மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 17

இப்படிக்கு வயிறு! - 17

இப்படிக்கு வயிறு! - 17
##~##

ன்றைய தலைமுறையினர் பலருக்கும் பாரபட்சமின்றி இருக்கிற பிரச்னை வயிற்றுப் புண் (அல்சர்). தலைவலி, காய்ச்சல்போல் வயிற்றுப் புண் பிரச்னையும் எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது. வயிற்று வலி, நெஞ்சில் எரிச்சல், பசியின்மை, வாயுத் தொந்தரவு, உணவின் மீது வெறுப்பு என மருத்துவமனைக்குப் போகும் நோயாளிகளில் 15 சதவிகிதம் பேர் இரைப்பை மற்றும் சிறுகுடலில் புண் பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். உலக அளவில் எல்லா நாடுகளிலுமே நிலைமை இதுதான். 

வயிற்றுப் புண் பிரச்னையின் ரிஷிமூலம் என்ன என்பதை விரிவாகச் சொல்கிறேன். சுவையான உணவைப் பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ நமக்கு உமிழ்நீர் சுரக்கிறது அல்லவா... அதேபோல், உணவைப் பார்த்தாலோ பசி ஏற்படும்போதோ இரைப்பையில் அமிலம் சுரக்கும். இரைப்பையில் உள்ள 'பைரட்டல்’(Parietal)  செல்களை 'வேகஸ்’ (Vagus) நரம்பு தூண்டி விடுவதால்தான் அங்கே அமிலம் சுரக்கிறது. இந்த வேகஸ் நரம்பு மூளையில் இருந்து கீழே இறங்கி இரண்டாகப் பிரிந்து இரைப்பையை அடைகிறது. இந்த நரம்புகள் இரைப்பையை இயக்குவதோடு, பித்தப்பை, கணையம், சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை வேலை செய்யவும் உதவுகின்றன. 'வேகஸ்’ நரம்பு அமில உற்பத்தியில் மிகுந்த பங்கு வகிப்பதுடன் 'பெப்சின்’ என்கிற ஹார்மோன் உற்பத்திக்கும் துணை நிற்கிறது. 'வேகஸ்’ நரம்பும் 'காஸ்டிரின்’ ஹார்மோனும் அமில உற்பத்திக்கு உதவி செய்கின்றன. இந்த அமில உற்பத்தி ஓர் அளவுக்கு வந்தவுடன், காஸ்டிரின் ஹார்மோன் சுரப்பது குறையும். இந்த நிலையில்தான் அமில, காரத்தன்மைகள் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சீரான இயக்கம் நடைபெறுகிறது. இந்த மாதிரி இரைப்பையில் உள்ள அங்கங்களின் இயக்கம் சீராக நடைபெற்றால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இதில் ஏதாவது மாறுபாடு ஏற்பட்டால், 'வேகஸ்’ நரம்பு வேலை செய்வது அதிகமாகும். 'காஸ்டிரின்’ ஹார்மோன் சுரப்பும் அதிகமாகும். இதனால் சுரக்கும் அமிலமும் சமன்படுத்தப்படாத நிலையில் மிகுந்துபோகும். இந்த மாதிரி தேவைக்கு அதிகமாக மிகுந்துபோகும் அமிலம்தான் குடலில் புண்ணை ஏற்படுத்துகிறது. இதுதான் வயிற்றுப் புண் உருவாகும் கதை!

இப்படிக்கு வயிறு! - 17

இந்த நேரத்தில் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். எத்தகைய பொருளையும் ஜீரணிக்கக் காரணமாக இருக்கும் அமிலங்களும் ஜீரண நீரும், இரைப்பையையும் குடலையுமே அரித்துவிட வாய்ப்பு உண்டு அல்லவா என்று.

இயற்கை எல்லாவற்றுக்கும் ஒருவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அப்படி ஆபத்து ஏதும் நடந்துவிடாமல் தடுக்கவே குடலில் அரிப்பு எதிர்ப்புப் பொருளான கோழைச் சத்து இருக்கிறது. இரைப்பை மற்றும் குடலின் உட்பகுதியில் உள்ள பட்டுபோன்ற மிருதுவான மியூகோஸா (Mucosa) என்னும் சவ்வில் இருந்து சுரக்கும் இந்தக் கோழைச் சத்துதான் அமிலங்கள் மற்றும் ஜீரண நீரிடம் இருந்து இரைப்பை மற்றும் குடல் பகுதிகளைக் காப்பாற்றுகின்றது.

