இப்படிக்கு வயிறு! - 16

##~## |
'எதுக்களிப்பு ஏன்?’ நன்றாகச் சாப்பிட்ட சில நிமிடங்களில், ''நெஞ்சு எரிகிற மாதிரி இருக்கே...'' என்பார்கள் சிலர். உணவுப்பழக்கம் முற்றிலுமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, சாப்பிட்ட உணவே மேல் எழும்பி வருவதுபோல் இருக்கும். இதற்குக் காரணமே எனக்குள் நடக்கும் அமிலச் சுரப்புதான். அமிலம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள். 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே...’ என கண்ணதாசன் சொல்வாரே... அதுபோல்தான் இந்த அமிலமும். இரைப்பையில் அமிலம் இருக்கும்போது செரிமானத்துக்கு உதவும் நண்பனாக இருக்கிறது. இரைப்பையின் மேற்புறத்தில் செல்லும்போது எதுக்களிப்பை ஏற்படுத்தும் அமிலநோயை (GERD - Gastroesophageal reflux disease) உண்டாக்குகிறது. இதே அமிலம் இரைப்பைக்குள் அதிகம் சுரந்தால், வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.
உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் சந்திப்பை ஓ.ஜி. ஜங்ஷன் (OG Junction) என்று சொல்வார்கள். இந்த இடத்தில் உள்ள தசையும் அதைச் சுற்றி உள்ள உதரவிதானத்தின் தசையும் இணைந்து அந்த இடத்தை எப்போதும் மூடி வைத்து ஓர் அடைப்பான்போல (Spihincter) பாதுகாக்கிறது. மூளையின் நேரடிக் கண்காணிப்பில் இந்த இடம் உள்ளதால், உணவுக் குழாயில் இருந்து உணவு இரைப்பைக்குச் செல்லும்போது இந்தச் சந்திப்பு திறந்து வழிவிடுகிறது. அடுத்த

விநாடியே மூளையின் கட்டளைப்படி உடனே அந்த இடம் மூடப்படுகிறது. அதனால்தான், நீங்கள் படுத்துக்கொண்டு உணவு சாப்பிட்டால்கூட உணவு சீராக உள்ளே போகுமே தவிர, வெளியே வராது.
இந்த ஓ.ஜி. சந்திப்பு பிறந்த குழந்தைக்குச் செயல்படுவது இல்லை. பால் சாப்பிட்ட உடன் சில குழந்தைகள் வாந்தி எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு இதுதான் காரணம். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த ஓஜி. சந்திப்பு சரிவரச் செயல்படுவது இல்லை. அதனால்தான் நெஞ்சு எரிச்சலுக்குப் பெரும்பாலும் ஆளாகின்றவர்கள் வயதானவர்களாக இருக்கிறார்கள். வயதானவர்கள் சாப்பிட்ட உணவு எதிர்த் திசையில் இரைப்பையில் இருக்கும் அமிலத்துடன் செல்வதால் ஜிஇஆர்டி என்கிற எதுக்களிக்கும் நோய் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்படக்கூடிய இந்த எதுக்களிப்புப் பிரச்னை ஃபாஸ்ட் ஃபுட் காரணமாக இளம் வயதினருக்கும் பரவலாக ஏற்படுகிறது. காரணம் தவறான உணவு முறை. நெஞ்சு எரிச்சல் நெஞ்சுக்குழியில் ஆரம்பித்து கழுத்துவரை பரவும். பால் அல்லது சோடா சாப்பிட்டால் இந்த எரிச்சல் குறையும். சிலருக்கு இதன் வெளிப்பாடு நெஞ்சு வலியாகவே இருக்கும். இதை இதய நோயில் (Heart Attack) இருந்து வேறுபடுத்துவது எளிது அல்ல. இந்த நெஞ்சுவலி பெரும்பாலும் இரவு படுத்தவுடன் நடு ராத்திரியிலே வரலாம்.
அமிலம் இரைப்பையில் இருந்து எளிதாக உணவுக்குழாயில் பயணிக்கும்போது ஏற்கெனவே புண்பட்ட உணவுக்குழாயின் உள்சவ்வு அமிலத்தின் தாக்கம் காரணமாக சுருங்கும்போது, நெஞ்சுவலி ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை கவிஞர் வைரமுத்துக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ... அதனால்தான் 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி’ எனக் காதலின் வலியை இந்த அறிகுறிகளோடு ஒரு பாடலில் சொல்லி இருப்பார். சிலருக்கு மூச்சுக்குழாயின் துவக்கத்தில் அமிலம் தாக்கும்போது அந்தப் பகுதி வீங்கிவிடும். ஏதோ ஓர் அடைப்போ அல்லது கட்டியோ ஏற்பட்டது போன்ற உணர்வு உருவாகும்.
இந்த அமிலத்தின் பயணம் இப்படியே இன்னும் ஒருபடி மேலே போய் மூச்சுக்குழாயில் துளிகளாய்ப் (Microwspillage) பயணிக்கும்போது, மூச்சுக்குழாய் சுருங்கி ஆஸ்துமா பாதிப்புபோல் தோன்றும். நெஞ்சுவலிக்காக இதய மருத்துவரையோ, மூச்சுக்குழாயின் துவக்கப் பகுதி பாதிப்புக்காக காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரையோ, ஆஸ்துமா மருத்துவரையோ சந்திக்க போகும்போதுதான் இந்தப் பாதிப்புகளுக்கு எல்லாம் வயிற்றுநோய் எனப்படுகிற ஜிஇஆர்டி பிரச்னையே காரணம் என்பது தெரியவரும். அதனால், பலவிதமான பயத்தையும் அதற்கான மருத்துவர்களைத் தேடி ஓடும் தேவையையும் இந்தப் பிரச்னை உண்டாக்கிவிடும்.
இந்த நோயைக் குணப்படுத்த 90 சதவிகிதம் மருந்து மாத்திரைகளே போதும். கூடவே, உணவுக் கட்டுப்பாடும் அவசியம். ஆரஞ்சு, தக்காளி, மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, பிரெஞ்சு ஃப்ரை, ஐஸ்கிரீம், புளித்த கிரீம்கள், மில்க் ஷேக், மது, ஒயின், காஃபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு அதிகமாக இருக்கும் குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இந்த உணவுகள் அமிலத்தை அதிகமாக எதுக்களிக்கச் செய்யும்.
எதுக்களிப்புப் பிரச்னை உள்ளவர்கள் குனிந்து செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் பளு தூக்கும் பயிற்சிகளைச் செய்யக் கூடாது. இடுப்பில் பெல்ட் இறுக்கமாக அணியக் கூடாது. எதுக்களிப்பை உண்டாக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. இதையும் தாண்டி எதுக்களிப்புப் பிரச்னை ஏற்பட்டால், அறுவைச் சிகிச்சையை (Nissen fundoplication) பொது அறுவை முறையிலோ அல்லது லேப்ராஸ்கோப்பி முறையிலோ செய்துகொள்ளலாம்.
- மெல்வேன்... சொல்வேன்...