மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இப்படிக்கு வயிறு! - 18

இப்படிக்கு வயிறு! - 18

இப்படிக்கு வயிறு! - 18
##~##

யிற்றுப்புண் எதனால் ஏற்படுகிறது என்கிற காரணத்தை அறிவது கடினம். ஆனால், நமக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலமாகக் கண்டறியலாம். சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். சில நிமிடங்களிலேயே அது சரியாகிவிடும். 'அப்பாடா... நிம்மதி’ எனப் பெருமூச்சு விட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயே மறுபடியும் வலி வரும். இப்படி விட்டுவிட்டுத் தோன்றும் வயிற்று வலிதான் வயிற்றுப்புண்ணுக்கான  முக்கியமான அறிகுறி. சிலருக்கு நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிறு கனமாக இருப்பது போன்று உணர்தல், குமட்டல், வாந்தி, கருமலம் வெளியாதல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். 

மார்புக் கூட்டின் அடிப்பகுதியின் மையத்திலோ அல்லது சற்று வலப்புறமாகவோ தோன்றும் வலியைக் கவனத்தில்கொள்ள வேண்டும். பின்முதுகின் மேற்பகுதியில் தோள்பட்டை எலும்புகளுக்கு இடைப்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டால், அது குடற்புண் சிறுகுடலின் பின்பகுதியைத் துளைத்து, அதன் அருகில் இருக்கும் கணையம் முதலிய உறுப்புகளைத் தாக்கியதன் அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி நெருப்புப் பட்டதுபோல் எரிச்சலாகவும் அரித்துத் தின்பது போலவும் நோயாளிக்குத் தர்மசங்கடத்தைக் கொடுக்கும்.

இப்படிக்கு வயிறு! - 18

வயிற்று வலி பெரும்பாலும் நாம் உண்ணும் உணவையே சார்ந்திருக்கும். நோயாளியின் உடல் அமைப்பைப் பொருத்தும் கால நேர மாறுபாடுகளைப் பொருத்தும் இந்த வலி வேறுபடும். இரைப்பைப் புண்ணாக இருந்தால் வலி எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். குறிப்பாக உணவு உண்ட ஒரு மணி நேரத்துக்குள் இந்த வலி தோன்றும். முன் சிறுகுடல் புண்ணாக இருந்தால் வயிற்று வலி உணவு வேளைக்குச் சற்று முன்பாகத் தோன்றும். உணவு உண்டால் இந்த வலி அடங்கிவிடும். இரவில் படுத்த பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து இந்த வலி தோன்றும். இந்த வலி பெரும்பாலும் வாந்தி எடுக்கும்போது குறையும். அமிலத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் மருந்து, மாத்திரைகளினாலும், உரிய சிகிச்சைப் பெறுவதாலும் இந்த வலி பெருமளவு குறையும். சிலருக்குச் சொல்லிவைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வயிற்றுவலி ஏற்படும். சிலருக்குக் வயிற்றுப்புண்ணால் அடிக்கடி வாந்தி வரலாம். குடற்புண்ணால் முன்சிறுகுடலில் ஏற்படும் அடைப்புதான் இதற்குக் காரணம். 12 மணி நேரத்துக்கு முன் உண்ட உணவுகூட இத்தகைய வாந்தியில் வெளியே வரும்; கூடவே துர்நாற்றமடிக்கும். இந்த மாதிரியான நோயாளிகளின் வயிறு வீங்கிக் காணப்படும். சில  நேரங்களில் இவர்களுக்குப் பேதி அல்லது மலச்சிக்கலும் தோன்றும். உடல் மெலிந்து காணப்படும்.

மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் உள்ளவர்களுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடனடியாக வயிற்றுப்புண் பாதிப்புக்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். ஏழு வருடங்களுக்கு முன்புவரை வயிற்றுப்புண் வந்தாலே அதற்குக் காரணம் மதுவும் புகையும்தான் எனக் கருதப்பட்டது. ஆனால், இந்த இரு பழக்கங்களும் இல்லாத சிலருக்கும் வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டபோதுதான் மருத்துவ உலகம் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது.

பாரிமார்ஷல் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் வயிற்றுப்புண் உள்ளவர்களின் இரைப்பையில் இருந்து எடுக்கப்படும் திசுவினை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து பார்த்தார். வயிற்றுப்புண் பாதிப்புக்கு ஆளானவர்களின் இரைப்பையில்  ஒரு புதிய வகைக் கிருமி இருந்ததை முதன் முறையாகக் கண்டறிந்தார். அது மட்டும் அல்ல... அந்தக் கிருமிதான் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய அவர் செய்த அடுத்த காரியம் என்ன தெரியுமா? அந்தக் கிருமிகளை ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்த்து, அவற்றைத் தானே உட்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடியே உடனே அவருக்கு வயிற்றுப்புண் உண்டானது. அதற்குரிய மருந்துகளை ஒரு வாரம் சாப்பிட்டு அந்தக் கிருமிகளை முற்றிலுமாக அழிக்க முடியும் என்பதையும் நிரூபித்தார். (பாரிமார்ஷல் அவரது சக மருத்துவர் வாரன் இருவருக்கும் 2005-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.) எச். பைலோரி என்பதுதான் அந்தக் கிருமி.

ஜப்பானில், வெமுரா என்ற மருத்துவர் செப்டம்பர் 13, 2001-ல் எச்.பைலோரி கிருமிக்கும் இரைப்பையில் ஏற்படும் புற்றுநோய்க்கும் நிச்சயமான தொடர்பு உள்ளதைக் கண்டுப்பிடித்தார். வெமுரா சொன்ன கருத்தை உலகச் சுகாதார நிறுவனம் 1994-வது வருடமே அங்கீகரித்தது. அதில், 'எச். பைலோரி ஒரு சிறப்புத் தன்மை உடைய புற்றுநோயை உண்டாக்கும் கிருமி’ என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இரைப்பையில் இந்த எச். பைலோரி இருப்பதாகக் கண்டறியப்பட்ட 80 சதவிகித மக்கள் எந்தவித நோய்த் தாக்குதலுக்கும் ஆளாகாதவர்கள். அதனால், இந்த  பாக்டீரியா தீங்கு  விளைவிக்காத, இரைப்பையின் அமில மழையில் குடியிருக்கும் பாக்டீரியா என்று ஆராய்ச்சியாளர்களும் நம்பினார்கள்.

மேற்கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் எச். பைலோரி கிருமிகள் சிலருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதும், சிலருக்கு நீண்ட நாள் புண்களை  உண்டாக்குவதும், இன்னும் சிலருக்குப் புற்றுநோயை உண்டாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் இந்தக் கிருமி சிலருக்கு மட்டுமே புண்ணையும், சிலருக்கு மட்டுமே புற்றுநோயையும் உண்டாக்கி மற்றவர்களிடத்தில் அமைதியாக இருக்கிறது என்பதை மருத்துவ உலகம் இன்றளவும் கண்டறிய முடியவில்லை. விதியா... விசித்திரமா எனப் புரியாமல் மருத்துவ உலகத்தையே திகைக்கவைத்த பெருமை எச். பைலோரி கிருமிக்கு உண்டு!

- மெல்வேன்... சொல்வேன்