் அல்லது குடல்வால் அருகில் உள்ள நிணநீர்க் கட்டிகளின் வீக்கம் ஆகியவை குடல்வாலின் உள்ளே அடைப்பை ஏற்படுத்தும்போது அந்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்தக் குறைவு குடல்வாலின் உட்சவ்வை அழுக வைக்கிறது.  அதன் காரணமாக அங்கு பாக்டீரியாக்கள் பெருகி குடல்வாலைப் பாதிக்க வைக்கின்றன.

பெருங்குடல் சுவர்ப்பிதுக்கம் (Diverticulitis) என்கிற பிரச்னையும் குடல்வால் தொந்தரவுக்குக் காரணமாகக் கருதப்பட்டது. கிருமிகளின் தாக்குதலாலும் குடல் வால் வலி ஏற்படலாம். முக்கியமாக பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமித் தொற்றும் குடல்வால் சிக்கல் உருவாகக் காரணம் ஆகலாம். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்கூட குடல்வால் துவாரத்தை அடைக்கும்போது வியாதியை உண்டாக்கக் கூடும்.

சரி... வயிற்று வலி எத்தனையோ காரணங்களால் ஏற்படுகிறது. நமக்கு வந்திருப்பது குடல்வால் பிரச்னையால் ஏற்பட்டிருக்கும் வலிதான் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

அடுத்த இதழில் சொல்கிறேன்.

- மெல்வேன் சொல்வேன்