Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!

நீரஜா மேல் பவித்ரனுக்கு டன் கணக்கில் ஆசை. மனச் சுவரில் அவள் பெயரை ஆயில் பெயின்டால் எழுதிச் சென்றது காதல். 'இஸ்பஹானி’, 'ஸ்கை வாக்’, 'எக்ஸ்பிரஸ் அவென்யு’ எனச் சுற்றித்திரிந்தன அந்தக் காதல் கிளிகள். ஆனால், சமீப காலமாக பவித்ரனுக்குள் காதல் இருந்த இடத்தில் காமம் வந்து உட்கார்ந்துகொண்டது. அவளைக் கல்யாணத்துக்கு முன்பு ஒரே ஒரு தடவையாவது ருசித்துவிடத் துடித்தான் பவித்ரன்.

''சீ... 'அது’ எல்லாம் மேரேஜுக்கு அப்புறம்தான்...'' என்றாள்.

''ஒரே ஒரு தடவையில் ஒண்ணும் உண்டாயிடாது...'' என்றான் அவன்.

இவர்களது டீலிங் ஒருபுறம் இருக்கட்டும். இந்த இதழில் நமது கேள்வி... 'ஒரே ஒரு தடவை உடல் உறவுகொண்டால் கர்ப்பம் உண்டாகிவிடுமா?’ என்பதுதான். இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள சில விஞ்ஞான விளக்கங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குட் நைட்!

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின்போது முதிர்ச்சி அடைந்த ஒரு கரு முட்டையின் ஓடு உடைந்து முட்டை வெளிவரும். இதற்கு 'ஓவலேஷன்’ (Ovulation) என்று பெயர். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சியானது மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால்... மாதவிடாய் வந்த நாளில் இருந்து 14-வது நாள் இந்த 'ஓவலேஷன்’ நடக்கும். இந்த 14-வது நாளில் இருந்து கருப்பையின் உட்சுவர்        (Endometrium) தடிமனாகிக்கொண்டே வரும். ஒருவேளை கர்ப்பம் தரித்தால் கரு வந்து தங்குவதற்குத்தான் இந்த ஏற்பாடு. இந்தக் காலகட்டத்தில் உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.

பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி.லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந்து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இருக்கும். எப்போது உடல் உறவு வைத்துக்கொண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிர் அணுக்கள் கருமுட்டையைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின்போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திக்க கிட்டத்தட்ட 1 முதல் 5 மணி நேரம் ஆகும். இந்தப் பயணத்தில் லட்சக்கணக்கான உயிர் அணுக்கள் இறந்துவிடும். கடைசியாக சுமார்

குட் நைட்!

3,000 உயிர் அணுக்கள் மட்டுமே ஃபெலோபியன் குழாயைச் சென்றடையும்.  இதிலும் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திப்பது சில நூறு உயிர் அணுக்கள்தான்.  இவற்றில் ஒரே ஓர் உயிர் அணு மட்டும்தான் முதிர்ச்சி அடைந்த முட்டையைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து கருவாகும்.

உயிர் அணுவை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தால் அதற்கு ஒரு தலை, உடம்பு, வால் பகுதி இருப்பதைப் பார்க்கலாம். இந்த வால் பகுதியால்தான் உயிர் அணு நீச்சல் அடித்து முன்னேறுகிறது. உயிர் அணுவின் தலைப் பகுதியில் சில ரசாயன என்சைம்கள் இருக்கும். அந்த என்சைம்கள் கருமுட்டையின் சுவரை அரித்து ஒரு சிறு துவாரம் உண்டாக்கும். அது வழியாக ஒரே ஓர் உயிர் அணுவின் தலையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் உள்ளே நுழைந்துவிடும். உயிர் அணுவின் தலை, உடம்பு, வால் பகுதிகள் உள்ளே போகாது. கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸும் உயிர் அணுவில் இருக்கும் நியூக்ளியஸும் ஒன்று சேருவதனால் கர்ப்பம் உண்டாகிவிடும். பின்னர், இப்படி ஒன்று கலந்த நியூக்ளியஸ் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகும்... இப்படியே பல்கிப்பெருகி ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய பந்து மாதிரி உருவாகி எண்டோமெட்ரீயத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும்.

ஒரு பெண்ணின் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து இருந்தால் ஒரே ஒரு தடவை உறவுவைத்துக்கொண்டால்கூட கர்ப்பம் தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

இன்னும் சிலர் 'சில குறிப்பிட்ட நாட்களில் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்காது’ என்று உத்தேசமாகச் சொல்வார்கள். அது, அந்தந்தப் பெண்ணின் மாதவிடாய்ச் சுழற்சி சரியாக உள்ளதா என்பதைப் பொறுத்தது. மாதவிடாய் தொடங்கிய தினத்தை முதல் நாளாக வைத்துக்கொண்டால் சரியாக 9-வது நாளில் இருந்து 18-ம் நாள் வரையில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், 'உலகம் முழுவதும் 8 சதவிகிதம் பெண்களுக்குத்தான் மாதவிடாய் சுழற்சி மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை வருகிறது’ எனக் கண்டறிந்துள்ளது மருத்துவ உலகம். எனவே, 'இந்த நாட்களில் இவர்கள் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்காது அல்லது தரிக்கும்’ என்று எவராலும் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடியாது.

'எந்த நிலையில் (position) உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும்?’ என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. உறவின்போது பெண் கீழ் இருக்கும் நிலைதான் கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற நிலை. கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விரும்பும் பெண் உடல் உறவுக்குப் பின்னர் படுக்கையில் இருந்து உடனே எழுந்துகொள்ளாமல் 20 நிமிடங்கள் அதே நிலையிலேயே படுத்து இருக்க வேண்டும்.

இப்போது சில நவீன ஸ்ட்ரிப்புகள் வந்துள்ளன. இதனை பெண்ணின் சிறுநீரில் நனைத்து சோதித்தால் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியாகும் நாட்களை ஓரளவு கணிக்க முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் கண்டறியலாம்.

- இடைவேளை