இப்படிக்கு வயிறு! - 15

##~## |
வலி என்பது பலவிதக் காரணங்களால் உருவாகிறது. உங்களுக்கு ஏற்பட்டிருப்பது குடல் வால் வலிதான் என்பதை நான் சொல்லும் அறிகுறிகளின் மூலமாக நீங்கள் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்குக் குடல்வால் வலி நெஞ்சுக்குழிப் பகுதியில் (Eprigastric region) ஆரம்பிக்கும். சிறிது நேரம் கழித்துத் தொப்புளைச் சுற்றி வலி பரவும். ஆனால், மற்றவர்களுக்கு குடல்வால் வலி முதலில் தொப்புளைச் சுற்றித்தான் ஆரம்பிக்கும். பிறகு வயிற்றின் வலது புறத்தில் அடிவயிற்றில் நிலைகொள்ளும். அடி வயிற்றில் வலது புறத்தில் வலி ஏற்படும்போது, மிதமான காய்ச்சலும், பசியின்மையும் தோன்றினால் நிச்சயம் உங்களுக்கு குடல்வால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகுவதற்கு இந்த அறிகுறிகளே போதுமானவை.
பொதுவாக அப்பண்டிஸைடிஸ் (Appendicitis) என்னும் குடல்வால் வீக்கம் பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது குழந்தைகள் வரை பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. அதேபோல் முதியோருக்கும் இந்த பாதிப்பு பெரும்பாலும் ஏற்படுவது இல்லை. குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரைதான் குடல்வால் வீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

குடல்வால் வீக்கத்தை திடீர் வீக்கம், நாட்பட்ட வீக்கம் என இரு வகைகளா கப் பிரிக்கலாம். திடீர் வீக்கம் ஏற்படும்போது குடல்வால் துவாரம் அடைபடுவ தால் அதனுடைய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, அழுகி, வீங்கி, ஓட்டை ஏற்படும் நிலை உருவாகும். திடீர் வீக்கத்தினால் வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம். திடீர் வீக்கத்தின்போது முறையான சிகிச்சை இல்லா விட்டால் சீழ் உண்டாகி பக்கத்தில் இருக்கும் குடல் மற்றும் வயிற்று திரைச் சீலையுடன் (ளினீமீஸீtuனீ) ஒட்டி ஒரு கட்டியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
நாட்பட்ட வீக்கம் உள்ளவர்களுக்கு குடல்வால் வீங்கும். அப்போது வலி ஏற்படும். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே வலி குறைந்து இயல் பான நிலை ஏற்பட்டுவிடும். சிறிது காலம் கழித்து மறுபடியும் இந்த வீக்கம் வரலாம் அல்லது வராமலும் போகலாம். நாள்பட்ட வீக்கத்தின் பாதிப்பு திடீர் வீக்கப் பாதிப்பைவிட அதிகமாக இருக்காது. அதனால், திடீர் வீக்கத்துக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. குடல்வால் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு அறுவைச் சிகிச்சைதான். பொது அறுவைச் சிகிச்சை முறையிலும், லேப்ராஸ்கோபி முறையிலும் மிக எளிதாக குடல்வால் தொந்தரவுக்கு முடிவு கட்டலாம்.
குடல்வால் வீங்கி வலி கொடுக்கும்போது ஆரம்ப நிலையில் அதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளில் சிறிது நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இந்த வீக்கம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. சிலருக்கு இந்த வீக்கம் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே திரும்ப வந்து தொந்தரவு கொடுக்கும். சிலருக்கு 6 மாதங்கள் தொடங்கி ஒரு வருட இடை வெளிக்குப் பிறகுகூட தொந்தரவு வரலாம். குடல்வால் வியாதிக்காகச் செய்யப்படும் பரிசோதனைகளில் ஸ்கேன் முக்கியமானது. குடல்வால் வீக்கம் ஏற்பட்டு கட்டி ஏற்படும்போது, குடல்வால் வெடிக்கும்போது, பெரியவர்களுக்குக் குடல் புற்றுநோய் இருக்கலாம் எனச் சந்தேகப்படும்போது சி.டி. ஸ்கேன் பரிசோதனை முக்கியமாக உதவும்.
