Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

ன்னுடைய இத்தனை ஆண்டு கால மருத்துவப் பணியில், நோயாளிகளிடம் நான் அதிகம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையைப் பற்றி இந்த வாரம் பேசலாம் என்று நினைக்கிறேன். மெத்தப் படித்தவர்களும் சரி, படிக்காத பாமரர்களும் சரி... பொதுவாக நிறைய நோயாளிகளிடம் நான் பார்த்து மலைக்கும் விஷயம்... லேகிய வியாபாரிகளிடம் அவர்கள் சிக்கிக்கொண்ட அனுபவங்கள்.

ஒரு தம்பதிக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைக்கு முதல் காரணமே - செக்ஸில் ஈடுபடும்போது அல்லது செக்ஸ் உணர்வு வரும்போது அவரவர் உடலில் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றித் தெரியாததுதான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். பசி, தூக்கத்தைப் போல செக்ஸும் இயல்பானது. பசி வந்தால் சாப்பிடுவதைப் போல, தூக்கம் வந்தால் தூங்குவதுபோல செக்ஸ் உணர்வு வந்தால், அதைத் தம்பதிகள் இணக்கமாக அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சூழ்நிலை, மனநிலை போன்றவற்றைச் சார்ந்தே தங்களுடைய செக்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே பல தம்பதிகளின் வழக்கம். இவர்கள் யாருமே பசியைத் தள்ளிப்போடுவது tஇல்லை. தூக்கத்தைத் தள்ளிப்போடுவது இல்லை. ஆனால், மிகச் சுலபமாக செக்ஸ் தேவைகளைத் தள்ளிவைத்துவிடுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், பசியும் தூக்கமும் ஏறக்குறைய உடல் சம்பந்தப்பட்ட விஷயம். செக்ஸ் தேவை என்பது மனம் மற்றும் உடம்பு இரண்டோடும் தொடர்புடையது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில்தான் பலர் அறியாமை இருளில் இருக்கிறார்கள்.

குட் நைட்!

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே... 'செக்ஸ் பிரச்னைக்கு முதல் காரணமே, செக்ஸ்பற்றிய முழுமையான அறிவின்மைதான்’ என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பலருக்கும், 'காலங்காலமாக நம் முன்னோர்கள் எந்தக் கல்விக்கூடத்தில் போய் கலவியைப் படித்தார்கள்? சொல்லாமல் தெரிவதுதானே மன்மதக் கலை? இதில் போய் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது?’ என்பன போன்ற எண்ணங்கள் உண்டு. இன்னும் சிலர் 'விலங்குகள்கூடத்தான் செக்ஸில் ஈடுபடுகின்றன. அவை எல்லாம் எங்கே போய் இதைத் தெரிந்துகொள்கின்றன?’ என்றுகூட கேள்விச் சாட்டையை வீசுவார்கள். எல்லாமே அறியாமைதான்!

உதாரணமாக, விலங்குகளையும் மனிதர்களையும் எது வேறுபடுத்துகிறது? நமக்குள்ள பகுத்தறிவு. இல்லையா? விலங்குகளின் நடவடிக்கைகளில் இருந்து பண்படும்போதுதானே மனித குணம் பெறுகிறோம்? ஒரு சண்டையை இரு விலங்குகளைப் போல மனிதர்களாகிய நாம் அணுகுவது இல்லை. காரணம், நாம் பெறும் அறிவு. ஆனால், செக்ஸை மட்டும் ஏன் விலங்குகளைப் போல அணுக முற்படுகிறோம்? விலங்குகளைப் போலவே நாமும் நடந்துகொண்டால், அப்புறம் நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? ஆக, நிச்சயம் செக்ஸைப் பற்றிய அறிவு எல்லோருக்குமே அவசியமானதாகிறது.

செக்ஸ் பிரச்னைகளுக்காக டாக்டரை அணுகுவது சரி என்பதை ஏற்றுக்கொண்டாயிற்று. எப்படி அணுகுவது?

நிச்சயம் உங்கள் துணையுடன் அணுகுவதே நல்லது.

என்னைப் பார்க்கப் புதிதாக வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் தனியாகத்தான் வருவார்கள். எனக்கு என்று இல்லை. பல டாக்டர்களுக்கும் இதே அனுபவம்தான். டாக்டரைப் பார்த்து, தன்னுடைய பிரச்னையைத் தீர்த்துகொள்ளத் துடிப்பார்கள். தன்னுடைய பிரச்னை தன்னுடைய துணைக்குத் தெரிந்துவிடக் கூடாது; ஆனால், சரியாகிவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அவர்க ளுடைய பிரச்னைகளைப் பார்த்தால், பெரும்பாலும் கணவன் - மனைவி இருவர் சம்பந்தப்பட்ட விஷயமாகவே இருக்கும். செக்ஸ் என்பதே இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்தானே? அப்புறம், பிரச்னை மட்டும் எப்படித் தனியாக வரும்? உதாரணமாக, விந்து முந்தும் பிரச்னையோடு ஓர் ஆண் வருகி றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நினைத்துக்கொள்ளலாம், பிரச்னை தன்னுடையது என்று. ஆனால், மனரீதியாக அவருடைய மனைவி உருவாக் கிய பதற்றமே அவருடைய பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். மனைவியுடன் வந்தால், அவரிடம் நிதானமாக அணுக வேண்டிய அவசியத்தை உணர்த்தி இருவருக்கும் ஆலோசனை சொல்லிப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். தனியாக வந்தால்? அதனால்தான், தகுதியான மருத்துவர்கள் தம்பதியாக வரச் சொல்வார்கள். நம்மவர்களோ தனியாகச் செல்வதை விரும்புபவர்கள். விளைவு? லேகிய மருத்துவர்கள்!

இந்த லேகிய மருத்துவர்கள் கொடுக்கும் கண்ட கண்ட மருந்துகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதுகூட இரண்டாம்பட்சக் கோளாறுதான். தங்கள் சுயநலத்துக்காக செக்ஸைப் பற்றி அவர்கள் கிளப்பிவிடும் அபிப்பிராயங்கள் இருக்கின்றனவே... அவற்றை அப்படியே உள்வாங்கிக்கொண்டு நோயாளிகள் திரும்புவதுதான் பிரதானக் கோளாறு!

- இடைவேளை...