சிலருக்கு இயற்கையாகவே அமிலமும் ஜீரண நீரும் இயல்பைவிட இரு மடங்கு அதிகமாகச் சுரக்கும். குறிப்பாகப் பசி, மிதமான உடற்பயிற்சி, வலப்பக்கமாகப் படுத்தல் போன்றவற்றால், ஜீரண நீர் சுரப்பு அதிகரிக்கின்றது. அதுபோலவே துயரம், கடினமான உடற்பயிற்சி, வலி முதலியவற்றால், ஜீரண நீர் சுரப்பு குறைகிறது. சிலருக்குப் பித்த நீர் சுரப்பு அதிகமாவதினாலும், தலைவலி, உடல்வலிக்காக உட்கொள்ளும் 'ஆஸ்பிரின்’ போன்ற மருந்துகளின் காரணமாகவும் மியூகஸ் என்னும் காரச் சத்து உள்ள திரவத்தின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இரைப்பையின் வீக்கத்தாலும் இரைப்பையின் ரத்த ஓட்டம் குறைவதினாலும் அல்லது தடைபடுவதினாலும் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இந்த நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அமிலங்களால் குடலின் உட்பகுதி அரிக்கப்பட்டு புண் உண்டாகும்.

இது மாதிரியான பிரச்னைகள் மட்டும் அல்ல... பாரம்பரியமும் குடற்புண்ணுக்கு முக்கியக் காரணம். ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகள், ரசாயன மாற்றங்கள், தொற்று நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல் மாற்றங்கள், வைட்டமின் பற்றாக்குறை, அடிபடுதல், நரம்பியல் நோய்கள், புகைபிடித்தல் முதலியனவும் வயிற்றுப் புண் உண்டாகக் காரணங்கள். அவசரம் அவசரமாக உணவு உண்ணுதலும் குடற்புண்ணுக்குக் காரணமாகலாம். மிளகாய், மிளகு, மசாலா சாமான்கள், சூடான உணவு, காபி, டீ ஆகியவை மனிதனின் உடல்வாகை ஒட்டிக் குடற்புண்ணை ஏற்படுத்தும். ஆனாலும், இதுவே காரணம் என எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வயிற்றுப் புண் பிரச்னைக்குக் காரணமே நம் மனமும் மூளையும்தான் என்கிற கருத்தும் மருத்துவ உலகில் அழுத்தமாக வைக்கப்படுகிறது. குடற்புண் ஏற்படுவதற்கும் பின் விரிவடைவதற்கும் நாட்பட நிலைப்பதற்கும் மூளைதான் காரணம். அது தானியங்கி நரம்பு மண்டலம் மூலமாகவோ அல்லது நாளமில்லாச் சுரப்பிகள் மூலமாகவோ இந்த நிலையை உண்டாக்குகிறது எனக் கருதப்பட்டது. மூளையின் இத்தகைய செயலுக்குத் தூண்டுகோலாக இருப்பது அக மற்றும் புற மனங்களில் இடையறாது நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களே!

மனிதனின் அன்றாட வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் உருவாகும் உணர்ச்சி மாற்றங்கள், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீர் மற்றும் அமிலம் முதலியவற்றின் அளவை அதிகரிக்கும். மன உணர்ச்சிகள் மூளையைத் தாக்குகின்றன. மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸின் (Hypothalamas) முன்புறம் தூண்டப்படும்போது, 'வேகஸ்’ நரம்பு தூண்டப்படுகின்றது. இதன் காரணமாக இரைப்பையில் சுரக்கும் அமிலம் மற்றும் ஜீரண நீரின் அளவும் அதிகரிக்கின்றது. ஹைப்போதலாமஸின் பின்புறம் உணர்ச்சிகளால் தாக்கப்பட்டால், நாளமில்லாச் சுரப்பிகளில் முதன்மையான 'பிட்யூட்ரி’யின் முன்புறம் தூண்டப்பட்டு, அட்ரினல் சுரப்பியின் இயக்கம் அதிகரித்து அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இதனால், ஜீரண நீரும் அமிலமும் இரைப்பை மற்றும் குடலில் அதிகமாகச் சுரக்கத் தொடங்கும். இதுதான் வயிற்றுப் புண் ஏற்பட முக்கியக் காரணம். அல்சருக்கு மனம்தான் காரணம் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? மனசு நல்லா இருந்தா மத்ததெல்லாம் நல்லா இருக்கும்னு நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!

- மெல்வேன்... சொல்வேன்...