குடல்வால் தொந்தரவுக்கும் இதரப் பிரச்னைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, குடல் இணையத்தில் நிணநீர்க் கட்டிகள் அலர்ஜி, மெக்கல்லின் குடல் பிதுக் கம், குடலுக்குள் குடல் செருகல், நுரையீரலில் நிமோ னியா பாதிப்பு போன்றவை ஏற்படும்போதும் வலி உருவாகும். குழந்தைகளுக்கு கணையத்தில் ஏற்படும் நிணநீர்க் கட்டிகளின் வீக்கம் முக்கியமானது. பொது வாக வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது இந்த வீக்கத்தின் வெளிப்பாடு குடல்வால் வியாதி போல் தெரியும். காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இந்த வீக்கம் தானாக குறைந்து வலியும் பறந்துவிடும்.
பெரியவர்களுக்குச் சிறுநீரகக் குழாயில் கல் அடைப்பு, முன் சிறு குடல் புண்ணில் ஓட்டை, விரைப்பை யில் விரைத்திருகல், கணைய அழற்சி, வயிற்றுச் சதையில் ரத்தக்கட்டு ஆகி யவை ஏற்படும்போது குடல்வாலுக்கு நிகரான வலி ஏற்படும். வயிற்றுப்போக்கு காய்ச்சலுடன் உண்டாகும்போது அடிவயிற்று வலி குடல்வால் கோளாறுபோல் தோன்றும். வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு அளிக்கும் சிகிச்சையில் அடி வயிற்று வலி குறைந்துவிடும். வயிற்றுவலி வியாதி அதிகமாகி வயிற்றில் ஓட்டை ஏற்படும்போது அதில் இருந்து கசியும் திரவம் வலது புற அடிவயிற்றில் சென்று தங்கும். அப்போது வயிற்றுவலி வயிற்றின் மேல்புறத்தில் இல்லாமல் அடிவயிற்றில் இருக்கும். அப்போது எடுக்கப்படும் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிக்கான எக்ஸ்ரே அதை அல்சர் வியாதியின் ஓட்டைதான் என்பதைத் தெளிவுபடுத்தும்.
பெண்களுக்கு மாதவிலக்குக்கு நடுவில் ஏற்படும் வயிற்றுவலி, அடிவயிற்று அழற்சி, சிறுநீரகங்களில் ஏற்படும் தொற்று, கருக்குழாயில் கர்ப்பம், சூலகத்தில் ஏற்படும் கட்டியில் திருகல், வயிற்றுக்குள் மாதவிடாய்க் கசிவு போன்றவை ஏற்படும்போது உண்டாகும் வலியை உரிய பரிசோதனைகள் மூலம் அறிய வேண்டும். பெண்களுக்கு வலது கருக்குழாயில் கரு ஏற்பட்டு வெடிக்கும்போதோ அல்லது வலது சூல்பையின் கட்டியில் திருகல் ஏற்படும்போதோ வலதுபுற அடிவயிற்றில் வலி ஏற்படும்.
வயதானவர்களுக்கு குடல் சுவர் பிதுக்கம், குடல் அமைப்பு, பெருங்குடல் புற்று, சிறுகுடல் இணையத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, அயோர்ட்டா ரத்தக்குழாய் விரிதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்போதும் வலி எடுக்கும். பெருங்குடலில் ரத்தக்குறைவு, வலதுபுறப் பெருங்குடலில் ஏற்படும் கட்டிகளின் தாக்கம் குடல்வால் வலிபோல் தோன்ற லாம். உரிய பரிசோதனைகளைச் செய்வதன் மூலமே இந்த வலி எல்லாம் குடல்வால் வலிதானா இல்லை வேறு ஏதும் பிரச்னையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்!
- மெல்வேன்... சொல்வேன்...